கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் பகுதியை சேர்ந்தவர் ரதீஷ்குமார்(35). இவர் ஆரல்வாய் மொழியில் உள்ள இஎஸ்ஐ மருந்தகத்தில் உதவியாளராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு கடந்த ஓர் ஆண்டுக்கு முன் திருமணம் நடந்த நிலையில் தற்போது இவரது மனைவி நிறைமாத கர்பிணியாக உள்ளார். இந்நிலையில் நேற்று வழக்கம் போல் ரதீஷ்க்குமார் காலையில் பணிக்கு வந்துள்ளார். இந்நிலையில் போலீசாரின் அவசர எண் 100 க்கு பெண் ஒருவர் தொடர்பு கொண்டு ஆரல்வாய்மொழி இ.எஸ்.ஐ., ஊழியர் ரதீஷ்குமாரை கொலை செய்ததாகவும் தொடர்ந்து அங்கேயே இருப்பதாகவும் கூறியுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த போலீசார் ஆரல்வாய்மொழி காவல்நிலையத்திற்கு தகவல் தெரிவித்து, சம்பவ இடத்தில் சென்று பார்த்த போது ரத்த வெள்ளத்தில் கத்திக்குத்து காயங்களுடன் ரதீஸ்குமார் பிணமாக கிடந்துள்ளார். அருகில் பெண் ஒருவர் ரத்த கறையுடன் அழுதபடி இருந்துள்ளார். அவரை கைது செய்து காவல் நிலையம் அழைத்து சென்ற போலீசார், ரதீஷ்குமார் உடலை மீட்டு ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 


மேலும் இக்கொலை குறித்து விசாரணை மேற்கொண்டதில், ரத்தகறையுடன் நின்ற பெண் மணவாளக்குறிச்சியை சேர்ந்த மேக்ஸன் என்பவர் மனைவி ஷீபா (36). இவருக்கு இரண்டு குழந்தைகளும் உள்ளனர். இந்நிலையில் கடந்த 2013 ம் ஆண்டு இரண்டாவது குழந்தை பிறந்த போது இவர் நாகர்கோவில் பகுதியில் உள்ள இ.எஸ்.ஐ., மருந்தகத்திற்கு மருந்து வாங்க சென்றுள்ளார் அப்போது, அங்கு உதவியாளராக பணிபுரிந்த ரதீஷ்குமாருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. 




இதன் பின்பு நெருக்கமாக பழக துவங்கிய நிலையில், கணவரை விவாகரத்து செய்ய கூறி ரதீஷ்குமார் பலமுறை வற்புறுத்தி வந்துள்ளார். இதனால் கடந்த 2019 ம் ஆண்டு ஷீபா தனது கணவர் மேக்சனை விவாகரத்து செய்துள்ளார். அதன் பின்பு நாகர்கோவிலில் உள்ள விடுதியில் தங்கி வேலைக்கு சென்று வந்துள்ளார். ஆனால் ரதீஷ் குமார் ஷீபா வை திருமணம் செய்யாமல் 2021 ம் ஆண்டு வேறொரு பெண்ணை திருமணம் செய்துள்ளார். 


இதனால் ஆத்திரமடைந்த ஷீபா பலமுறை ரதீஷ்குமாரை தொடர்பு கொண்ட போதும் அவரிடம் தானும் விவாகரத்து செய்து விடுவேன். அதன்பின் நாம் இருவரும் திருமணம் செய்து கொள்ளலாம் என கூறி வந்துள்ளார். இந்நிலையில் ரதீஷ்குமாரின் மனைவி கர்ப்பமாகியதை தெரிந்து கொண்ட ஷீபா தொடர்ந்து வாக்குவாதம் செய்து வந்துள்ளார். இதனால் அலட்சியபடுத்தியதால் கோபத்துடன் இருந்துள்ளார். இந்நிலையில் நேற்று ரதிஷ்குமார் மருத்தகத்தில் இருந்த போது அவரை பார்க்க பேருந்தில் வந்திறங்கிய ஷீபா, அவரை மருந்தகத்தில் பார்த்து பேசியுள்ளார். அதன் பின் மயக்க மாத்திரை கலந்த உணவை ரதீஷ்குமாருக்கு தன் கையால் பரிமாறியுள்ளார்.




இதில் ரதீஷ்குமார் மயக்கமடைந்த போது மறைத்து வைத்திருந்த கத்தியால் சரமாரியாக குத்தி கொலை செய்துவிட்டு அங்கேயே, அவரது சடலத்தை பார்த்து கதறி அழுதுள்ளார். பின்னர் அவசர எண் 100 க்கு தொடர்பு கொண்டு கொலை குறித்து தகவல் தெரிவித்துள்ளார். அதன் பின் ஆரல்வாய்மொழி போலீசாரிடம் சரணடைந்துள்ளார் என தெரியவந்துள்ளது. இக்கொலை சம்பவம் குறித்து ஆரல்வாய்மொழி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.