காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீ பெரும்புதூர் அருகே ஆட்டோவில் சென்ற ரவுடியை வழிமறித்து நாட்டு வெடிகுண்டு வீசி சரமாரியாக வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து ஸ்ரீபெரும்புதூர் போலீசார் தீவிர விசாரணை

 

ஆட்டோவில் வீடு திரும்பிய ரவுடி

 

காஞ்சிபுரம் ( Kanchipuram News ) : சென்னை நசரத்பேட்டை அடுத்த திருமழிசை பகுதியைச் சேர்ந்தவர் பிரபல ரவுடி எபினேசர் (25). இவர் மீது நசரத்பேட்டை, மாங்காடு ,பூந்தமல்லி உள்ளிட்ட பல்வேறு காவல் நிலையங்களில் கொலை, கொலை முயற்சி, போன்ற குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளது.  இந்த நிலையில் பணி நிமித்தமாக திருவள்ளூர் அடுத்த கடம்பத்தூர் வரை சென்று விட்டு ஆட்டோவில் சென்னை நோக்கி பேரம்பாக்கம் தண்டலம் நெடுஞ்சாலையில் வந்து கொண்டிருந்தார். 

 

ஆட்டோ மீது மோதிய காரணங்கள்

 

அப்போது காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீ பெரும்புதூர் அடுத்த மண்ணூர் பகுதியை வந்தபோது எதிர் திசையில் வந்த கார் ஆட்டோ மீது மோதியது. இதையடுத்து காரில் இருந்து இறங்கிய மர்ம கும்பல் நாட்டு வெடிகுண்டுகளை வீசியது. பின்னர் சூதாரித்துக் கொண்ட எபினேசர் ஆட்டோவில் இருந்து இறங்கி ஓடிய போது அவரை விரட்டிச் சென்று கத்தி வீச்சருவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்கள் மூலம் சரமாரியாக வெட்டி கொலை செய்து விட்டு அங்கிருந்து தப்பி சென்றது.

 

தனிப்படை அமைத்த போலீசார்

 

பின்னர் தகவல் அறிந்து நிகழ்வு இடத்திற்கு வந்த ஸ்ரீபெரும்புதூர் டிஎஸ்பி சந்திரதாசன் தலைமையிலான போலீசார் உயிரிழந்த கிடந்த ரவுடியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். மேலும் கொலை சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த ஸ்ரீபெரும்புதூர் போலீசார் கொலை செய்துவிட்டு தப்பி சென்ற மர்மகும்பலை தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர்.

 

ஸ்ரீபெரும்புதூரில் தொடரும் கொலைச் சம்பவங்கள்

 

ஸ்ரீபெரும்புதூர் சுற்றுவட்டார பகுதிகளில் செயல்படும் தனியார் ஆலைகளில் இருந்து வெளியேற்றப்படும் ஸ்கிராப் எனப்படும் இரும்பு கழிவுகளை ஒப்பந்தம் எடுப்பதில் அரசியல் பிரமுகர்கள், ரவுடிகள் இடையே தொழில் போட்டி ஏற்பட்டு தொடர்ந்து கொலை சம்பவங்கள் அரங்கேறி வருகிறது. கொலை சம்பவங்களை தடுப்பதற்காக குற்ற வழக்குகளில் சம்பந்தப்பட்ட 100க்கும் மேற்பட்ட குற்றவாளிகளை போலீசார் சிறையில் அடைத்துள்ள நிலையில் மீண்டும் வெடிகுண்டு வீசி ரவுடி ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் இப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

 

இதுகுறித்து காவல்துறையினர் தரப்பில் தொடர்பு கொண்டு விசாரித்த பொழுது :  கொலை செய்யப்பட்ட நபர் மீது ஏற்கனவே குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன.  இந்த கொலை சம்பவம் ஆனது, நன்கு திட்டமிட்டு  கொலை செய்யப்பட்டு இருப்பது தெரியவந்துள்ளது.   கொலை சம்பவத்தில்,  ஈடுபட்டவர்கள் தப்பித்த வழியில் இருக்கும் சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி விசாரணையை துவங்கி உள்ளோம்.  மேலும் முன்பகையின் காரணமாக இந்த கொலை நடைபெற்றதா?  அல்லது தொழில் போட்டியின் காரணமாக இந்த கொலை  நடைபெற்றதாஎன்ற கோணத்திலும் விசாரணை மேற்கொண்டு வருகிறோம்  .  விசாரணையின் முடிவில் முழு விவரம் தெரிய வரும் என தெரிவித்தனர்