தேர்தல் முடிந்து மே 7ஆம் தேதி மு.க.ஸ்டாலின் தலைமையில் பதவியேற்ற திமுக அமைச்சரவை இந்த ஒரு மாத கால ஆட்சியை சிறப்பாக செய்து வந்துள்ளதாக பல்வேறு தரப்பினரும் பாராட்டு பத்திரம் வாசித்திருக்கும் நிலையில், அமைச்சரவையில் சிறப்பாக செயலாற்றிய டாப் 5 அமைச்சர்கள் யார் யார் என்று பார்ப்போம் :-



  1. பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன்



தமிழ்நாட்டின் நிதித் துறை அமைச்சராக ஸ்டாலின் யாரை நியமிக்கப்போகிறார்  என்று மக்களும் கட்சியினரும் குழம்பிக்கொண்டிருந்தனர். ஆனால், மு.க.ஸ்டாலினுக்கு அதில் எந்த குழப்பமும் இல்லை. ஏனெனில், அவர் மனதில் இருந்தவர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன். ஒவ்வொருமுறை மாநில அரசின் பட்ஜெட்க்கும் பிறகும் அறிவாலயத்தில் அவர் வைக்கும் பிரஸ்மீட்டே அடுத்த நிதி அமைச்சர் இவர்தான் என்பதை கிட்டத்தட்ட உறுதிப்படுத்தியிருந்தன. ஓட்டுக்கு பணம் கொடுக்கவே மாட்டேன் என உறுதியாக இருந்து இரண்டாவது முறையாக மதுரை மத்திய தொகுதியில் வென்று, எம்.எல்.ஏ ஆனவர். இன்று தமிழ்நாட்டின் நிதி அமைச்சர்.


அவர் பதவியேற்றது முதல் பற்றிக்கொண்டது சர்ச்சைத் தீ,  ஈஷா நிறுவனர் ஜக்கி வாசுதேவ் பற்றி கடுமையான விமர்சனம் செய்திருந்த பழனிவேல் தியாகராஜன் குறித்து, பிரஸ் மீட் வைத்து பிரஷர் ஏற்றினார் ஹெச்.ராஜா, சத்குரு பற்றி பேச என்ன அருகதை இருக்கிறது ? பழனிவேல் தியாகராஜன் குறித்த பின்னணியை கையில் எடுக்கப்போகிறோம், அவர் குடும்பம் முதல் எல்லாவற்றையும் பேசுவோம் என உட்கார்ந்திருந்தப்படியே எகிறி குதித்தார் ராஜா. இதுபற்றி பி.டி.ஆரிடம் கேட்டபோது நான் நாட்டின் நிதி அமைச்சர் இப்படி நாய் குலைப்பதற்கெல்லாம் பதிலளித்துக்கொண்டிருக்க முடியாது என ஒரே போடாக போட்டார்.


சில நாட்களில் ஜக்கி வாசுதேவ் பற்றி புதிதாக ஒரு ஆதாரமோ, சர்ச்சையோ வரும் வரை இனி பேசமாட்டேன் என அறிக்கைக் கொடுத்து சைலண்ட் மோடுக்கு போனார் பிடிஆர். அந்த சைலண்ட் மோட் வைலண்ட் மோடானது டெல்லி ஜி.எஸ்.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில்தான். மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நடைபெற்ற அந்த விவாதத்தில் ஒன்றிய அரசு, ஒன்றிய அரசு என ஒவ்வொரு வரிக்கும் சொல்லி ஒவ்வொருவரையும் உசுப்பேற்றினார் என்று ஊடகங்கள் சொன்னாலும்,  அந்த கூட்டத்தில் அவர் எடுத்த வைத்த வாதங்கள் வலிமையானவை. மாநிலங்களுக்கு நிதி ஒதுக்கீடு என்பது முறையாக இல்லை. ஜி.எஸ்.டி கட்டமைப்பே சரியாக இல்லை என தன் ஆளுமையையும் தமிழ்நாட்டின் நிலையையும் டெல்லியில் அரங்கேற்றம் செய்தார் பிடிஆர். அப்போது, மதுரை மக்கள் தொகை அளவு கூட இல்லாத கோவா மாநில அமைச்சருக்கு பேச அதிக வாய்ப்புகள் வழங்கியதை விமர்சித்து, என் அரசியல் வாழ்க்கையில் அவர் பேசியதை கேட்டதுதான் துயரத்தின் உச்சம் என பேட்டிக்கொடுத்தார். விளைவு, உள்நாட்டில் தயாரிக்கப்படும் மருத்து உபகரணங்களுக்கு ஜி.எஸ்.டியிலிருந்து விலக்கு அளிப்பது தொடர்பாக மத்திய அரசால் அமைக்கப்பட்ட குழுவில் தமிழ்நாட்டிற்கு இடம் இல்லை. அத்தோடு முடிந்ததா அது என்றால் இல்லை, கோவா மாநில மக்களிடம் பிடிஆர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று டிவிட்டரில் திரி கொளுத்தினார் அம்மாநில போக்குவரத்து துறை அமைச்சர், அந்த திரிக்கு எண்ணெய் வீட்டு அதே டிவிட்டரிலேயே தூண்டிவிட்டார் வானதி சீனிவாசன், இருவரும் மாறி மாறி வசைகள் பொழிய ஒரு கட்டத்தில் வானதியை பிளாக் செய்தார் பிடிஆர். அப்படி அவர் டிவிட்டரில் பலரை ’BLOCK’ செய்திருந்தாலும், தமிழ்நாட்டின் நிதித்துறைக்கான ’LOCK’ஐ திறக்கும் திறமையும் வலிமையும் அவரிடம் உள்ளதாகதான் திமுக தலைமை நினைக்கிறது.



