தமிழ்நாட்டில் தளர்வுகளற்ற ஊரடங்கு அறிவிக்கப்பட்டு, டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளது. இந்நிலையில் மது அருந்த முடியாமல் தவிக்கும் மது பிரியர்கள், அண்டை மாநிலங்களில் இருந்து ரயில்வே பார்சல் மூலம் மதுபானத்தை கடத்துவதாக ரயில்வே காவல்படையினருக்கு ரகசிய தகவல் வந்தது. அதன் அடிப்படையில் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் காவல் ஆய்வாளர் சிவநேசன் தலைமையில் தனிப்படை அமைத்து, அவ்வப்போது அதிரடி சோதனைகளில் காவல்துறையினர் ஈடுபட்டு வந்தனர்.


3 டப்பாவில் பார்சல் வந்த 384 மதுபான பாக்கெட்கள் 


இன்று அதிகாலை சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் நடத்திய திடீர் சோதனையில் ரூபாய் 20 ஆயிரம் மதிப்பிலான மதுபானம் பிடிபட்டது. உத்திரபிரதேசத்தை சேர்ந்த 27 வயதுள்ள அகிலேஷ் யாதவ் என்னும் நபருக்கு 3 டப்பாக்கள் பார்சல் வந்திருந்தது. அவரின் நடவடிக்கையை கண்டு சந்தேகமடைந்த ரயில்வே காவல்படை போலீசார், பார்சல்களை சோதனை செய்தனர். அதில் உள்ளே பாக்கெட் மதுபானம் இருந்ததது கண்டறியப்பட்டது. பார்சலில் அனுப்பபட்ட சுமார் 384 பாக்கெட் மதுபானம் பறிமுதல் செய்யப்பட்டது. பெங்களூரு - சென்னை ரயிலில் அனுப்பட்டுள்ள மதுபான பார்சல் குறித்து ரயில்வே காவல்படை வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.



நடைமேடை ஒன்றில் பிடிபட்ட 23 பாட்டில்


சென்ட்ரல் ரயில் நிலையத்தின் முதல் நடைமேடையில் வழக்கமான பாதுகாப்பு பணியில் ரயில்வே காவல்படையினர் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த நடைமேடையில் நீண்ட நேரமாக கையில் நீல நிற பையுடன் சந்தேகத்திற்கு இடமான முறையில் 25 வயது மதிக்கத்தக்க பெண்மணி ஒருவர் இருந்துள்ளார். அவரை அழைத்து, அவரிடம் இருந்த பையில் சோதனை செய்ததில் 23 பாட்டில் மதுபானத்தை பைகளில் பதுக்கி கடத்த முற்பட்டது தெரிய வந்ததது. அவரிடமிருந்து 8000 ரூபாய் மதிப்பிலான மதுபான பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டு வழக்கு பதிவு செய்தனர் ரயில்வே காவல்படையினர்.


நடைமேடை நான்கில் பிடிபட்ட 20 பாட்டில்


நடைமேடை நான்கில் அடையாளம் தெரியாத பை ஒன்று கிடந்துள்ளது, அதை சோதனை செய்த பார்த்த போது 20 மது பாட்டில்கள் அதில் கண்டறியப்பட்டுளளது. 7000 ரூபாய் மதிப்பிலான மதுபானம் அந்த பையில் இருந்ததாக ரயில்வே காவல்படையினர் தகவல் அளித்துள்ளனர்.


ஒட்டுமொத்தமாக இன்று ஒரே நாளில் மட்டும் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் 384 மதுபான பாக்கெட், 43 மதுபான பாட்டில் என 35000 ரூபாய் மதிப்புள்ள மதுபானத்தை ரயில்வே காவல்படை பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்த மதுபான பாட்டில் அனைத்தும் பூக்கடை காவல்நிலையத்தில் புகார் அளித்து, ஒப்படைக்க பட்டது. அதிக அளவில் மதுபானம் கடத்தப்படுவதாக தெரியவந்துள்ளதை அடுத்த சென்ட்ரல் ரயில் நிலையத்தில் கண்காணிப்பு தீவிர படுத்தப்பட்டுள்ளது. தங்கம் கடத்துவதைப் போன்று சமீபமாக மது கடத்தில் அதிகரித்துள்ளது.