தமிழ்நாடு அரசின் சார்பில் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் கீழ் பெண்களுக்களுக்கு டெபிட் கார்டு வழங்கும் நிகழ்ச்சி சேலத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு இளைஞர் நலம் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டு 500 மகளிருக்கு கலைஞர் உரிமைத் தொகை திட்டத்தின் டெபிட் அட்டைகளை வழங்கினார்.



நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், ”பெண்கள் பொருளாதார சுதந்திரம் அடைய வேண்டும் என்ற உயரிய நோக்கில் கலைஞர் மகளிர் உரிமைத் தொகைத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.இத்திட்டத்தில் தமிழகத்தில் சென்னைக்கு அடுத்த படியாக மாநில அளவில் அதிக பயனாளிகளைக் கொண்ட மாவட்டமாக சேலம் திகழ்கிறது. வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் முற்போக்கான திட்டத்தினை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது. தமிழகத்தை பின்பற்றி கர்நாடகா மற்றும் தெலுங்கானா மாநில அரசுகள் பெண்களுக்கான திட்டத்தை அறிவித்துள்ளன. பெண்களின் வாழ்க்கையை மாற்றும் துருப்புச்சீட்டாக மகளிர் உரிமைத் தொகைத் திட்டம் அமைந்துள்ளது. பெண்ணுரிமை குறித்து தந்தை பெரியார் கண்ட கனவை தமிழக அரசு தொடர்ந்து நிறைவேற்றி வருகிறது. அதற்காக மகளிர் முன்னேற்ற திட்டங்களை திராவிட மாடல் அரசு கொண்டு வந்துள்ளது. மகளிர் முன்னேற்றத்திற்கு தடையாக இருந்து 3 முக்கிய விஷயங்களை முறியடித்து திமுக அரசு திட்டங்களை கொண்டு வந்துள்ளது. கலாசார ரீதியாக ஆண்-பெண் அடிமைத்தனத்தை உடைத்து மகளிர் கல்வி கற்பதற்கும் வேலைவாய்ப்பை பெறுவதற்கும் வாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளது. தந்தையின் சொத்தில் பெண்களுக்கான உரிமையை 30 ஆண்டுகளுக்கு முன்னரே கலைஞர் சட்டம் இயற்றி வாங்கி கொடுத்தார். மூன்றாவது தடையான பொருளாதார தடையை முதலமைச்சர் ஸ்டாலின் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் மூலம் நீக்கியுள்ளார். சிறுமியாக இருக்கும்போது பெற்றோரை, திருமணத்திற்கு பிறகு கணவரை, வயதான பிறகு மகனை எதிர்பார்க்கும் நிலை இனி பெண்களுக்கு இல்லை. பொருளாதார ரீதியில் பெண்களுக்கு முன்னேற்றம் கிடைக்கு மகளிர் உரிமைத் தொகை வழங்கியதைப் போலவே புதுமைப் பெண் திட்டம், இலவச பேருந்து பயணத் திட்டம், காலை நேரங்களில் மகளிர் சிரமப்படுவதைத் தடுக்க மாநிலம் முழுவதும் 17 லட்சம் குழந்தைகளுக்கு காலை உணவுத் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. அனைத்து மகளிர் நலத்திட்டங்களுக்கும் மகுடம் சூட்டியது போல மகளிர் உரிமைத் தொகை திட்டம் அமைந்துள்ளது. பெண்கள் அனைவரும் பொதுவாழ்க்கையில் ஈடுபட வேண்டும். அரசியலுக்கு வர வேண்டும். இன்றைக்கு உள்ளாட்சிப் பொறுப்புகளில் 50 சதவீத இடங்களில் மகளிர் பதவியில் அமர திமுக அரசே காரணம். இன்றைக்கு வாட்ஸ்-அப் –ல் நிறைய தகவல் வருகிறது. அதில் உண்மை எது பொய் எது என பிரித்து பார்த்து பெண்கள் தெரிந்து கொள்ள வேண்டும். உண்மையை விட பொய் செய்திகள் வேகமாக பரவுகின்றன. மகளிர் அனைவரும் அனைத்து விஷயங்களையும் முற்போக்காக பகுத்தறிவுடன் சிந்தித்து பார்த்து செயலாற்ற வேண்டும். அப்போது அவர்களுக்கு பிறக்கும் அனைத்து குழந்தைகளும் பகுத்தறிவுடன் பிறந்து தமிழ்ச்சமுதாயம் முன்னேறிய சமுதாயமாக மாற முடியும். பொருளாதாரத்தில் பெண்கள் முன்னேறுவது நாட்டின் வளர்ச்சிக்கு வழிவகுக்கும். பெண்களுக்காக பல்வேறு திட்டங்களை நிறைவேற்றி வரும் முதல்வரின் தூதுவர்களாக மகளிர் செயலாற்ற வேண்டும்” எனக் கூறினார். 



முன்னதாக நிகழ்ச்சியில் பேசிய நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு, ”மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் விண்ணப்பித்து பணம் கிடைக்கப் பெறாதவர்கள் மீண்டும் விண்ணப்பித்து பெற்றுக் கொள்ளலாம். சட்டப்பேரவைத் தேர்தலின் போது அளித்த அனைத்து வாக்குறுதிகளையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிறைவேற்றியுள்ளார். முதலமைச்சருக்கு நிறைய பணிகள் உள்ள நிலையில் நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்து வருகிறார். மகன் தந்தைக்காற்றும் உதவி போல அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து அரசு மற்றும் கட்சி நிர்வாகத்தை திறம்பட வழிநடத்தி வருகிறார். முதலமைச்சராக கலைஞர் இருந்தபோது ஸ்டாலின செயல்பட்டது போல, தற்போது முதலமைச்சராக ஸ்டாலின் இருக்கும்போது, அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திறம்பட செயலாற்றி வருகிறார். அவருக்கு எப்போதும் உற்ற துணையாக இருப்போம்” என்றார்.