  1. தங்கம் தென்னரசு



அமைச்சரவை பட்டியல் அறிவிக்கப்படுவதற்கு முன்பே மீண்டும் பள்ளிக் கல்வித் துறைக்கு அமைச்சராக ஆக்கப்படுவார் என எதிர்ப்பார்க்கப்பட்டவர் தங்கம் தென்னரசு. ஏனென்றால் முந்தைய திமுக ஆட்சியில் இவர் செயல்பட்ட விதம் அப்படி. பள்ளிகளையும் பள்ளிக் கல்வித்துறையையும் மேம்படுத்த இவர் மேற்கொண்ட முயற்சிகளும் சீர்த்திருத்தங்களும் அனைவராலும் பாரட்டப்பட்டன. குறிப்பாக சமச்சீர் கல்வி முறையை கொண்டுவந்தது மிகப்பெரிய மாற்றத்திற்கு வித்திட்டது. ஆனால், இந்த முறை ஸ்டாலினின் திட்டம் வேறு மாதிரியாக இருந்தது. அதனால்தான் பொறியியல் படித்த தங்கம் தென்னரசுவை தொழில் துறை அமைச்சராக நியமித்தார் அவர். தமிழ் மீது மாறாப்பற்றுக்கொண்டிருக்கும் அவரிடமே தமிழ் வளர்ச்சித்துறையையும் ஒப்படைத்தார்.


தொழில்களை மேம்படுத்துவதும் அதன் கட்டமைப்பை வலுப்படுத்துவதும்தானே தொழில்துறை அமைச்சராக இருக்கும் அவர் பணி என்று நாம் நினைத்துக்கொண்டிருக்கும்போது, அதற்கு நேர்மாறாக ஒரு விஷயத்தை செய்து அனைவரையும் ஆச்சரியப்படுத்தினார். கொரோனா நோயாளிகளுக்கு ஆக்சிஜன் பற்றாக்குறை நிலவி வந்த நிலையில், தமிழ்நாட்டில் எங்கெல்லாம் ஆக்சிஜன் உற்பத்தி செய்யப்படும் தொழிற்சாலைகள் இருக்கிறதோ அத்தனையையும் தேடி கண்டுபிடித்து, அங்கு ஆக்சிஜன் உற்பத்தி செய்யவைத்து மருத்துவத் துறைக்கு வழங்கினார்.  குறிப்பாக ஆக்சிஜனை ஏற்றிக்கொண்டு செல்லும் கிரியோஜினிக் கண்டெய்னர்களுக்கு தமிழ்நாட்டில் தட்டுப்பாடு நிலவியபோது, சீனாவில் இருந்து போர்க்கால அடிப்படையில் 12 கண்டனைர்களை உடனடியாக வாங்கி உயிரிழப்புகளை தடுத்தவர் இவர்.


