கடன் கொடுத்து வாங்குவதில் எப்போதும் ஒரு வித சிக்கல் ஏற்படுவது வழக்கம். அந்த சிக்கல் ஒரு சில நேரங்களில் கொலை வரை செல்லும் அபாயம் உள்ளது. அப்படி ஒரு சம்பவம் தற்போது நடைபெற்றுள்ளது. தான் கொடுத்த கடனை திருப்பி கேட்ட பெண்ணை அவருடைய உறவினர்கள் தீ வைத்து கொலை செய்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ராஜஸ்தான் மாநிலத்தின் ஜெய்ப்பூர் பகுதியைச் சேர்ந்தவர் அனிதா. இவர் ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். இவர் தன்னுடைய உறவினர்களுக்கு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கடன் கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது. அந்த கடனை அவர் நீண்ட நாட்களாக திரும்பி கேட்டுள்ளதாக தெரிகிறது. இதுகுறித்து அடிக்கடி அனிதா தன்னுடைய உறவினர்களை கேட்டு வந்துள்ளார்.
இதன்காரணமாக ஆத்திரம் அடைந்த அவருடைய உறவினர்கள் கடந்த 10ஆம் தேதி இவரை நேரில் பார்க்க சென்ற போது தீ வைத்துள்ளனர். அவர்கள் வைத்திருந்த எரிப்பொருளை அனிதா மீது ஊற்றி தீ வைத்துள்ளதாக கூறப்படுகிறது. இந்தச் சம்பவத்தை அருகே இருந்தவர்கள் பார்த்து தடுக்காமல் வீடியோ எடுத்து கொண்டிருந்ததாக தெரிகிறது. இந்தச் சம்பவத்தில் பலத்த தீ காயங்களுடன் ஆசிரியை அனிதா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
மருத்துவமனையில் கடந்த ஒரு வார காலமாக சிகிச்சை பெற்று வந்த அனிதா நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த விவகாரம் தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். எனினும் தற்போது வரை இந்த வழக்கில் யாரையும் காவல்துறை கைது செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த வழக்கில் உயிரிழந்த் ஆசிரியை ஒரு பட்டியலினத்தை சேர்ந்தவர் என்று தெரியவந்துள்ளது.
இதற்கிடையே ராஜஸ்தான் மாநிலத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பாக ஒரு பட்டியலின சமூகத்தை சேர்ந்த சிறுவர் ஒருவர் தாக்கப்பட்டு உயிரிழந்தார். அந்த சம்பவம் அங்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதைத் தொடர்ந்து தற்போது மீண்டும் பட்டியலினத்தை சேர்ந்த ஆசிரியை ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த விவகாரம் தொடர்பாக ராஜஸ்தான் மாநில பாஜக தலைவர் சதீஷ் பூனியா, “ராஜஸ்தான் மாநிலத்தில் சமீபத்தில் இதுபோன்று நிறையே சம்பவங்கள் நடைபெறுகின்றன. குற்றவாளிகளுக்கு எந்தவித பயமும் இல்லை. ஏனென்றால் அவர்கள் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படாது என்ற அவர்களுக்கு தெரியும். ராஜஸ்தான் ஒரு நாளைக்கு சராசரியாக 18 பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் மற்றும் 7 கொலைகள் நடைபெற்று வருகின்றன” எனத் தெரிவித்துள்ளார்.
மேலும் ராஜஸ்தான் குற்றச்சம்பவங்கள் தொடர்பாக மத்திய அமைச்சர் கஜேந்திர சேகாவட் கருத்து தெரிவித்துள்ளார். அதில், “பெண்கள், பட்டியலினத்தவர்கள் மற்றும் குழந்தைகள் உள்ளிட்டவர்களுக்கு எதிரான குற்றச்சம்பவங்கள் அதிகம் நடக்கும் மாநிலமாக ராஜஸ்தான் மாறி வருகிறது. நாட்டிலேயே அதிக பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் நடக்கும் பட்டியலில் ராஜஸ்தான் முதலிடத்தில் உள்ளது. அத்துடன் சிறுமிகள் கடத்தப்படும் பட்டியலில் ராஜஸ்தான் இரண்டாவது இடத்தில் உள்ளது” எனக் கூறியுள்ளார்.
மேலும் படிக்க: 'போலி' காவல் நிலையம்.! உண்மை போலீசாக நினைத்து வேலை பார்த்த இருவர்! விசாரணையில் ஷாக் தகவல்கள்!