வெளிநாட்டில் உள்ள கணவருடன் வீடியோ காலில் பேசியபோது ஏற்பட்ட தகராறில் இளம் பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 


கன்னியாகுமரி மாவட்டம் பெரிய விளையை சேர்ந்தவர் செந்தில். இவர் சிங்கப்பூரில் வேலை பார்த்து வருகிறார். இவருடைய மனைவி ஞானபாக்கியபாய் (வயது 33). இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். ஞானபாக்கியபாய் கொட்டாரம் பேரூராட்சியில் தூய்மை இந்தியா திட்டத்தில் பரப்புரையாளராக பணியாற்றி வந்தார்.


வெளிநாட்டில் உள்ள கணவரிடம் ஞானபாக்கியபாய் அடிக்கடி செல்போனில் வீடியோ கால் மூலம் பேசுவது வழக்கம். இந்தநிலையில் நேற்று முன் தினம் இரவு வழக்கம் போல் ஞான பாக்கியபாய் வீடியோ கால் மூலம் கணவரிடம் பேசி வந்துள்ளார். அப்போது திடீரென அவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டு வாக்குவாதம் முற்றியுள்ளது.


இதனால் கோபமடைந்த ஞான பாக்கியபாய் உடனே செல்போன் இணைப்பை துண்டித்து சென்றுள்ளார். பின்னர் செந்தில், மனைவியிடம் பேச மீண்டும், மீண்டும் செல்போனில் தொடர்பு கொண்டுள்ளார். ஆனால் அவர் எடுத்து பேசாததால் பதற்றமடைந்த செந்தில் பக்கத்து வீட்டில் உள்ள உறவினர்களுக்கு செல்போனில் தொடர்பு கொண்டு நடந்த விவரத்தை கூறியுள்ளார்.


தற்கொலை


இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த உறவினர்கள் உடனே ஞான பாக்கியபாய் வீட்டுக்கு சென்று பார்வையிட்டுள்ளனர். அங்கு கதவு உள்பக்கமாக பூட்டப்பட்டு இருந்தது. கதவை தட்டியும் திறக்காததால், அங்கிருந்த உறவினர்கள் கதவை உடைத்துக் கொண்டு உள்ளே சென்று பார்த்தனர்.


அப்போது ஞானபாக்கியபாய் தூக்கில் பிணமாக தொங்கியதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். வீடியோ காலில் கணவரிடம் பேசியபோது ஏற்பட்ட தகராறு காரணமாக அவர் தற்கொலை செய்து கொண்டது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது. இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


தமிழகம் இத்தனையாவது இடமா தற்கொலையில்..? 


கடந்த 5 ஆண்டுகளில் அதிக தற்கொலைகள் நடைபெறும் மாநிலங்களின் பட்டியலில் தொடர்ந்து மகாராஷ்டிரா முதலிடத்தில் உள்ளது. இரண்டாம் இடத்தில் தமிழகமும், மூன்றாவது இடத்தில் மேற்கு வங்கமும் இருந்து வருகின்றது.


தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பள்ளி மாணவர்கள் தற்கொலை சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. கள்ளக்குறிச்சி மாணவி ஸ்ரீமதி, திருவள்ளூர் மாணவி சரளா ஆகியோர் தற்கொலை சம்பவங்கள் தமிழகத்தையே அதிர வைத்தன. தொடர்ந்து மாமல்லப்புரம், விக்கிரவாண்டி, மேட்டூர் உள்ளிட்ட பல மாவட்டங்களில் பள்ளி மாணவர்கள் தற்கொலைக்கு முயற்சிகளும் பலருக்கும் அதிர்ச்சியை  ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.


எந்த ஒரு பிரச்னைக்கு தற்கொலை தீர்வாகாது. மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் உண்டானாலோ, அதில் இருந்து மீண்டு மாற்றம் ஏற்பட கீழ்காணும் சேவை எண்களுக்கு தொடர்பு கொண்டு பேசவும்.


மாநில உதவிமையம் : 104


சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -24640050


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண