இந்த ஆண்டு இறுதியில் இந்தியாவில் நடைபெறவுள்ள ஐசிசி உலகக் கோப்பை 2023 போட்டிக்கு பிறகு ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறப்போவதாக தென்னாப்பிரிக்கா விக்கெட் கீப்பர் குயின்டன் டி காக் அறிவித்தது தென்னாப்பிரிக்க கிரிக்கெட் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 


ஒருநாள் உலகக் கோப்பைக்கான 15 பேர் கொண்ட அணியை தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் அணி அறிவித்த சில நிமிடங்களிலேயே 30 வயதேயான டி காக்கிடம் இருந்து இந்த அறிவிப்பு வந்தது. குயின்டன் டி காக் தென்னாப்பிரிக்காவுக்காக 54 டெஸ்ட் மற்றும் 80 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார். கடந்த 2023ம் ஆண்டு தென்னாப்பிரிக்கா அணிக்காக ஒருநாள் போட்டிகளில் அறிமுகமான டி காக், இதுவரை 140 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 17 சதங்கள் மற்றும் அரைசதங்களுடன் 44.85 சராசரியுடன் 5966 ரன்கள் எடுத்துள்ளார். 


டி காக்கின் இந்த எதிர்பாராத அறிவிப்பால் கிரிக்கெட் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்த நிலையில், அவர் தென்னாப்பிரிக்கா அணிக்காக சர்வதேச டி20 போட்டிகளிலும், உலகம் முழுவதும் நடைபெறும் ஒரு சில லீக் போட்டிகளில் விளையாடுவார் என்று தெரிகிறது. டி காக் கடந்த 2021ம் ஆண்டு திடீரென டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். அப்போது அவர், 54 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 38.82 சராசரியில் 6 சதங்களுடன் 3300 ரன்கள் எடுத்திருந்தார். 






டிக் காக் அடுத்ததாக டிசம்பர் 10 முதல் 21ம் தேதி வரை இந்தியாவுக்கு எதிரான தென்னாப்பிரிக்காவின் T20I தொடரிலும், அதனை தொடர்ந்து, பிக் பாஷ் லீக்கில் அறிமுகமாக உள்ளார். சமீபத்தில் இவர், மெல்போர்ன் ரெனிகேட்ஸ் அணிக்காக கையெழுத்திட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. 


இதுகுறித்து தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் போர்டு இயக்குனர் எனோச் க்வீ வெளியிட்ட அறிக்கையில், “டி காக் அதிரடி பேட்டிங்கிற்கு பெயர் போனவர். பல ஆண்டுகளாக தென்னாப்பிரிக்கா அணியின் முக்கிய வீரராக இருந்தார். சில காலம் கேப்டனாகவும் அணியை வழிநடத்தினார். இது ஒரு சிலருக்கே கிடைக்கக்கூடிய கௌரவம். 


ஒருநாள் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறும் அவரது முடிவை நாங்கள் ஏற்றுகொள்கிறோம், மேலும் பல ஆண்டுகளாக அவர் செய்த சேவைக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறோம். அவர் எதிர்காலத்தில் நலமுடன் வாழ வேண்டும் என்பதே எங்கள் விருப்பம். தொடர்ந்து, டி காக் டி20ஐ கிரிக்கெட்டில் தென்னாப்பிரிக்கா அணிக்காக விளையாடுவதை காண ஆவலுடன் காத்திருக்கிறோம்” என்று குறிப்பிட்டு இருந்தார். 


உலகக் கோப்பைக்கான தென்னாப்பிரிக்க அணி 


டெம்பா பவுமா (கேப்டன்), ஜெரால்ட் கோட்ஸி, குயின்டன் டி காக், ரீசா ஹென்ட்ரிக்ஸ், மார்கோ ஜான்சன், ஹென்ரிச் கிளாசென், சிசண்டா மாகலா, கேசவ் மகராஜ், ஐடன் மார்க்ராம், டேவிட் மில்லர், லுங்கி என்கிடி, அன்ரிச் நார்ட்ஜே, ககிசோ ரபாடா, டப்ரைஸ் ஷாம்வான்சி