இந்தியாவில் பெண்களுக்கு எதிரான குற்றம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அந்தவகையில் தற்போது மீண்டும் ஒரு திடுக்கிடும் சம்பவம் நடைபெற்றுள்ளது. ஒரு பழங்குடியின பெண் ஒருவர் 9 பேர் சேர்ந்து தாக்கி துன்புறுத்தி நிர்வாணப்படுத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடக மாநிலம் தக்ஷின கன்னடா பகுதியின் குரிபாலா கிராமத்தில் கடந்த 19ஆம் தேதி பெண் ஒருவர் தாக்கப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தியது. இதைத் தொடர்ந்து இந்தச் சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
இந்தச் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண் ஒரு பழங்குடியினத்தைச் சேர்ந்த 35 வயது மதிக்கதக்க பெண் என்பது தெரியவந்தது. அவர் அளித்த புகாரில், “தன்னை 9 பேர் கொண்ட கும்பல் ஒன்று நடு ரோட்டில் துன்புறுத்தி ஆடைகளை கிழித்து நிர்வாணப்படுத்தி அதை வீடியோ எடுத்தனர்” எனத் தெரிவித்துள்ளார்.
அவர் அளித்த புகாரின் பெயரில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்போது பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. அதன்படி பழங்குடியின பெண் தன்னுடைய குடும்பத்துடன் ஒரு அரசாங்க நிலத்தில் வசத்து வந்துள்ளதாக தெரிகிறது. அந்த இடம் தொடர்பாக பிரச்னை ஏற்பட்டுள்ளது. அப்போது பழங்குடியின பெண்ணின் குடும்பத்தை அப்பகுதியைச் சேர்ந்த 9 பேர் மிரட்டியதுடன் குடும்பத்துடன் அவர்களை துன்புறுத்தியுள்ளதாக கூறப்படுகிறது. அத்துடன் குடும்பத்துடன் அந்த இடத்தை விட்டு வெளியேறவில்லை என்றால் கொலை செய்துவிடுவதாக அக்கும்பல் மிரட்டியுள்ளதாக தெரியவந்துள்ளது.
இந்தச் சம்பவம் தொடர்பாக அந்த கிராமத்தைச் சேர்ந்த சந்தீப்(30), சந்தோஷ்(29), குலாபி (55), சுகுனா(30), குஷூமா (38), லோக்கையா (55), அணில் (35), லலிதா (40), சென்ன கேசவா(40) ஆகிய 9 பேர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அவர்களை கைது செய்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்