தமிழ் எழுத்துலகின் மூத்த முன்னோடியும், கரிசல் காட்டு இலக்கியத்தின் தந்தை என கொண்டாடப்படுபவருமான கி.ரா மறைந்தபோது, தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் என்ற முறையில் அவரது உடலை புதுச்சேரியில் இருந்து இடைச்செவலுக்கு கொண்டு வந்து, முழு அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யும் பணியை அருகில் இருந்து கவனித்து, கவனம் பெற்றவர்.


நாணைய சேகரிப்பில் பெரும் ஆர்வம் கொண்ட இவரிடம், இன்று பழங்கால வரலாறுகளை சொல்லும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட நாணயங்கள் இருக்கின்றன. அதே நாணையம் போன்ற குணத்தை கொண்டவர் என திருச்சுழி மக்களால் புகழப்படும் தங்கம் தென்னரசு, தமிழ்நாட்டு தொழில்துறையில் ஒரு யுக புரட்சியை ஏற்படுத்துவார் என தீர்க்கமாக நம்புகின்றனர் விவரம் அறிந்தோர்.



  1. அன்பில் மகேஷ் பொய்யாமொழி




மு.க.ஸ்டாலினின் அன்பிற்கும் பாசத்திற்கு உரிய நபர், உதயநிதியுடன் நகமும் சதையுமாக இருக்கும் நெருங்கிய நண்பர் என பந்தத்துடன் இருக்கும் அன்பில் மகேஷ் பொய்யாமொழிக்கு, இந்த முறை அமைச்சர் பதவி ’கன்ஃபார்ம்’ என்பது உடன்பிறப்புகளுக்கு தெரிந்த ரகசியம்தான். ஆனால், அவரை பள்ளிக் கல்வித்துறைக்கு ஸ்டாலின் அமைச்சர் ஆக்குவார் என்பதைதான் எவரும் எதிர்பார்க்கவில்லை.


பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் பதவி என்பது மிகுந்த பொறுப்பு மிக்கது, மாணவர்களின் எதிர்காலத்தோடு தொடர்புடையது, அதற்கு அனுபவம் மிக்க நபர் அமைச்சராக இருப்பதுதான் சரியாக இருக்கும் என்றெல்லாம் விமர்சனங்கள் எழுந்தன. ஆனால், அனுபவம் என்பது அப்படியே வானத்தில் இருந்து குதித்து வந்து வந்துவிடுவதில்லை. வாய்ப்பு கொடுத்தால்தானே வானத்தை தொடுகிறோமா அல்லது வாய்வார்த்தை ஜாலங்கள் செய்கிறோமா என்பது தெரியும். அப்படி கொடுக்கப்பட்ட வாய்ப்பை இந்த ஒரு மாதத்தில் கெட்டியாக பிடித்துக்கொண்டுவிட்டார் அன்பில் மகேஷ்.


பதவியேற்பு நாளில் உதயநிதியை ஆரத்தழுவி அன்புபொங்கிய அன்பில் மகேஷ், அடுத்து செய்ததெல்லாம் அதிரடி ரகம். மாநில அமைச்சர் இல்லாமல் அதிகாரிகளை வைத்து கூட்டம் நடத்துவதை ஏற்கமுடியாது என, மத்திய அமைச்சர் தலைமையில் நடைபெற்ற புதிய கல்விக் கொள்கை கூட்டத்தையே புறக்கணித்து, இது கூட்டாட்சி தத்துவத்திற்கு வேட்டும் வைக்கும் நடவடிக்கை என பேட்டிக்கொடுத்தது, PSBB பள்ளி ஆசிரியர் மீது பாலியல் குற்றச்சாட்டு எழுந்தபோது உடனடியாக விசாரணைக்கு உத்தரவிட்டு, தவறு செய்த யாராக இருந்தாலும் விடமாட்டோம் என பேசியது எல்லாம், மிகப்பெரிய வரவேற்பை கல்வியாளர்கள், பெற்றோர்கள், மாணவர்கள் மத்தியில் ஏற்படுத்தியது. ஆன்லைனில் பாடம் எடுக்கும்போது இது மாதிரி ஒரு பிரச்னை வரும் என்பது நாங்களே எதிர்பார்க்காதது, இது எங்களுக்கே ஒரு பாடம் தான் என கணிவு காட்டியதில் பளிச்சிட்டார் அன்பில்.


