7 கட்டங்களாக நடந்த மக்களவைத் தேர்தல் முடிவுகள் கடந்த 4ம் தேதி வெளியாகியது. தெலுங்கு தேசம், ஜனதா தள மற்றும் இன்ன பிற கூட்டணி கட்சிகளின் உதவியுடன் மத்தியில் மீண்டும் பா.ஜ.க. ஆட்சி அமைத்துள்ளது. இதையடுத்து, நாட்டின் பிரதமராக மோடி நேற்று 3வது முறையாக பதவியேற்றார்.
மோடி பிரதமராக பதவியேற்ற விழாவில் அவருடன் இணைந்து 71 அமைச்சர்களும் பதவியேற்றனர். புதியதாக அமைச்சர்களாக பதவியேற்ற 71 நபர்களில் 6 பேர் முன்னாள் முதலமைச்சர்கள் ஆவார்கள்.
- சிவராஜ் சிங் சவுகான்:
மத்திய பிரதேசத்தில் பா.ஜ.க. வலுவாக இருப்பதற்கு முக்கிய காரணம் சிவராஜ்சிங் சவுகான் ஆவார். இவர் அந்த மாநிலத்தில் 3 முறை முதலமைச்சராக பொறுப்பு வகித்தவர். இவரை அந்த மாநில மக்கள் அன்புடன் மாமாஜி என்று அழைக்கின்றனர். 1990ம் ஆண்டு முதன்முறையாக புத்னி தொகுதியில் எம்.பி.யாக தேர்வு செய்யப்பட்டார். லட்சக்கணக்கான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இவர், இந்த முறை மத்திய அமைச்சராக பதவியேற்றுள்ளார்.
- ராஜ்நாத் சிங்:
பிரதமர் மோடி, அமித்ஷா ஆகியோருடன் நெருக்கமானவரும், பா.ஜ.க.வின் தலைமை பொறுப்பில் அதிகாரமிக்கவராகவும் இருப்பவர் ராஜ்நாத்சிங். 1974ம் ஆண்டு அரசியலுக்கு வந்த ராஜ்நாத்சிங் உத்தரபிரதேசத்தின் எம்.எல்.ஏ., எம்.எல்.சி.யாக பொறுப்பு வகித்தவர். அந்த மாநிலத்தின் கல்வி அமைச்சராக பொறுப்பு வகித்த ராஜ்நாத் சிங், 1991ம் ஆண்டு உத்தரபிரதேச முதலமைச்சராக பொறுப்பேற்றார். மோடியின் அமைச்சரவையில் நாட்டின் பாதுகாப்பு அமைச்சராகவும் பொறுப்பு வகித்துள்ளார்.
- மனோகர் லால் கட்டார்:
ஹரியானா மாநிலத்தில் முதலமைச்சராக இரண்டு முறை பதவி வகித்தவர் மனோகர் லால் கட்டார். கர்னல் மக்களவைத் தொகுதியில் 2 லட்சத்து 32 ஆயிரத்து 577 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற அவருக்கு மத்திய அமைச்சரவையில் இடம் வழங்கியுள்ளனர். ஹரியானா மாநிலத்தின் முதல் பா.ஜ.க. முதலமைச்சர் என்ற பெருமையும் இவருக்கு உண்டு.
- சர்பானந்தா சோனோவல்:
அசாம் மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சர் சர்பானந்தா சோனோவல். வடகிழக்கு மாநிலத்தில் முதன்முறையாக பா.ஜ.க. ஆட்சியை கைப்பற்றிய மாநிலம் என்ற பெருமையை அசாம் பெற்றுத்தந்தது. 2016ம் ஆண்டு அசாமில் ஆட்சியைப் பிடித்தபோது சர்பானந்தா முக்கிய பங்கு வகித்தவர்.
- குமாரசாமி:
தமிழ்நாட்டின் அண்டை மாநிலமான கர்நாடகாவின் முதலமைச்சராக பொறுப்பு வகித்தவர் குமாரசாமி. இவரது தந்தை தேவகவுடான முன்னாள் பிரதமர் ஆவார். குமாரசாமியின் கட்சியான மதச்சார்பற்ற ஜனதா தளம் கடந்தாண்டு பா.ஜ.க.வுடன் கைகோர்த்தது. குமாரசாமி 5 முறை எம்.எல்.ஏ.வாக பதவி வகித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
- ஜித்தன் ராம் மஞ்சி:
பீகார் மாநிலத்தில் முக்கிய தலைவர்களில் ஒருவர் ஜித்தன் ராம். 2014ம் ஆண்டு இவர் பீகார் மாநிலத்தில் முதலமைச்சராக தேர்வு செய்யப்பட்டார். நிதிஷ்குமார் அமைச்சரவையில் பட்டியலின மற்றும் பழங்குடியின அமைச்சராக பொறுப்பு வகித்தவர். இந்துஸ்தானி ஆவாம் மோர்ச்சா அமைப்பின் நிறுவனரும் இவரே என்பது குறிப்பிடத்தக்கது.