ஜம்மு காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு நீக்கியதற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் பல்வேறு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் தலைமையிலான அரசியல் சாசன அமர்வு, கடந்த 16 நாள்களாக, இந்த மனுக்களை விசாரித்து வந்தது.


ஜம்மு காஷ்மீர் வழக்கு:


வழக்கை விசாரித்த வந்த அமர்வில் இந்திய தலைமை நீதிபதியை தவிர்த்து, நீதிபதிகள் சஞ்சய் கிஷன் கவுல், சஞ்சீவ் கண்ணா, பி.ஆர். கவாய் மற்றும் சூர்யா காந்த் ஆகியோர் இடம்பெற்றிருந்தனர். சிறப்பு அந்தஸ்து ரத்துக்கு எதிராக மூத்த வழக்கறிஞர்கள் கபில் சிபல், கோபால் சுப்ரமணியம், ராஜீவ் தவான், ஜாபர் ஷா, துஷ்யந்த் தவே உள்ளிட்ட பலர், தங்களின் வாதங்களை எடுத்து வைத்தனர்.


அதேபோல, மத்திய அரசின் சார்பில் தலைமை வழக்கறிஞர் (அட்டர்னி ஜெனரல்) ஆர்.வெங்கடரமணி, சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, மூத்த வழக்கறிஞர்கள் ஹரிஷ் சால்வே, ராகேஷ் திவேதி, வி.கிரி உள்ளிட்ட பலர் தங்களின் வாதங்களை எடுத்து வைத்தனர்.


அனல் பறந்த விவாதம்:


ஜம்மு காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்த மத்திய அரசின் நடவடிக்கை அரசியலமைப்பின்படி செல்லுபடியாகுமா? ஜம்மு காஷ்மீரை இரண்டு மாநிலங்களாக பிரிக்க மத்திய அரசு கொண்டு வந்த ஜம்மு காஷ்மீர் மறுசீரமைப்புச் சட்டம் செல்லுபடியாகுமா? கடந்த 2018ஆம் ஆண்டு, ஜூன் 20ஆம் தேதி விதிக்கப்பட்ட ஆளுநர் ஆட்சி, கடந்த 2018ஆம் ஆண்டு, டிசம்பர் 19ஆம் தேதி விதிக்கப்பட்ட குடியரசு தலைவர் ஆட்சி உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து கடந்த 16 நாள்களாக விசாரணை மேற்கொள்ளப்பட்டது.


இரு தரப்பு வாதமும் நிறைவடைந்துள்ள நிலையில், ஜம்மு காஷ்மீர் அரசியலமைப்பு சட்டப்பிரிவு 370 தொடர்பான வழக்கின் தீர்ப்பை உச்ச நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.


என்ன முடிவு எடுக்கப்போகிறது உச்ச நீதிமன்றம்?


இன்றைய விசாரணையின்போது, "மனுதாரர்கள் அல்லது பிரதிவாதிகள் சார்பாக ஆஜராகும் வழக்கறிஞர் யாராவது எழுத்துப்பூர்வமாக தங்கள் வாதத்தை தாக்கல் செய்ய விரும்பினால், அடுத்த மூன்று நாட்களில் அவ்வாறு செய்யலாம். இரண்டு பக்கங்களுக்கு மேல் வாதத்தை நீடிக்கக்கூடாது" என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.


11ஆம் நாள் விசாரணையில், சட்டப்பிரிவு 35ஏ குறித்து பேசிய இந்திய தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட், "இந்த குறிப்பிட்ட சட்டப்பிரிவு, மற்ற இந்தியர்களுக்கான அடிப்படை உரிமைகளை மறுத்துள்ளது" என தெரிவித்திருந்தார். அதே நேரத்தில், சட்டப்பிரிவு 370 நீக்கப்பட்டு, முழு மாநில அந்தஸ்தை திரும்பபெற்றபோது கூட்டாட்சி தத்துவம் பின்பற்றபட்டதா? என மத்திர அரசை நோக்கி கேள்வி எழுப்பினார்.


12ஆம் நாள் விசாரணையில், "ஒரு மாநிலத்தை யூனியன் பிரதேசமாக மாற்ற முடியுமா? ஒரு மாநிலத்திலிருந்து யூனியன் பிரதேசத்தை பிரிக்க முடியுமா? தேர்தல் எப்போது நடத்தப்படும்" என அடுக்கடுக்கான கேள்விகளை இந்திய தலைமை நீதிபதி எழுப்பினார்.