நெல்லை மாவட்டம் முனைஞ்சிப்பட்டி அருகே காரியாண்டி கிராமத்தைச் சேர்ந்த கலியன் - சிதம்பர வடிவு தம்பதியின் இரண்டாவது மகன் மகேஷ் (27).  இவர் வெளி நாட்டு வேலைக்கு செல்ல பல லட்சம் செலவு செய்து கடந்த மாதம் அனுப்பி வைத்துள்ளனர். இந்த நிலையில் நாகர்கோவிலை சேர்ந்த ஏஜெண்டுகள் தனது மகனை கம்போடியா நாட்டிற்கு சொன்ன வேலைக்கு அனுப்பாமல் மோசடி கும்பலிடம் சிக்க வைத்துள்ளனர் என தெரிய வந்துள்ளதாகவும்,  தனது மகனை நாட்டிற்கு அழைத்து வர பணம் கேட்டு மிரட்டுவதாகவும் மகேஷின் தாய் சிதம்பர வடிவு நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கண்ணீர் மல்க மனு அளித்தார்.




இது குறித்து அவர் கண்ணீருடன் கூறும் பொழுது, நாகர்கோவில் சேர்ந்த ஆண்ட்ரூ அந்தோணி, சிவக்குமார் ஆகியோர் 5 லட்சம் ரூபாய் பணம் வாங்கிக்கொண்டு எனது மகனை டேட்டா என்ட்ரி ஆப்ரேட்டர் பணிக்காக கடந்த மாதம் 7ம் தேதி கம்போடியா நாட்டிற்கு அனுப்பி வைத்தார்கள். ஆனால் அங்கு சட்ட விரோத செயல்களில் ஈடுபடும் கும்பல்களிடம் எனது மகனை வேலை செய்யும்படி கூறியுள்ளனர். அந்த வேலையை பார்க்க விருப்பம் இல்லாமல் எனது மகன் சொந்த ஊர் திரும்ப முயற்சி செய்தும் அவனை அனுப்பாமல் பணம் கேட்டு மிரட்டி வருகின்றனர். இது குறித்து ஏஜெண்டுகளிடம் மகன் விசாரித்த போது இந்த வேலை பிடிக்கவில்லை என்றால் உனது வீட்டில் இரண்டு லட்சத்து 50 ஆயிரம் பணம் வாங்கிக் கொடு உன்னை பத்திரமாக ஊருக்கு அனுப்புகிறோம் என கூறியுள்ளனர். அதன் பேரில் கடந்த மாதம் 25ஆம் தேதி ஒரு லட்சத்து 25 ஆயிரம் ரூபாய் பணத்தை எனது கணவரின் வங்கி கணக்கு மூலம் ஆண்ட்ரூ அந்தோணிக்கு அனுப்பினோம். ஆனாலும் இதுவரை எனது மகனை மீட்டுக் கொண்டு வர நடவடிக்கை எடுக்காமல் மேலும் 2 லட்சம் ரூபாய் பணம் தந்தால் தான் நீ ஊருக்கு செல்ல முடியும் என்று என் மகனின் பாஸ்போர்ட் மற்றும் விசாவை சட்ட விரோதமாக பறித்து வைத்துள்ளனர். எனவே எனது மகனை பத்திரமாக மீட்டு தரவும், எங்களிடம் பணம் கேட்டு மிரட்டி வரும் ஆண்ட்ரூ அந்தோணி மற்றும் சிவக்குமார் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறினார்.




இதுகுறித்து மகேஷின் உறவினர் தாஸ் கூறுகையில், கம்போடியா நாட்டில் டேட்டா என்ட்ரி ஆபரேட்டர் என்ற வேலையில் சேர்த்து விடுவதாக அழைத்து சென்றுவிட்டு அங்கு ஆன்லைன் மூலம் பணமோசடி செய்யும் கும்பலிடம் மகேஷை சிக்க வைத்துள்ளனர். அந்த வேலையை செய்ய விரும்பாமல் சொந்த ஊருக்கு அனுப்பும்படி பலமுறை கேட்டும் அவனை அனுப்பாமல் ஏஜெண்டுகள் பணம் கேட்டு மிரட்டி வருகின்றனர். மேலும் இதுகுறித்து காவல்துறையிடம் புகார் அளித்தால் கொன்று விடுவோம் என மிரட்டி வருகின்றனர். எனவே மகேஷின் உயிருக்கும் உத்தரவாதம் இல்லை, அதே போல் அவர்களது குடும்பத்தையும் பணம் கேட்டு மிரட்டி வருவதால் அவர்கள் உயிருக்கும் பாதுகாப்பு இல்லை. எனவே மாவட்ட ஆட்சியர் உடனடியாக இதில் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுத்து மகேஷை மீட்டு தர வேண்டும் என்று தெரிவித்தார்.






இதற்கிடையில் மகேஷ் கம்போடியாவில் இருந்தபடி வெளியிட்ட வீடியோவில், ”இங்கு என்னை சுற்றி என்ன நடக்கிறது என்றே தெரியவில்லை. என் உயிருக்கு உத்தரவாதம் இல்லை. டேட்டா எண்ட்ரி வேலை என கூறி என்னை இங்கு அனுப்பி வைத்து விட்டு தவறான வேலை செய்ய சொல்கின்றனர். எனவே தமிழக அரசு என்னை பத்திரமாக மீட்டுக் கொடுங்கள்” என பேசி உள்ளார். வெளிநாட்டு வேலை மோகத்தால் தவறான நபர்கள் மூலம் கம்போடியா நாட்டிற்கு சென்று மோசடி கும்பலிடம் சிக்கி தவிக்கும் மகனை மீட்டு தரும்படி தாய் கண்ணீருன் மனு அளித்த சம்பவம் நெல்லையில் பரபரப்பு ஏற்படுகிறது