சேலம் மாவட்டம் காடையாம்பட்டி அருகிலுள்ள ஜோடுகுளி பகுதியைச் சேர்ந்தவர்கள் கடந்த 23 ஆம் தேதி மாலை ஆடுகளை மேய்ப்பதற்காக, வனப்பகுதிக்கு சென்றுள்ளனர். அப்போது அங்குள்ள புலிகுத்தி முனியப்பன் கோயில் அருகே, ஒரு இளம் பெண் சடலம் கிடப்பதை பார்த்து, தீவட்டிப்பட்டி காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில், தீவட்டிப்பட்டி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டனர். பின்னர் சடலத்தை மீட்ட காவல்துறையினர் சடலமாக இருந்த பெண் யார் என்று விசாரணை நடத்தினர். முகம், அடையாளம் தெரியாமல் இருப்பதற்காக சிதைக்கப்பட்டு இருந்தது.


மேலும், அவரது உடல் தீ வைத்து எரிக்கப்பட்டிருந்தது. அடையாளம் தெரியாத பெண்ணின் சரணத்தை காவல்துறையினர் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். சடலத்தின் அருகே, பெண்ணின் உடைகள், செருப்பு மற்றும் தாலிக் கொடி ஆகியவை கிடந்தன. இதனால், அந்த பெண் திருமணமானவர் என்பது உறுதியானது. இது குறித்து ஓமலூர் டிஎஸ்பி சங்கீதா நேரில் விசாரணை நடத்தினார். சம்பவ இடத்திற்கு தடய அறிவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு, தடயங்களை சேகரித்தனர். 


 


இந்நிலையில், தீவட்டிப்பட்டி காவல் நிலையத்தில் கர்நாடக மாநிலம் பெங்களூரு எலக்ட்ரானிக் சிட்டியை சேர்ந்த முரளி கிருஷ்ணா (24) என்பவர், சரண் அடைந்தார். பெங்களூருவில் ஐடி கம்பெனியில் வேலை செய்து வரும் இவர், சேலம் மாவட்டம் ஜலகண்டாபுரத்தைச் சேர்ந்த கோகில வாணி (20) என்பவரை காதலித்துள்ளார். கோகில வாணி சேலம் மாவட்டம் அரியானூர் அருகேயுள்ள தனியார் கல்லூரியில், பி.டெக் பாரா மெடிக்கல் 4வது ஆண்டு படித்து வந்தார். பெற்றோருக்கு தெரியாமல், கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்துள்ளனர். கடந்த 22 ஆம் தேதி கோகில வாணியை பார்ப்பதற்காக, முரளி கிருஷ்ணா பெங்களூருவில் இருந்து சேலம் வந்துள்ளார். அப்போது அவர்களுக்குள் ஏற்பட்ட தகராறில், கோகில வாணியை கொலை செய்து எரித்தது தெரியவந்துள்ளது. பின்னர், பெங்களூருவுக்கு சென்ற முரளி கிருஷ்ணா, நடந்த சம்பவத்தை தனது தாயிடம் கூறியுள்ளார். இதை கேட்டு அதிர்ச்சியடைந்த அவர், உடனடியாக மகனை தீவெட்டிப்பட்டி காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து சரணடைய வைத்துள்ளார்.



காதலித்து திருமணம் செய்து கொண்ட மனைவியை, கொலை செய்ததற்கான காரணம் என்ன? என்றும், இந்த கொலைக்கு வேறு யாராவது உடந்தையாக இருந்தார்களா? என்பது குறித்தும் முரளி கிருஷ்ணாவிடம், தீவட்டிப்பட்டி காவல்துறையினர் விசாரணை நடத்தினர். விசாரணையில், "கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டோம். அப்போது சேலம் பகுதியில் உள்ள மருத்துவக்கல்லூரியில் படித்து வந்த அவர், அவரது பெற்றோர் வீட்டிலேயே இருந்து கல்லூரிக்கு சென்று வந்தார். ஆனால் அலைபாயுதே படத்தில் வருவது போல் நான் கட்டிய தாலியை மறைத்து அவர் வீட்டில் வாழ்ந்து வந்தாலும் என்னுடன் செல்போனில் நாள்தோறும் பேசி வந்தார். போனிலேயே பேசி வந்த நிலையில், சமீபகாலமாக எனது காதல் மனைவியின் பேச்சில் சற்று மாற்றம் தெரிந்தது. அவருடைய வீட்டில் எங்கள் காதல் விவகாரம் தெரிந்து எதிர்ப்பு தெரிவித்ததால் தான் என்னை தவிர்த்து வருகிறார் என்று நினைத்தேன். இது தொடர்பாக அவரிடம் பேசி விளக்கம் கேட்க அவருடைய போனை தொடர்பு கொண்ட போது நம்பர் பிசி, பிசி என்று வந்தது. அப்போது தான் அவர் போனை கட் செய்து என்னை தவிர்த்து வருகிறார் என்பதை உணர்ந்தேன். இதனால் காதல் திருமணம் அவருக்கு பிடிக்காமல் என்னை விட்டு விலகுகிறாரோ என்ற சந்தேகம் ஏற்பட்டது. இதனால் என்னை ஒதுக்கி வரும் எனது காதல் மனைவியை தீர்த்துக்கட்ட முடிவு செய்தேன். சேலம் 5 ரோடு பகுதிக்கு வந்தார். அதற்கு முன்பாக அவரை கொலை செய்யும் நோக்குடன் தண்ணீர் பாட்டிலில் பெட்ரோல் வாங்கி வைத்து கொண்டேன். பின்னர் நாங்கள் இருவரும் ஓமலூர் சுங்கச்சாவடி அருகே உள்ள ஒரு ஓட்டலுக்கு சென்று சாப்பிட்டோம்.


 


அங்கிருந்து மோட்டார் சைக்கிளில் ஜோடுகுளி புலி சாத்து முனியப்பன் கோவில் பின்புறம் உள்ள வனப்பகுதிக்கு சென்றோம். அங்கு எங்கள் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்படவே பேக்கில் வைத்திருந்த மோட்டார் சைக்கிள் ஸ்குரு கழட்டும் கூர்மையான கட்டர் மற்றும் சிறிய அளவிலான கத்தியால் கோகிலவாணியின் கழுத்தில் சரமாரியாக குத்தினேன். பெட்ரோல் ஊற்றி எரித்தேன். இதில் பலத்த காயமடைந்து உயிருக்கு போராடிய அவரை யாருக்கும் அடையாளம் தெரியக்கூடாது என்பதற்காக அவர் முகத்தில் பெட்ரோலை ஊற்றி தீ வைத்து எரித்து விட்டேன். அதன்பிறகு எனது மோட்டார் சைக்கிளில் பெங்களூருவுக்கு சென்று விட்டேன்" என்று கூறியுள்ளார்.