கன்னியாகுமரி மாவட்டம் இரணியல் அருகே உள்ள காரங்காட்டில் வரலாற்று சிறப்புமிக்க பழமையான புனித ஞானப்பிரகாசியார் ஆலயம் உள்ளது. கோட்டாறு புனித சவேரியார் பேராலயத்திற்கு பிறகு கட்டப்பட்ட முதன்மையான ஆலயங்களில் இதுவும் ஒன்றாகும். இந்த ஆலயத்தில் ஆண்டு தோறும் ஜூன் மாதம் 10 நாட்கள் திருவிழா நடைபெறும். இந்த திருவிழாவிற்கு குமரி மாவட்டம் மட்டுமின்றி கேரளா உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் பக்தர்கள் வந்து கலந்து கொள்வர். இந்த ஆண்டு 246-வது ஆண்டு திருவிழா கடந்த 14-ம் தேதி திருக்கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவிழாவையொட்டி வழக்கம் போல காரங்காட்டின் பல்வேறு பகுதிகளில் மின்விளக்குகள் மற்றும் ஒலிபெருக்கிகள் வைக்கப்பட்டு இருந்தது. இதில் மேற்கு தெருவில் கட்டப்பட்டிருந்த ஒலிப்பெருக்கி மற்றும் மின் விளக்குகளை கடந்த 15ம் தேதி இரவு சமூக விரோத கும்பல் ஒன்று தீ வைத்து எரித்து இருந்தது. இது சம்பந்தமான புகார் மீது போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.
இந்த நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு இரவு திருவிழா திருப்பலி முடிந்து புனிதரின் திருத்தேர் பவனி நடந்தது. இதில் அப்பகுதி மக்கள் திரளாக கலந்து கொண்டனர். அப்போது அதிகாலை நேரத்தில் திடீரென காரங்காடு மேற்கு தெருவில் கட்டப்பட்டு இருந்த மின் விளக்குகள் அனைத்தும் அணைந்துள்ளன. என்னவென்று பார்த்தபோது முகமூடி அணிந்த சமூக விரோத கும்பல் மேற்குதெரு பகுதியில் உள்ள ஒலிபெருக்கி, மின் விளக்குகள் மற்றும் சிசிடிவி கேமராக்களை அடித்து உடைத்து இருந்தது தெரியவந்தது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் இரணியல் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த இரணியல் போலீசார் அடித்து உடைக்கப்பட்ட ஒலிப்பெருக்கி, மின் விளக்குகள் மற்றும் சிசிடிவி கேமரா ஆகியவற்றை கைப்பற்றி விசாரணை நடத்தினர். குளச்சல் ஏஎஸ்பி பிரவீன் கௌதம், தடய அறிவியல் ஆய்வக அதிகாரி மினிட்டா, தனிப்படை சப். இன்ஸ்பெக்டர் ஜாண்போஸ்கோ உள்ளிட்ட அதிகாரிகளும் சம்பவ இடத்தை நேரில் பார்வையிட்டனர்.
தொடர்ந்து அங்கு பல்வேறு பகுதிகளில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகள் மற்றும் செல்போன் டவர் பதிவு உள்ளிட்டவைகளை கைப்பற்றி போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையில் இந்த சம்பவத்தில் ஈடுபட்டது மொட்டவிளையை சேர்ந்த தங்கவேல் மகன் தனம் (32), ரங்கசாமி மகன் கோபிகுமார் (37), ராஜேந்திரன் மகன் மகேஷ் (22) என தெரிய வந்தது. இதை அடுத்து தீவிர தேடுதலில் ஈடுபட்ட தனிப்படை போலீசார் அப்பகுதியில் பதுங்கி இருந்த 3 பேரையும் நேற்று கைது செய்தனர். இதில் தனம் என்பவருக்கு முதல் சம்பவத்தில் தொடர்பு இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். இது குறித்து அவர்களிடம் தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். திருவிழாவில் கட்டப்பட்ட மின்விளக்குகள், ஒலிபெருக்கி, சிசிடிவி கேமரா ஆகியவை அடித்து நொறுக்கப்பட்ட சம்பவத்தில் தற்போது 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.