சென்னை பன்னாட்டு விமான நிலையத்தில் நாளுக்கு நாள் பல்வேறு கடத்தல் சம்பவங்கள் அதிகரித்த வண்ணம் உள்ளன. அதிலும் குறிப்பாக சென்னை விமான நிலையத்தில் அதிக அளவு தங்கம் கடத்தப்படுவது வாடிக்கையாகி உள்ளது. இந்நிலையில் நேற்று நள்ளிரவு சென்னை விமான நிலையத்தில் மோசடி கும்பலை சேர்ந்தவர்கள் பெரிய அளவில் தங்கம் கடத்தப்படுவதாக சுங்க இலாகா அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதனையடுத்து விமான நிலைய சுங்க அதிகாரிகள் கண்காணிப்பை தீவிரப்படுத்தினர், தொடர்ந்து பயணிகளை கண்காணித்து வந்தனர். சந்தேகத்திற்குரிய பார்சல்கள் மற்றும் சந்தேகத்திற்குரிய நபர்களை தகவல்களின் அடிப்படையில் சுங்க அதிகாரிகள் பரிசோதனை செய்து வந்தனர். தொடர்ந்து சோதனை செய்து கொண்டிருந்தபொழுது , சென்னை பன்னாட்டு விமான நிலையத்திற்கு துபாயில் இருந்து சிறப்பு விமானம் வந்தது. துபாயிலிருந்து சிறப்பு விமானத்தில் வந்த இரண்டு பயணிகளிடம், சந்தேகத்தின் அடிப்படையில் சுங்கத்துறை அதிகாரிகள் தடுத்து நிறுத்தி விசாரணை மேற்கொண்டனர்.
சுங்க அதிகாரிகள் இரண்டு பயணிகளிடம் நடத்திய விசாரணையில் , அவர்கள் தொடர்ந்து, முன்னுக்கு பின் முரணாக பேசியதால், சந்தேகமடைந்த சுங்க இலாகா அதிகாரிகள் இரண்டு பயணிகளின் உடமைகளை சோதனை செய்தனர். அவ்வாறு பயணிகளிடம் சோதனை செய்தபோது, அவர்களுடைய உடைமைகளில் வீட்டு உபயோக பொருட்களான அரிசி குக்கர், ஜுசர், மிக்சி போன்ற பொருட்கள் இருந்தன. இதனால் இன்னும் சந்தேகமடைந்த சுங்கத்துறை அதிகாரிகள் அவற்றை பிரித்து பார்த்தபோது, மோட்டார்களில் தங்கத்தை வளையங்கள்போல் மறைத்து வைத்திருந்ததை கண்டுபிடித்தனா். மோட்டார்களில் கச்சிதமாக பொருந்தும்படியாக தங்கத்தை உருக்கி, அவற்றை ஒன்றாக மாற்றி மோட்டாரை சுற்றம் காயில் போல் மாற்றி நூதன முறையில் கடத்தி வந்தனர்.
இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த சுங்கத்துறை அதிகாரிகள், அந்த பொருட்களை கைப்பற்றி அவற்றை பிரித்து, அதில் இருந்த தங்கத்தை வெளியில் எடுத்தனர். பறிமுதல் செய்யப்பட்ட தங்கத்தின் இடை 8 கிலோவிற்கு மேல் இருந்தது, தற்போது அவற்றின் சந்தை மதிப்பு சுமார் 4 கோடியே 3 லட்சம் ரூபாய் என கண்டெடுக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக பொருட்களை கைப்பற்றி வந்த 2 நபர்களை கைதுசெய்த சென்னை சுங்க அதிகாரிகள் அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த கடத்தல் சம்பவத்தில் யார் யார் துணை புரிந்தார்கள் இன்னும் பலர் இதில் சம்பந்தப்பட்டு இருக்கிறார்கள் என்ற கோணத்தில் விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர்.