கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் மத்திகிரி சொர்ணபூமி குடியிருப்பு பகுதியைச் சேர்ந்தவர் மோகன் வயது ( 41). இவருடைய , மனைவி ரம்யா வயது (33) , இவர்களுக்கு திருமணமாகி அன்மயா வயது (10) என்ற மகளும் உள்ளார் , 61 வயதான தாய் வசந்தம்மாள் ஆகியோருடன் கடந்த 7 ஆண்டுகளாக வாடகை வீட்டில் வசித்து வந்துள்ளார்.
இவர்கள் வசித்து வந்த வீட்டின் உரிமையாளர் வீட்டை வேறு ஒருவருக்கு விற்றுள்ளார். அதனால், மோகன் வீட்டைக் காலி செய்வதற்கு, வெள்ளிக்கிழமை கடைசி நாளாக கெடு கொடுக்கப்பட்டிருந்தது. வியாழக்கிழமை வரை மோகன் வீட்டைக் காலி செய்யாத நிலையில், வெள்ளிக்கிழமை காலையில் பலமணி நேரமாக வீடு திறக்கப்படவில்லை. அதனால், வீட்டை வாங்கிய புதிய உரிமையாளர் வந்து வீட்டின் உள்ளே பார்த்தபோது வீட்டினுள் மின்விசிறி, டிவி ஆகியவை இயங்கிக் கொண்டிருந்தன.
சந்தேகமடைந்த வீட்டின் உரிமையாளர் குடும்பத்தினர், தங்களிடம் இருந்த மற்றொரு சாவியால் வீட்டின் கதவைத் திறந்து உள்ளே சென்று பார்த்தபோது மோகன் உள்ளிட்ட நான்கு பேரும் உயிர் இறந்து கிடந்தனர்.அதில் மோகனின் முகத்தில் மட்டும் பிளாஸ்டிக் கவர் இறுக்கமாக சுற்றப்பட்டிருந்தது. அதன் பின்னர் ஒசூர் காவல்நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். தகவலறிந்த ஓசூர் காவல்துறையினர், சடலங்களை மீட்டனர் . அப்போது அங்கு மோகன் ஆங்கிலத்தில் எழுதிய கடிதம் ஒன்று அங்கு கிடந்தது .
அதில், தான் ஆன்லைனில் பங்குச்சந்தை வர்த்தகத்தில் ஈடுபட்டதாகவும் அதற்காக வெளியிலும் வங்கியிலும் கடன் வாங்கி முதலீடு செய்ததாகவும் குறிப்பிட்டுள்ளார். பங்குச்சந்தை வர்த்தகத்தில் நஷ்டம் ஏற்பட்டதால் 50 லட்சம் ரூபாய் அளவுக்கு கடன் சுமை அதிகரித்ததாகவும், வெளியில் வாங்கிய கடனைத் திருப்பிக் கொடுக்க முடியாமல் தவித்ததாகவும் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
அதனால் வேறு வழியின்றி தற்கொலை முடிவு எடுத்ததாகவும், தங்கள் முடிவுக்கு வேறு யாரும் காரணம் இல்லை எனவும் எழுதியிருப்பதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.முதற்கட்ட விசாரணையில் கிடைத்த தகவல்களின் படி குடும்ப உறுப்பினர்கள் மூவருக்கும் மோகனே விஷம் கலந்து கொடுத்திருக்கவேண்டும் என்கின்றனர் காவல்துறையினர். மூவரும் இறந்த பின் தானும் விஷமருந்திய மோகன், உயிர் பிழைத்து விடக்கூடாது என்பதற்காக முகத்தில் பிளாஸ்டிக் கவரை இறுக்கமாக சுற்றிக்கொண்டு தற்கொலை செய்திருக்க வேண்டும் எனக் கருதுகின்றனர் காவல்துறையினர். கடன் தொல்லையால், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம், அந்த பகுதியில் உள்ள பொது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
செருப்பால் அடித்ததாக ’டிக்டாக் புகழ் சூர்யாதேவி’ மீது ’சிக்கி’ புகார் - மதுரை போலீஸ் வழக்குப்பதிவு
மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் உண்டானாலோ, அதனை மாற்ற, கீழ்காணும் எண்களுக்கு அழைக்கவும். மாநில உதவிமையம்: 104
சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -24640050