திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அடுத்த கல்விக்குடியை சேர்ந்தவர்கள் ராஜசேகரன் சத்தியபாமா தம்பதியினர். இவர்களுக்கு வெங்கடேசன் என்கின்ற மகன் உள்ளார். வெங்கடேசன் பாபநாசத்தில் ஏசி மெக்கானிக்காக வேலை பார்த்து வருகிறார். ராஜசேகரன் வெளிநாட்டில் ஓட்டுநராக வேலை பார்த்து வரும் நிலையில் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பாக கண்ணில் லென்ஸ் வைப்பதற்காக ஊருக்கு திரும்பி உள்ளார்.


தாயிடம் தினந்தோறும் மதுபோதையில் தொல்லை கொடுத்த தந்தை


இந்நிலையில், ஊருக்கு வந்த ராஜசேகர் தினந்தோறும் மது அருந்திவிட்டு வந்து மனைவி சத்தியபாமாவிடம் தகராறு செய்து, தொல்லை கொடுத்து, அவரை கடும் மன உளைச்சலுக்கு உள்ளாக்கியதாக கூறப்படுகிறது. தினந்தோறும் தனது தந்தை ராஜசேகரன் தாய் சத்தியபாமாவை கொடுமை செய்வதை பார்த்து சகித்துக்கொள்ள முடியாத அவர்களது மகன் வெங்கடேசன் ஒரு கட்டத்தில் ஆத்திரத்தின் உச்சிக்கே சென்றுவிட்டர்.


ஆத்திரத்தின் உச்சிக்கே சென்ற மகன் வெங்கடேஷன்


ஒவ்வொரு முறை தன்னுடைய தாயை அடிப்பது, கெட்ட, கெட்ட வார்த்தைகளில் திட்டுவது என அவரை கொடுமைப்படுத்திய தனது தந்தை ராஜசேகரனை மகன் வெங்கடேசன் கண்டித்துள்ளார். ஆனால், அதற்கும் அடங்காத ராஜசேகர் தொடர்ந்து வெங்கடேஷனின் தாய் சாத்தியபாமாவை டார்ச்சர் செய்து வந்துள்ளார்.


கம்பியால் தந்தையை தாக்கிய வெங்கடேஷன்


ஒரு கட்டத்தில் எல்லை மீறி சென்று அடங்காமல், தன்னுடைய தாயை துன்புறுத்திய ராஜசேகரனை மகன் வெங்கடேசன் தட்டிக் கேட்டுள்ளார். இதில், இருவருக்கும் இடையே கடும் தகராறு ஏற்பட்டிருக்கிறது. ஒரு கட்டத்தில் ஆத்திரம் மட்டுப்படாத வெங்கடேசன் வீட்டில் கிடந்த கம்பி உள்ளிட்ட ஆயுதங்களால், தனது தந்தையை பலமாக தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் பலத்த காயம் அடைந்த ராஜசேகரை 108 ஆம்புலன்ஸ் மூலம் கும்பகோணம்  அரசு மருத்துவமனையில்  சிகிச்சைக்காக சேர்த்தனர்.


சிகிச்சை பலனிறி உயிரிழப்பு – மகன் கைது


பின்னர் மேல் சிகிச்சைக்காக தஞ்சை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில் அங்கு சிகிச்சை பலனின்றி ராஜசேகர் உயிரிழந்தார். இதனையடுத்து ஏசி மெக்கானிக்கான ராஜசேகர் மகன் வெங்கடேசனை(20) வலங்கைமான் போலீசார் கைது செய்து கொலை வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


வெளிநாட்டில் இருந்து மருத்துவ சிகிச்சைக்காக வந்த தந்தையினை மகன் அடித்துக் கொன்ற  சம்பவம் அப்பகுதியில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


மது போதையால் திருவாரூர் மாவட்டத்தில் அதிக குற்றச்சம்பவங்கள்


இந்த நிலையில் சமீப காலமாக திருவாரூர் மாவட்டத்தில் மது போதையின் காரணமாக கொலை உள்ளிட்ட குற்றச் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. குறிப்பாக மது போதையில் குடும்பத்தினரிடம் தகராறு ஈடுபடுபவர்களை தற்காப்புக்காக குடும்பத்தினர் தடுக்கும் நோக்கத்தில் நடைபெறும் சம்பவங்கள் கொலை வழக்குகளாக மாறக்கூடிய சூழல் உருவாகி வருகிறது. இது குடும்பத்தையும் அவர்களது சுற்றத்தாரையும் நிலைகுலை வைத்துவிடுகிறது. எனவே, அதிக அளவில் உள்ள மதுக் கூடங்களை முழுமையாக அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்


மதுக் கடைகளை குறைப்பது எப்போது ?


திமுக ஆட்சிக்கு வந்ததும் படிப்படியாக மதுக்கடைகளை குறைப்போம் என தேர்தல் பிரச்சாரத்தின்போது பல தலைவர்களும் பேசினர். இப்போது மதுவால் சட்டவிரோத செயல்கள் மட்டுமின்றி குடும்ப வன்முறைகளும் அதிகரித்து வரும் நிலையில், மதுக்கடைகளின் எண்ணிக்கையை படிப்படியாக குறைக்க தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிடவேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர். மதுவால் இனியும் குடும்பங்கள் சீரழியக்கூடாது என்ற தாயுள்ளத்தோடு இந்த முடிவை முதல்வர் எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் மன்றாடி கேட்டுக்கொண்டுள்ளனர்.