கர்நாடக மாநில சட்டமன்ற உறுப்பினர் மாடல் விருபாக்ஷப்பாவின் மகன் லோக் ஆயுக்தா அதிகாரிகளால் கைது செய்யப்பட்டிருக்கிறார். ரூபாய் 40 லட்சம் லஞ்சம் வாங்கியதாக பாஜக எம்.எல்.ஏ. மகன் பிரசாந்த் குமார் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது. லோக்ஆயுக்தா தரப்பு ஆதாரங்களின்படி, பெங்களூரு நீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் வாரியத்தின் (BWSSB) தலைமை கணக்கு அதிகாரியான பிரசாந்த் குமார், அரசுக்கு சொந்தமான கர்நாடகா சோப்ஸ் அண்ட் டிடர்ஜெண்ட்ஸ் லிமிடெட் (KSDL) என்ற பிராண்டு உருவாக்கும் மைசூர் சாண்டல் சோப் அலுவலகத்தில் இருந்து கைது செய்யப்பட்டார்.தாவங்கரே மாவட்டம் சன்னகிரி தொகுதி எம்எல்ஏவான விருபாக்ஷப்பா, கேஎஸ்டிஎல் தலைவராக உள்ளார்.
பிரசாந்த் குமார் கைது செய்யப்பட்ட நிலையில் கே.எஸ்.டி.எல் அலுவலகத்தில் இருந்து குறைந்தது மூன்று பைகள் ரொக்கம் கண்டுபிடிக்கப்பட்டது என்று வட்டாரங்கள் தெரிவித்தன. 2008 பேட்ச் கர்நாடக அரசு அதிகாரியான பிரசாந்த் குமார், சோப்பு மற்றும் இதர பொருட்கள் தயாரிப்பதற்குத் தேவையான மூலப்பொருட்களை வாங்க ஒப்பந்தம் செய்வதற்காக ஒப்பந்தக்காரரிடமிருந்து லஞ்சம் வாங்கும்போது பிடிபட்டார்.
ஒரு வாரத்திற்கு முன்பு லோக் ஆயுக்தாவை அணுகிய ஒப்பந்ததாரர் தன்னிடம் பிரசாந்த் குமார் ரூபாய் 81 லட்சம் கேட்டதாக கூறியுள்ளார். பின்னர் அவரை ஒரு பொறி வைத்துப் பிடிக்கத் திட்டம் தீட்டப்பட்டது.
"கேஎஸ்டிஎல் தலைவர் விருபாட்ஷப்பா சார்பில் மூலப்பொருட்கள் கொள்முதலுக்காக லஞ்சப் பணம் பெறப்பட்டது. மாலை 6.45 மணிக்கு திட்டத்தை செயல்படுத்தினோம். பணம் பெற்றதாகக் குற்றம்சாட்டப்பட்ட கேஎஸ்டிஎல் தலைவர் மற்றும் அவரது மகன் இருவரும் பிடிபட்டனர்" என்று மூத்த லோக் ஆயுக்தா அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.