மதுரை மாவட்டம் தோப்புப்பட்டியை சேர்ந்தவர் அருண்குமார் (36 ). இவர் தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் மேலாளராக பணிபுரிந்து வருகிறார். இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு தஞ்சை புதிய பஸ் நிலையத்தில் உள்ள வாகன நிறுத்தும் இடத்தில் தனது காரை நிறுத்திவிட்டு கோவையில் நடந்த தனது அலுவலக கூட்டத்திற்கு சென்றார்.
பின்னர் 2 நாட்கள் கழித்து நேற்றுமுன்தினம் இரவு தஞ்சைக்கு வந்த அவர் தனது காரை எடுக்க முயன்றார். அப்போது கார் கதவு திறந்திருந்தது கண்டு அதிர்சசியடைந்தார். காருக்குள் பார்த்தபோது அடையாளம் தெரியாத வாலிபர் ஒருவர் பிணமாக கிடந்தார். உடன் இதுகுறித்து அருண்குமார் தஞ்சை மருத்துவ கல்லூரி போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் காருக்குள் பார்வையிட்டபோது இறந்து கிடந்தவரின் மூக்கில் இருந்து ரத்தம் வந்திருந்தது.
அடையாளம் தெரியாத அளவுக்கு உடல் அழுகி இருந்தது. இதையடுத்து பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தினர். முதல் கட்ட விசாரணையில் காருக்குள் பிணமாகக் கிடந்தவர் தஞ்சை மாவட்டம் பாப்பநாடு பகுதியை சேர்ந்த மணிகண்டன் (27) என்பது தெரிய வந்தது.
அவர் பாப்பாநாட்டில் இருந்து தஞ்சை புதிய பஸ் நிலையத்துக்கு வந்துள்ளார். பின்னர் சரியாக பூட்டப்படாத அருண்குமாரின் காரின் கதவை திறந்து உள்ளே சென்று இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர். அப்போது கார் உள் பக்கமாக பூட்டப்பட்டு விட்டது. இதனை அறியாத மணிகண்டன் காருக்குள்ளே இருந்துள்ளார். சிறிது நேரத்தில் போதிய காற்று இல்லாததால் மூச்சு திணறி மணிகண்டன் காருக்குள்ளே இறந்து இருக்கலாம் என போலீசார் சந்தேகப்படுகின்றனர். அவர் இறந்து 2 நாட்களுக்கு மேல் ஆனதால் உடல் அழுகியது என்று முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
இருந்தாலும் மணிகண்டன் மூச்சு திணறி தான் இறந்தாரா? அல்லது வேறு ஏதும் காரணமா ? என்ற பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தஞ்சை புதிய பேருந்து நிலையத்தில் உள்ள கடைகளில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி காட்சிகளை போலீசார் பார்வையிட்டு வருகின்றனர். பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பிறகுதான் மணிகண்டன் மரணத்தின் உண்மை தன்மை தெரிய வரும் என்று போலீசார் தரப்பில் தெரிவித்தனர்.
மினி லாரி திருடியவர் கைது
தஞ்சை மானோஜிபட்டி, ஈஸ்வரி நகர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மினி லாரிகள் தொடர்ந்து திருட்டுப் போனது. குறிப்பாக வீடுகள் முன்பு நிறுத்தப்பட்டு இருந்த மினி லாரிகள் திருடப்பட்டது. இது குறித்து தஞ்சை மருத்துவ கல்லூரி போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது.
அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். விசாரணையில் பட்டுக்கோட்டை கோட்டை அல்லி கோவில் தெருவை சேர்ந்த மாரிமுத்து (38) என்பவர் மினி லாரிகளை கடத்தியது தெரியவந்தது. இதையடுத்து மாரிமுத்துவை போலீசார் கைது செய்தனர். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணை முடிவில் திருட்டு சம்பவத்தில் வேறு யாருக்கெல்லாம் தொடர்பு உள்ளதா என்பது உள்ளிட்ட பல்வேறு விவரங்கள் கிடைக்கும் என போலீசார் தெரிவித்தனர்.