காருக்குள் கழுத்தறுத்து கொலை:


குமரி மாவட்டம் களியக்காவிளை தேசிய நெடுஞ்சாலையில் ஒற்றாமரம் பகுதி உள்ளது. இது குமரி- கேரள எல்லைப்பகுதியாகும். இங்குள்ள பெட்ரோல் பங்க் அருகே சாலையோரம் நேற்று முன் தினம் இரவு 11.30 மணியளவில் கேரள பதிவெண் கொண்ட  சொகுசு கார் ஒன்று வெகு நேரமாக நின்று உள்ளது.  காருக்குள்  டிரைவர் இருக்கையில் இரத்த வெள்ளத்தில் ஒருவர் பிணமாக கிடந்துள்ளார். இதனை கண்ட அப்பகுதியினர் காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர். தகவலறிந்த களியக்காவிளை காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பார்வையிட்டனர், தொடர்ந்து கழுத்து அறுக்கப்பட்டு இரத்த வெள்ளத்தில் ஒருவர் கொடூரமான முறையில் இறந்து கிடப்பதை கண்ட காவல்துறையினர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என முடிவு செய்தனர்.


ஆதாரில் அடையாளம் தெரிந்தது:


தொடர்ந்து   அந்த  காரில் இருந்து கைப்பற்றப்பட்ட ஆதாரில் திருவனந்தபுரம் பகுதியை சேர்ந்த தீபு , தந்தை பெயர் சோமன் , திலீப் பவன், விவேக் நகர், கைனம், பாப்பனம்கோடு P.O., திருவனந்தபுரம் என்ற முகவரியில் உள்ள ஆதார் அட்டை, ஓட்டுநர் உரிமம் போன்ற ஆதாரங்கள் கிடைத்துள்ளது. இதனைக்கொண்டு கொலை செய்யப்பட்டவர் கேரளாவை சேர்ந்தவர் என தெரிய வந்தது. தொடர்ந்து அப்பகுதியில் உள்ள CCTV காட்சிகளையும் கைப்பற்றிய போலீசார் அதில்  பதிவான காட்சிகளைக் கொண்டு விசாரணையை துவக்கி உள்ளனர். குறிப்பாக கொலைக்கு பின் காரில் இருந்து ஒருவர் இறங்கி நடந்து செல்வது போன்ற காட்சிகளையும் கைப்பற்றி உள்ளனர். தொடர்ந்து ஆதாரில் உள்ள முகவரிக்கு சென்று உறவினர்களிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் படுகொலை செய்யப்பட்ட நபர் தீபு என்றும் அவருக்கு ஒரு மனைவியும், 2 மகன்களும் இருப்பது தெரிய வந்தது. மேலும் மனைவி  பாலக்காடு பகுதியில் உள்ள அரசு பள்ளி ஒன்றில் ஆசிரியராக பணியாற்றி வருவதும் தெரிய வந்தது.


தொழிலதிபரான தீபு:


தீபு திருவனந்தபுரத்தில் கல்குவாரி நடத்தி வந்துள்ளார். அதோடு பொக்லைன் எந்திரங்கள் வாங்கி விற்கும் தொழிலும் செய்து வந்துள்ளார். இந்த  நிலையில் தான் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு கல்குவாரி மூடப்பட்டுள்ளது. இதனையடுத்து கல்குவாரியை மீண்டும் திறப்பதற்கான பணிகளை மேற்கொண்டு வந்துள்ளார். இதற்கிடையில் புதிய பொக்லைன் எந்திரம் வாங்குவதற்காக தீபு நேற்று முன் தினம் 10 லட்சம் பணத்துடன் காரில் மதுரைக்கு புறப்பட்டுள்ளார். அப்போது அவர் செல்லும் வழியில் தான் குமரி மாவட்டத்தில் காருக்குள் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளார் என்பது தெரிய வந்துள்ளது.


கொலை குறித்து பகீர் தகவல்:


இதனிடையே காரில் 10 லட்சம் பணத்துடன் புறப்பட்ட தீபு வரும் வழியில் ஒருவரை காரில் ஏற்றி வந்ததாக தெரிகிறது.. அதோடு தீபு வைத்திருந்த 10 லட்சம் பணத்தையும் காணவில்லை. எனவே தீபு ஏற்றி வந்த நபர் அவரிடம் பணம் இருப்பதை தெரிந்து கொண்டு அவரை கொலை செய்து விட்டு பணத்தை எடுத்து சென்றிருக்கலாம் என காவல்துறை விசாரணையில் தெரிய வந்துள்ளது. அதோடு கொலை நடந்த இடத்தில் கிடந்த தடயங்கள் மற்றும் ஒருவர்  காரிலிருந்து இறங்கி செல்லும் காட்சிகள் ஆகியவற்றை கைப்பற்றிய போலீசார் இந்த கொடூர கொலையில் ஈடுபட்ட மர்ம நபர் யார் என்பது குறித்தும் தீவிரமாக  விசாரணை மேற்கொண்டு வருவதோடு அவரை வலைவீசி தேடி வருகின்றனர். பணத்திற்காக தொழிலதிபர் ஒருவர் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பையும் உறவினர்களிடையே சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.