சென்னையில் தொடர்ந்து ஒன்பது மாதங்களாக பெட்ரோல், டீசல் விலை மாற்றமின்றி விற்பனையாகி வருவது வாகன ஓட்டிகளை நிம்மதியில் ஆழ்த்தியுள்ளது.
இந்தியா மட்டுமில்லாது உலகமே எரிபொருளை மைய்யமாகக் கொண்டு தான் இயங்கி வருகிறது. இன்னும் முழுமையான மின்சார சக்தியில் செயல்படும் அளவிற்கு உலக நாடுகள் தங்களை உயர்த்திக் கொள்ளவில்லை. அதிலும் குறிப்பாக இந்தியா போன்ற மூன்றாம் உலக நாடுகள் மின்சார உற்பத்தியில் இன்னும் தனக்கு தேவையான அளவிலான மின்சாரத்தினை உற்பத்தி செய்யும் அளவிற்கு உயரவில்லை. அதிலும், இந்தியா பெட்ரோல் டீசல் சம்பந்தமான பொருட்களை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்து வருவதால், முற்றிலுமான மின்மயமான நாட்டினை நோக்கி வெகு விரைவில் தன்னை நகர்த்திக் கொள்ளும் என எதிர்பார்க்கலாம்.
சாதாராண மக்கள் வைத்திருக்கும் வாகனங்கள் தொடங்கி அரசு நடத்தும் பொது போக்குவரத்து வரை என பெரும்பாலான வாகனங்கள் பெட்ரோல், டீசல் ஆகியவறில் இயங்கி வருவதால், பெட்ரோல் டீசல் விலை உயர்வு மக்களின் அன்றாட வாழ்க்கையில் பெரும் மாற்றத்தினை ஏற்படுத்தும். எரிபொருட்களின் விலை உயர்வு என்பது மக்களின் அன்றாட அத்தியாவசியப் பொருட்களின் மீதான விலை உயர்வில் பிரதிபலிக்கும் என்பதால், மாநில அரசுகள் அதிலும் குறிப்பாக பாஜக ஆளாத மாநில அரசுகளே பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்து வந்தன.
9 மாதங்களை கடந்தும் மாறாத விலை
கொரோனா வைரஸ் தொற்றால் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கால் பொதுமக்கள் மிகப்பெரிய பொருளாதார பாதிப்பை சந்தித்தனர். இதனை கருத்தில் கொண்டு 2021 ஆம் ஆண்டு நவம்பர் 4 ஆம் தேதி மத்திய அரசால் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ. 5ம், டீசல் விலை ரூ.10ம் குறைக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டது. அன்றைய தினம் தமிழ்நாட்டில் லிட்டர் பெட்ரோல் ரூ 101.40க்கும் டீசல் விலை ரூ 91.43க்கும் விற்பனையானது.
அதன்பின்னர் 5 மாதங்கள் கழித்து கடந்த ஆண்டு மே மாதம் 22 ஆம் தேதி பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாற்றம் ஏற்பட்டது. அப்போது கலால் வரி குறைப்பால் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூபாய்க்கு 8ம், டீசல் விலை ரூபாய்க்கு 6ம் குறைந்தது. இந்தசூழலில் பெட்ரோல், டீசல் விலை 286வது நாளாக தொடர்ந்து விலை மாற்றமின்றி விற்பனை செய்யப்படுகிறது.
அதன்படி இன்று (மார்ச் 3) ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.102.63க்கும், டீசல் விலை லிட்டருக்கு 94.24 ரூபாய்க்கும் விற்பனையாகிறது. முன்னதாக எரிபொருள் விலை உயர்வால் பால், டீ, காய்கறிகள், இதர உணவுப் பொருள்கள் உள்ளிட்ட அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலை தாறுமாறாக ஏறியது. இச்சூழலில், விலை மாற்றமின்றி பெட்ரோல், டீசல் விலை கிட்டதட்ட 9 மாதங்களை கடந்தது மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
எத்தனால் கலந்த பெட்ரோல்
கடந்த 2018 ஆம் ஆண்டில் மத்திய அரசு அறிவித்த 'தேசிய உயிரி எரிபொருள் கொள்கை 2030ஆம் ஆண்டுக்குள் பெட்ரோலில் 20 விழுக்காடு எத்தனாலைக் கலந்து விற்க இலக்கு நிர்ணயித்திருந்தது. ஆனால், அந்த இலக்கு தற்போது ஐந்து ஆண்டுகளுக்கு முன்பாக 2025 ஆம் ஆண்டு என மாற்றியமைக்கப்பட்டது.
இயற்கை எரிவாயுத்துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி, ”இருபது சதவீதம் எத்தனால் கலந்த பெட்ரோல் டிசம்பர் அல்லது ஜனவரி முதல் நாட்டில் கிடைக்கும்” என தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், "எத்தனால் உற்பத்தியை நாங்கள் தொடர்ந்து ஆய்வு செய்து வருகிறோம். ஏப்ரல் 2023க்கு முன்னதாக டிசம்பர் அல்லது ஜனவரியில் 20 சதவீதம் கலப்பு எரிபொருள் சந்தைக்கு வரும் என்று நான் நம்புகிறேன்" என் கூறினார்.
நெகிழ்வான எரிபொருள் வாகனங்கள் (கலப்பு எரிபொருளில் இயங்கும் வாகனங்கள்) கிடைக்கும் பிரேசிலை உதாரணமாக மேற்கோள் காட்டி பேசிய ஹர்தீப் சிங் பூரி, "நுகர்வோர் விருப்பப்படி எத்தனால் அல்லது பெட்ரோலை எடுத்துக் கொள்ளலாம். இது அரசாங்கத்தின் இறுதி இலக்காக இருக்கும்.
இருப்பினும், அந்த நிலையை அடைய, சில தொழில்நுட்ப அம்சங்கள் உள்ளன. அதற்கான, பணிகள் நடந்து வருகின்றன. எத்தனால் கலப்படம் தொடர்பாக ஆட்டோமொபைல் உற்பத்தியாளர்களுடன் ஒரு முக்கிய சந்திப்பை நடத்த உள்ளோம். பெட்ரோலில் 20 சதவிகிதம் எத்தனால் கலப்பதை அடைவதற்கான இலக்கு தேதியை 2025ஆம் ஆண்டுக்கு ஐந்து ஆண்டுகளுக்குள் இந்தியா முன்னெடுத்துள்ளது.
பெட்ரோலில் 20 சதவீதம் எத்தனால் கலப்பதற்கு, நமது நாட்டிற்கு 1,000 கோடி லிட்டர் கொள்ளளவு தேவைப்படுகிறது. 450 கோடி லிட்டர் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. 400 கோடி லிட்டருக்கு டெண்டர் விடப்பட்டுள்ளது. 20 சதவிகித கலப்பிற்கான போதுமான எத்தனால் கைவசம் உள்ளது. 2025ஆம் ஆண்டுக்குள் நாட்டில் விற்பனை செய்யப்படும் அனைத்து பெட்ரோலிலும் 20 சதவீதம் எத்தனால் இருக்க வேண்டும் என இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது" எனத் தெரிவித்தார்.