அதுமட்டுமில்லாமல், 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வை நடத்தலாமா, வேண்டாமா என்பதை முடிவெடுக்க, அனைத்து தரப்பினர் கருத்தையும் கேட்டது, அரசியல் கட்சியினரிடம் ஆலோசனை நடத்தியது, எதிர்க்கட்சி தலைவராக இருக்கும் எடப்பாடி பழனிசாமிக்கே தொலைபேசியில் அழைத்து பேசியது என, எழுதும் Exam-ல் எல்லாம் ஏகத்திற்கு ஸ்கோர் செய்து வருகிறார் அன்பில் மகேஷ். ஒவ்வொரு செய்தியாளர் சந்திப்பிலும் கேள்விகளுக்கு அமைதியாக பதிலளிக்கும் விதமும், மாணவர்களை, மாணவர்கள் என்று சொல்வதை காட்டிலும் ’குழந்தைகள்’ என்ற சொல்லாடலை பயன்படுத்தும் ரகமுமாக நகர்ந்துக்கொண்டிருக்கிறார் அவர். தனக்கு அளிக்கப்பட்ட பொறுப்பில் எந்த இடத்திலும் பிசகிவிடக்கூடாது என்றெண்ணி, ஒவ்வொரு வார்த்தை பிரயோகத்தையும் கவனமும் தெளிவுமாக அவர் பயன்படுத்தும் விதம், விமர்சித்தவர்களை கூட ரசிக்க வைத்திருக்கிறது.


மாணவர்களின் உடல்நலனை கருத்தில் கொண்டு பன்னிரெண்டாம் வகுப்பு தேர்வை ரத்து செய்திருக்கும் நிலையில், நீட் தேர்வு நடத்தப்பட்டால் அதனை ’எதிர்த்து போராடுவோம்’ என்று அன்பில் மகேஷ் சொல்லியிருக்கும் நிலையில், மாணவர்களின் எதிர்காலத்திற்கு எந்த பங்கமும் வந்திராதபடி எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் நிச்சயம் அவருக்கு இனி சவால் மிகுந்ததாகவே இருக்கும்.


 



  1. மா.சுப்பிரமணியன்



தமிழ்நாடே கொரோனா 2ஆம் அலையில் சிக்கி திணறிக்கொண்டிருக்கும்போது சுகாதாரத்துறை அமைச்சராக யாரை நியமிக்கப்போகிறார் மு.க.ஸ்டாலின் என்ற எதிர்ப்பார்ப்பு எகிறியிருந்தது. சுகாதாரத்துறையை மருத்துவத் துறை என மாற்றி மா.சு என்கிற மா.சுப்பிரமணியத்தை அதற்கு அமைச்சர் ஆக்கினார் அவர். மு.க.ஸ்டாலினின் முக்கிய தளபதிகளில் ஒருவராக இருக்கும் மா.சுப்பிரமணியன், களப் பணிகளில் கைத் தேர்ந்தவர் என பெயர் எடுத்தவர். அதனால்தான் மருத்துவத்துறை அவருக்கு மடைமாற்றப்பட்டது. பதவியேற்ற நாள் முதலே ஆலோசனைக் கூட்டங்கள், ஆய்வுகள் என அதிரடி காட்டத் தொடங்கிய மா.சு, அதிகளவில் தொற்றுகள் ஏற்பட்டுக்கொண்டிருந்த சென்னையில், அவை குறையை நடவடிக்கைகளை முடுக்கிவிட்டார். அடுத்து கோவையில் தொற்றுகள் அதிகரிக்கத் தொடங்கிய நிலையில் அங்கேயும் விசிட் அடித்து விரைவான நடவடிக்கைகளை மேற்கொள்ளச் செய்தார்.


