காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் ஒன்றியம் கலியனுர் ஊராட்சி மன்ற தலைவர் வடிவுக்கரசி இவரது கணவர் ஆறுமுகம் (48) கம்யூனிஸ்ட் கட்சியில் மாவட்ட பொறுப்பாளராக உள்ளார். மேலும் ஊத்துக்காடு பகுதியில் செயல்பட்டு வரும் டாஸ்மாக் கடையில் விற்பனையாளராகவும் பணியாற்றி வருகிறார்.



இந்நிலையில் கடந்த  22-ஆம் தேதி  இரவு அவரது மனைவி வடிவுக்கரசிக்கு உடல்நிலை சரியில்லாததால், காஞ்சிபுரத்திலுள்ள ஓர் தனியார் மருத்துவமனைக்கு சென்று வீட்டின் அருகே‌ வந்து கொண்டிருந்தபோது பின்தொடர்ந்து வந்த மாஸ்க் அணிந்த மர்ம நபர்கள் ஆறுமுகத்தை தங்கள் வைத்திருந்த அரிவாளால் கை, தலை, தாடை உள்ளிட்ட பகுதிகளில்‌ சரமாரியாக வெட்டிவிட்டுள்ளனர். அப்போது ஆறுமுகத்தின் அலறல் சத்தத்தினை கேட்டு அக்கம் பக்கத்தினர் வெளியில் வர மர்ம நபர்களை தப்பியோட பின்தொடர்ந்து அப்பகுதி இளைஞர்கள் சிலர் விரட்டி சென்ற நிலையில் மர்ம நபர்கள் தப்பி சென்றுள்ளனர்.



இதை கண்டு அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர் நிலைகுலைந்த நிலையில் இருந்த ஆறுமுகத்தை மீட்டு உடனடியாக காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் அங்கு முதலுதவி அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக சென்னை மியாட் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.



இதனையெடுத்து  காஞ்சிபுரம் உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் ஜூலியர் சீசர்,காவல் ஆய்வாளர்கள் ஜெயக்குமார்,பேசில் பிரேம் ஆனந்த்,சுந்தர்ராஜ் ஆகியோர் சம்பவ இடத்தில் ஆய்வு மேற்கொண்டு அவரது வீட்டிலும் அப்பகுதியிலும் உள்ள சிசிடிவி கேமராக்களின் பதிவுகளை வைத்தும் மர்ம நபர்கள் குறித்து தகவல் சேகரித்து வருகின்றனர். மேலும் இக்கொலை வெறி தாக்குதல் சம்பவம் ஊராட்சி மன்ற தலைவர் தேர்தலில் ஏற்பட்ட முன் விரோதமா அல்லது ஊத்துக்காடு பகுதி டாஸ்மார்க் கடையில் வேலை செய்யும் போது அங்கு ஏதேனும் முன்பகை ஏற்பட்டதன் காரணமாக இந்த சம்பவம் நடைபெற்றதா என்பது குறித்து பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஊராட்சி மன்ற தலைவரின் கணவர் மர்ம நபர்களால் வெட்டப்பட்டது இப்பகுதியில் , பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் , இது குறித்த சிசிடிவி  வீடியோ வெளியாகி பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது 

 




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்