காஞ்சிபுரம் மாவட்டம் ஒரகடம் பகுதியில் அரசு மதுபான கடை செயல்பட்டு வருகிறது. இந்த அரசு மதுபான கடையில் வாரணாசி பகுதியை சேர்ந்த துளசிதாஸ் என்பவரும், நத்தாநல்லூர் பகுதியைச் சார்ந்த ராம் என்பவரும் விற்பனையாளராக பணிபுரிந்து வருகின்றனர்.கடந்த மாதம் 4ஆம் தேதி இரவு 9 மணி அளவில் விற்பனையாளர்கள் இருவரும் அரசு மதுபானக் கடையில் விற்பனையை முடித்துவிட்டு கடையை பூட்டிவிட்டு வீட்டிற்கு கிளம்பியுள்ளனர்.

 


 

அப்போது எதிர்பாராத விதமாக, அரசு மதுபானக்கடை பின்புறம் உள்ள மது அருந்தும் கூடத்தில் நிறுத்தி வைத்திருந்த இருசக்கர வாகனத்தை எடுக்கச் சென்றபோது மறைந்திருந்த மர்ம நபர்கள் சிலர் துளசிதாஸ், ராம் ஆகிய இருவரிடமும் மதுபான கடையின் விற்பனை பணத்தை கேட்டு மிரட்டி பயங்கர ஆயுதங்களால் தாக்கி காயப்படுத்தி உள்ளனர். மர்ம நபர்கள் ஆயுதங்களால் தாக்கியதில் துளசிதாஸ் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்துள்ளார். மற்றொரு பணியாளரான ராம் காயப்பட்ட நிலையில் அங்கிருந்து தப்பி ஓடி உள்ளார். இதுகுறித்து தகவலறிந்த வந்த ஒரகடம் போலீசார் காயத்துடன் இருந்த ராமை மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். உயிரிழந்த துளசிதாஸின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

 


 

முதலில் கத்தி உட்பட ஆயுதங்களால் தான் குத்திக் கொலை செய்யப்பட்டிருப்பார்கள் என போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர். கடந்த  மாதம் 10 ஆம் தேதி திடீர் திருப்பமாக ராம் என்பவரின் உடலிலிருந்து துப்பாக்கி தோட்டா எடுக்கப்பட்டது. சம்பவத்தின் போது காயமடைந்த இருந்தாராம் சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் மேல் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்ற போது அவருடைய உடலில் துப்பாக்கி குண்டு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

 


 

இதனையடுத்து போலீசார் விசாரணை மிகத் தீவிரமாக மேற்கொண்டனர். சாட்சியங்கள் எதுவும் இல்லாததால், ஸ்ரீபெரும்புதூர் சுற்றுவட்டார பகுதியில் இருக்கும் அனைத்து வீடுகள் மற்றும் வடமாநில இளைஞர்கள் தங்குமிடங்களில் தீவிர விசாரணை மேற்கொண்டனர். கிடைக்கப்பட்ட துப்பாக்கி குண்டு வடமாநில நாட்டு துப்பாக்கி என்பதால் காவல்துறையினர், தங்களுடைய விசாரணையை வடமாநில கொள்ளையர்களை நோக்கி நகர்த்தினார். இதற்காக 3 தனிப்படைகளை அமைத்து போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். 

 


 

இந்நிலையில்தான் கடந்த மாதம் பத்தாம் தேதி, ஸ்ரீபெரும்புதூர் சுங்கச்சாவடி அருகே மூதாட்டியிடம் துப்பாக்கி முனையில் 5 சவரன் நகை பறித்து தப்பி சென்ற 2 வடமாநில கொள்ளையர்கள் ஸ்ரீபெரும்புதூர் அருகே உள்ள ஏரியில் மறைந்திருந்தனர். போலீசார் அவர்களை இரவும் பகலுமாக தேடி 11 ஆம் தேதி அவர்களில் ஒருவரை கைது செய்ய சென்றபொழுது போலீசாரை தாக்கினர். அப்போது போலீஸ் அப்பொழுது காவல்துறையினர் தற்காப்புக்காக சுட்டதில் சம்பவ இடத்திலேயே ஒருவர் உயிர் இழந்தார் மற்றொருவர் அவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்து விசாரணை நடத்தினர். இந்த குற்றவாளிக்கும் டாஸ்மார்க் ஊழியர் கொலைக்கும் சம்பந்தம் இருக்குமா ? என பல கோணங்களில் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். காவல்துறை நடத்திய விசாரணையில் சம்பந்தமில்லை என தெரிய வரவே மீண்டும் காவல் துறையினர் தங்களுடைய தீவிர தேடுதல் வேட்டையை துவங்கினர்.

 


 

டாஸ்மாக் வளாகத்தில் இருந்த சிசிடிவி காட்சிகளை தொடர்ந்து காவல்துறையினர் ஆய்வு செய்து வந்தனர். அதனடிப்படையில் யூகத்தின் அடிப்படையில் இவர்கள் கொலை செய்திருக்கலாம் என போலீசார் சந்தேகித்து அவர்களை தேடியபோது அவர் மாயமாகி இருந்தது தெரியவந்தது. நிச்சயம் இந்த வழக்கிற்கும் அவர்களுக்கும் தொடர்பு இருக்கும் என காவல்துறையினர் சம்பந்தப்பட்டவர்களிடம் விசாரணை மேற்கொள்ள திட்டமிட்டனர். அப்பொழுது பீகார் மாநிலத்தை சேர்ந்த இருவர் இந்த கொலை சம்பவத்தை திட்டமிட்டு செய்தது தெரியவந்தது. இதனால் 15க்கும் மேற்பட்ட காவல்துறையினர் ரகசியமாக பீகாருக்கு சென்றனர். அப்பொழுது முக்கிய குற்றவாளியான பீகார் மாநிலத்தை சேர்ந்த யுகேஷ் குமார் (25) என்பவரை காவல்துறையினர் கைது செய்தனர். மற்றொரு குற்றவாளி காவல் துறையில் தீவிரமாக தேடி வருகின்றனர். மற்றொரு குற்றவாளியும் காவல்துறையினர் நடத்திய விசாரணையில் அவர் மீது ஏற்கனவே பீகாரில் பல வழக்குகள் நிலுவையில் இருப்பது தெரியவந்தது.

 


 

யுகேஷ் குமார் காவல்துறையினரிடம் அளித்த வாக்குமூலத்தில், சுமார் 4 மாதங்களுக்கு முன் மது வாங்குவதற்காக ஒரகடம் டாஸ்மாக் கடைக்கு யுகேஷ் குமார் சென்றுள்ளார். அப்போது டாஸ்மார்க் கடையில் கூடுதல் விலைக்கு மதுவை துளசிதாஸ் விற்றதாகவும், ஏன் அதிக விலையில் விற்கிறார்கள் என கேட்டதற்கு துளசிதாஸ் தகாத வார்த்தைகளில் திட்டியதால் தான் கோபமடைந்து. பீகாரில் உள்ள தன்னுடைய நண்பரின் உதவியை நாடியுள்ளார். இதனையடுத்து யுகேஷ் மற்றும் அவருடைய நண்பர் இருவரும் திட்டமிட்டு இச்சம்பவத்தில் ஈடுபட்டுள்ளனர் என பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.



 

இதுவரை காவல்துறையினர் அந்த நாட்டு துப்பாக்கியை கைப்பற்றவில்லை. சுமார் ஒரு மாதம் கழித்து குற்றவாளியை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தலைமறைவாகி உள்ள மற்றொரு நபரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.