சென்னையில் அம்மா உணவக பெயர் பலகையை திமுகவினர் இருவர் பெயர்த்தெடுத்த சம்பவம் பேசுபொருளானபோது, மாவட்ட செயலாளர் என்ற முறையில் அவர்கள் இருவரையும் கட்சியில் இருந்தே நீக்கச் வைத்தவர் மா.சு. செங்கல்பட்டு தடுப்பூசி மையத்தை உடனே திறக்க அது ஒன்றும் மெக்கானிக் ஷெட் இல்லை என்று பாஜக மாநில தலைவர் எல்.முருகன் அடித்த கமெண்டுக்கு, நாங்களும் அதை மெக்கானிக் ஷெட் என்றே சொல்லவில்லை. வேக்சின் தயாரிக்கிற நிறுவனம் என்று தான் சொல்கிறோம். அதில் என்ன ஸ்கூட்டருக்கு ஸ்பேர் பார்ட்ஸ் தயாரித்து கொடுங்க என்றா  கேட்கிறோம் என பதிலடி கொடுத்தவர். உலகளாவிய தடுப்பூசி கொள்முதலுக்கு டெண்டர் விடுத்தது, ஆக்சிஜன் சிலிண்டர்களை அதிகப்படுத்தியது, கிராமங்கள் வரை தடுப்பூசி போடும் திட்டத்தை தொய்வின்றி கொண்டு சேர்த்தது என சுற்றி சுழன்று கொண்டிருக்கும் மா.சு.,விற்கான சவால்கள் இன்னும் குறைந்தப்பாடில்லை.


 



  1. சேகர்பாபு



 


கோயில் அடிமை நிறுத்து என ஈஷா நிறுவனர் சத்குரு ஜக்கி வாசுதேவ் தேர்தலுக்கு முன்னர் எடுத்த பிரச்சாரத்தால் கொஞ்சம் கலங்கித் தான் போயிருந்தது இந்து சமய அறநிலையத்துறை. கோயிலை தனியாரிடம் ஒப்படைக்க முடியாது என கொதித்தெழுந்த பிடிஆர் பழனிவேல் தியாகராஜனும், தருமபுரி திமுக எம்.பி செந்தில்குமாரும் ஆட்சி அமைந்ததும் சத்குரு மீது நடவடிக்கை என அனல்கக்கிக்கொண்டிருந்த பொழுதில், அமைதியாக இத்துறைக்கு அமைச்சரானார் சேகர் பாபு.  இந்த 5 ஆண்டுகளின் முடிவில் இந்து சமய அறநிலையத்துறையின் செயல்பாடுகள் அனைவரும் புருவம் உயர்த்தி பார்க்கும் அளவுக்கு இருக்கும் என பேட்டி கொடுத்தவர், சத்குரு குறித்த கேள்விக்கு யார் தவறு செய்தாலும் தயங்காமல் இந்த அரசு நடவடிக்கை எடுக்கும் என சரவெடி கொளுத்தினார்.


ஸ்ரீரங்கம் கோயில் ஜீயர் பொறுப்புக்கு விண்ணப்பிக்கலாம் என்ற அறிவிப்பு வந்தது குறித்து ஹெச்.ராஜா விமர்சித்திருந்த நிலையில், காமாலை கண் கொண்டவருக்கு காண்பதெல்லாம் மஞ்சள்போல்தான் இருக்கும் என கனன்று பேசினார் அவர். குடமுழுக்கு நடத்தப்படாத கோயில்களில் குடமுழுக்கு நடத்த நடவடிக்கை செய்யப்படும் என்றது, பூசாரிகளுக்கு கொரோனா கால நிதி உதவி அளிக்க முன்னெடுப்புகளை எடுத்தது என பாராட்டு பெற்று வரும் சேகர் பாபுவின் இன்னொரு முக்கியமான அறிவிப்பு, கோயில் சொத்துக்களையும் அதன் வருவாய் தொடர்பான விவரங்களையும் இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என்றது. இந்த அறிவிப்புக்குதான் சரியான திசையில் எடுக்கப்பட்டுள்ள வரலாற்று நடவடிக்கை என கோயில்களை அரசின் கட்டுப்பாட்டில் இருந்து விடுவிக்கச் சொன்ன அதே சத்குரு ஜக்கி வாசுதேவ் பாராட்டு தெரிவித்தார்.


அனைத்து சாதியினரையும் அர்ச்சகர் ஆக்குவது, ஆக்கிரமிக்கப்பட்டிருக்கும் கோயில் நிலங்களை மீட்டெடுப்பது, காலங்காலமாக ஒரே ஒரு சமூகத்தின் கையில் இருக்கும் பழமை வாய்ந்த கோயில்களை மீட்டெடுப்பது என சேகர்பாபுவின் முன்னால் அடுக்கடுக்கான பணிகள் இந்த ஐந்து ஆண்டுகளுக்கும் காத்துக் கிடக்கின்றன.