தமிழ்நாட்டில் போதைப் பொருள் புழக்கம், விற்பனை உள்ளிட்டவற்றைக் கட்டுப்படுத்த தமிழ்நாடு அரசின் உத்தரவின்படி, பல்வேறு நடவடிக்கைகளை காவல்துறை எடுத்து வருகிறது. குறிப்பாக தமிழ்நாட்டில் கஞ்சா விற்பனையை கட்டுக்குள் கொண்டு வர தமிழ்நாடு அரசு மற்றும் போலீசார் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இருந்தாலும், ஆந்திரா உயர்த்த மாநிலங்களில் இருந்து கஞ்சா கடத்திவரப்பட்டு, விற்பனை செய்வது, பயன்படுத்துவது போன்ற குற்றச் செயல்கள் அவ்வப்போது நடப்பதும், அதில் போலீசார் நடவடிக்கை எடுப்பதும் தொடர்ந்து அரங்கேறி வருகிறது. குறிப்பாக சென்னை புறநகர் மாவட்டங்களாக இருக்கக்கூடிய செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் ஆகிய பகுதிகளில் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களின் பயன்பாடு அதிகரித்து வருகிறது.
தீவிர சோதனை
தமிழ்நாட்டிற்குள் தடை செய்யப்பட்ட கஞ்சா, குட்கா உள்ளிட்ட போதைப்பொருட்கள் பயன்பாட்டை கட்டுப்படுத்த தமிழ்நாடு போலீசார் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் ஆந்திரா, கேரளா, கர்நாடகா, பாண்டிச்சேரி போன்ற அண்டை மாநில எல்லைகளில் சோதனைச்சாவடிகள் அமைக்கப்பட்டு கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன.
அண்டை மாநிலங்களில் இருந்து வரும் வாகனங்கள் முழுமையான சோதனைக்கு உட்படுத்தி தமிழ்நாட்டிற்குள் அனுமதிக்கப்பட்டு வரப்படுகிறது. அந்த வகையில் காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட டாஸ்மாக் கடை பகுதியில் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டு இருந்தனர்.
4 கிலோ கஞ்சா
அப்போது சந்தேகத்துக்கு இடமான வகையில் வந்த 5 பேரிடம் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் அவர்களிடம் இருந்து தமிழ்நாடு அரசால் தடை செய்யப்பட்ட நான்கு கிலோ கஞ்சா இருப்பதைக் கண்டு உத்தரமேரூர் போலீசார் பறிமுதல் செய்தனர். 4 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டதில் சென்னை அடுத்த வெட்டுவாங்கேனி கற்பக விநாயகர் நகர் பகுதியில் சேர்ந்த நிர்மல் குமார் (24) ஒடிசா மாநிலத்திற்கு சென்று நான்கு கிலோ கஞ்சாவை விற்பனைக்காக வாங்கி வந்தது தெரிய வந்தது.
ஒடிசாவில் இருந்து வந்த கஞ்சா
மேலும் போலீசார் விசாரணையில் ஒடிசா சென்று கஞ்சாவை வாங்கி வந்த நிர்மல் குமார் மீது ஏற்கனவே, கஞ்சா விற்பனை குறித்து செங்கல்பட்டு மாவட்டம் படாளம் காவல் நிலையத்தில் வழக்கு ஒன்று உள்ளது. மேலும் போலீசார் விசாரணையில் கஞ்சா விற்பனைக்காக ஒடிசா மாநிலத்தில் இருந்து, 4 கிலோ கஞ்சாவை வாங்கி வந்தது. பின்னர் நண்பர்களாகிய செங்கல்பட்டு மாவட்டம் மொரப்பாக்கம் பகுதியை சேர்ந்த விக்னேஷ் (23) , செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் பகுதியை சேர்ந்த தரணி (23), சென்னை கானாத்தூர் பகுதியைச் சேர்ந்த சின்ராசு (24) , சென்னை ஈஞ்சம்பாக்கத்தை சேர்ந்த ராகுல் (28) ஆகிய நான்கு பேரை கைது செய்தனர்.
வாட்ஸ் அப் மூலம் நடைபெற்ற விற்பனை
மேலும் போலீசார் விசாரணையில் ஓடிஸா மாநிலத்தில் கஞ்சா குறைந்த விலையில் கிடைக்கும் என்பதால் நிர்மல் குமார், சென்னையில் இருந்து ரயில் மூலம் ஒடிசா சென்று கஞ்சா வாங்கி வந்து காஞ்சிபுரம், சென்னை உள்ளிட்ட பகுதிகளில் நண்பர்களுடன் இணைந்து விற்பனை செய்து வந்தது போலீசார் விசாரணையில் தெரியவந்தது. வாட்ஸ் அப் மூலம் கஞ்சா ஆர்டர்கள் பெற்று, விற்பனை மேற்கொண்டு வந்ததும் தெரியவந்தது.
கஞ்சா விற்பனை தொடர்பாக கைது செய்யப்பட்ட 5 பேரிடமிருந்து கஞ்சா விற்பனைக்கு பயன்படுத்திய ஆட்டோ இருசக்கர வாகனம் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டு, கைது செய்யப்பட்ட 5 பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.