கொரோனா பரவல் காரணமாக இந்தியாவில் இருந்து மாற்றப்பட்ட டி 20 உலகக்கோப்பை தொடரானது ஐக்கிய அரபு அமீரகத்தில் மாற்றப்பட்டு பரபரப்பான இறுதி போட்டியை நெருங்கியுள்ளது. இதுவரை நடந்த அரையிறுதி போட்டியில் பாகிஸ்தான் அணியை வீழ்த்தி ஆஸ்திரேலியா அணியும், இங்கிலாந்து அணியை வீழ்த்தி நியூசிலாந்து அணியும் இறுதி போட்டிக்குள் தகுதி பெற்றது. இந்த இரு அணிகளுக்கும் இடையிலான இறுதிப்போட்டியானது துபாய் மைதானத்தில் இன்று இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது.
இந்தநிலையில், கடந்த 11 ம் தேதி நடைபெற்ற இரண்டாவது அரையிறுதி போட்டியில் ஆஸ்திரேலியா - பாகிஸ்தான் அணிகள் நேருக்கு நேர் மோதினர். இந்த போட்டியில் வெற்றி பெற்றால் இறுதிப்போட்டிக்குள் நுழைந்து விடலாம் என்று இரு அணி வீரர்களும் கடுமையாக முயற்சித்தனர்.
இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி, 20 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 176 ரன்கள் குவித்தது. பாகிஸ்தான் அணியில் அதிகபட்சமாக தொடக்க வீரர் முகமது ரிஸ்வான் 67 ரன்களும், பகர் ஜாமான் 55 ரன்களும் பெற்றிந்தனர். 177 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலியா அணியில் தொடக்க வீரர்களாக கேப்டன் ஆரோன் பின்ச் மற்றும் டேவிட் வார்னர் களமிறங்கினர். ஷாஹீன் அப்ரிடி வீசிய முதல் ஓவரிலேயே ஆரோன் பின்ச் ரன் எதுவுமின்றி வெளியேறினார். மறுமுனையில் சிறப்பாக விளையாடிய டேவிட் வார்னர் 49 ரன்களில் அவுட் ஆகி அதிர்ச்சியளிக்க, மிடில் வரிசை பேட்ஸ்மேன்களும் சொதப்பினர்.
ஆஸ்திரேலியா அணி ஒரு கட்டத்தில் 96 ரன்களுக்கு 5 விக்கெட்களை இழந்து தடுமாறிய நிலையில், ஸ்டாய்னிஸ் மற்றும் விக்கெட் கீப்பர் மேத்யூ வேட் ஒன்றிணைந்து பாகிஸ்தான் அணியின் பந்து வீச்சாளர்களின் பந்துகளை தெறிக்கவிட்டனர். ஆஸ்திரேலியா அணிக்கு 12 பந்துகளில் 22 ரன்கள் தேவை என்ற நிலையில் 19 வது ஓவரை ஷாஹீன் அப்ரிடி வீசினார்.
ஷாஹீன் அப்ரிடி வீசிய முதல் பந்தை விக்கெட் கீப்பர் மேத்யூ வேட் தூக்க முயற்சித்தபோது, அந்த எளிய கேட்சினை ஹசன் அலி தவறவிட்டார். வாய்ப்பை பயன்படுத்தி கொண்ட மேத்யூ வேட் அடுத்ததடுத்து மூன்று பந்துகளை சிக்ஸர்களுக்கு பறக்கவிட்டு ஆஸ்திரேலியா அணியை வெற்றி பெற செய்து இறுதிப்போட்டிக்குள் அழைத்து சென்றார்.
இந்த சூழலில், பாகிஸ்தான் அணி அரையிறுதி போட்டியில் தோல்வியடைந்ததற்கு ஹசன் அலி தவறவிட்ட கேட்ச் தான் காரணம் என்று பாகிஸ்தான் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் அவரை கடுமையாக சாடினர். போட்டிக்கு பிறகு பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாமும், ஹசன் அலி கேட்ச் பிடித்திருந்தால் பாகிஸ்தான் அணி இறுதி போட்டிக்குள் நுழைந்திருக்கும் என்று தெரிவித்தார்.
கேப்டன் பாபர் அசாமின் இந்த கருத்தினாலும் பாகிஸ்தான் ரசிகர்கள் சிலர் ஹசன் அலி குறித்து ட்விட்டர் பக்கத்தில் வெறுப்பு உணர்வை வெளிப்படுத்தி வந்தனர். இதையடுத்து, ஹசன் அலிக்கு ஆதரவாக பல முன்னாள் பாகிஸ்தான் வீரர்கள் ஆதரவு தெரிவித்து வந்தனர்.
இந்தநிலையில், பாகிஸ்தான் அணியின் தோல்வி குறித்து ஹசன் அலி பாகிஸ்தான் ரசிகர்களுக்கு தனது ட்விட்டர் பக்கத்தின் மூலம் உருக்கமான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், எனது பெர்பாமன்ஸ் உங்கள் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யவில்லை என்று நன்கு தெரியும். என்னிடமிருந்து உங்கள் எதிர்பார்ப்பை மாற்றிக் கொள்ளாதீர்கள். நான் கிரிக்கெட்டுக்கு மிக உயர்ந்த அளவில் சேவை செய்ய விரும்புகிறேன், அதனால் கடின உழைப்புக்குத் திரும்புகிறேன். உங்களுடன் தொடர்பில் இருப்பது எனக்கு மேலும் வலிமையாக இருக்கும் என்று தெரிவித்துள்ளார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்