கரூரில் தனது மகளை பிரபல மருந்துவர் பாலியல் தொந்தரவு செய்ததாக கரூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் தனியார் மருத்துவமனை காசாளர் புகார் செய்துள்ளார். இதையடுத்து மருத்துவர் மற்றும் தனியார் மருத்துவமனை மேலாளர் மீதும் போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. 




கரூர் பசுபதிபாளையம் பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் கரூர் வடக்கு பிரதட்சணம் சாலையில் உள்ள ஒரு பிரபல மருத்துவமனையில் கணக்காளராக வேலை செய்து வருகிறார். இவருக்கு 17 வயதில் ஒரு மகள் உள்ளார். இவர், கரூரில் உள்ள ஒரு பள்ளியில் 11-ஆம் வகுப்பு படித்து வருகிறார்.




இந்நிலையில் நேற்று கரூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஒரு புகார் செய்தார். அப்புகாரில் தான் வேலை பார்க்கும் மருத்துவமனையின் மருத்துவர் ரஜினிகாந்த் நேற்று மாலை தனது மகளை தனது அறைக்கு வரச்சொல்லி பாலியல் தொந்தரவு செய்ததாக தெரிவித்துள்ளார். இதுபற்றி கரூர் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் (பொறுப்பு) செந்தூர்பாண்டியன் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளார்.




புகார் அளித்த அப்பெண், தனது மகளை மருத்துவமனை மேலாளர் மூலம் அழைத்துச் சென்று மருத்துவர் ரஜினிகாந்த் பாலியல் தொந்தரவு செய்ததாக கூறியுள்ளார். இந்த வழக்கில் மருத்துவர் ரஜினிகாந்த், மருத்துவமனை மேலாளர் சரவணன் ஆகியோர் மீது போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு மேலாளரை அழைத்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், மருத்துவர் தலைமறைவாகிவிட்டதாக கூறப்படுகிறது.


கரூர் பகுதியில் பிரபல தனியார் மருத்துவர் மீது போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டிருப்பது பெரிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோவை சம்பவம் தமிழகத்தையே உலுக்கி வரும் சூழ்நிலையில் கரூர் பகுதியில் மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த புகார் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.




கோவையில் இரண்டு நாட்களுக்கு முன் நடந்த பள்ளி மாணவி தற்கொலை குறித்து பள்ளி நிர்வாகத்தின் மீதும் பாலியல் சீண்டல் ஈடுபட்ட ஆசிரியர் மீதும் போக்சோ சட்டம் பாய்ந்து தற்போது சிறையில் உள்ள நிலையில், அதைத்தொடர்ந்து கரூரில் நடைபெற்ற உள்ள பள்ளி மாணவி பாலியல் சீண்டல் சம்பவம் தமிழகத்தையே உலுக்கி உள்ளது. இந்த மாணவிக்காக பல்வேறு சமூக அமைப்பினர் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் குற்றவாளியை கைது செய்யாவிட்டால் களத்தில் போராட இருப்பதாக அறிவித்துள்ளனர். ஆகவே, இன்று அல்லது நாளைக்குள் தனியார் மருத்துவமனை தலைமை மருத்துவர் கைது செய்யப்பட வாய்ப்புகள் இருப்பதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.