கடலூர் மாவட்டம் சிதம்பரத்தை அடுத்த  புவனகிரி சின்னப்ப முதலி தெருவைச் சேர்ந்தவர் கரிகாலன் (52). இவர் பெயிண்டர் வேலை செய்து வருகிறார். இவருக்கும்  பச்சையம்மாள்  (43)  என்பவருடன் திருமணமாகி 2 மகள் உள்ளனர். இந்நிலையில்  கரிகாலனுக்கு வேறு ஒரு பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டு பல ஆண்டுகளாக மனைவியை விட்டு பிரிந்து வாழ்ந்து வந்துள்ளார்.  இந்த சூழலில் அவ்வப்போது வீட்டிற்கு வந்து மனைவி பச்சையம்மாவிடம்  தகராறில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் இன்று மீண்டும் வீட்டிற்கு வந்த கரிகாலனுக்கும் அவரது மகள் கெளசல்யாவிற்கும் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த கரிகாலன் மகளை அடிக்க முயன்றுள்ளார். இதைப் பார்த்த பச்சையம்மாள் கரிகாலனை தடுக்க முயன்றார்.  




அப்போது கரிகாலன் அருகில் இருந்த அரிவாளை எடுத்து தனது மனைவி பச்சையம்மாளை தலை, கழுத்து, தாடை உள்ளிட்ட பல இடங்களில் சரமாரியாக வெட்டி உள்ளார்.  இதில் படுகாயமடைந்து ரத்த வெள்ளத்தில் அலறி துடித்து கீழே விழுந்த பச்சையம்மாள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து கரிகாலன் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார்.




இச்சம்பவம் தொடர்பாக அருகில் உள்ளவர்கள் புவனகிரி காவல்நிலையத்திற்கு தகவல் அளித்துள்ளனர். தகவலை அடுத்து புவனகிரி காவல்நிலைய காவல் ஆய்வாளர் பாண்டிச்செல்வி மற்றும் காவலர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டுள்ளனர். அதனைத்  தொடர்ந்து கொலை செய்யப்பட்டு இறந்து கிடந்த பச்சையம்மாளின் சடலத்தை கைப்பற்றி காவல்துறையினர் உடல்கூறு ஆய்வுக்காக சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த கொலை சம்பவம் குறித்து பச்சையம்மாள் மகள் கௌசல்யா அளித்த புகாரின் பேரில் புவனகிரி காவல் நிலையத்தில் கொலை வழக்குப்பதிவு செய்து தலைமறைவான கரிகாலனை தீவிரமாக தேடி வருகின்றனர்.




இந்த கொரோனா வைரஸ் தொற்றின் பேரிடர் காலத்தில் பலரும் தங்கள் உயிரைக் காக்க வீடுகளில் முடங்கி கிடக்கும் வேளையில் பிரித்து சென்ற கணவன் மீண்டும் வந்து மனைவியிடம் சண்டையிட்டு அவரை கொடூரமாக வெட்டி கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இந்த கொரோனோ வைரஸ் தொற்றின் அச்சம், ஊரடங்கு உத்தரவால் வேலை இழப்பு, வெளி நிகழ்வுகளில் பங்கேற்பு, விளையாட்டு, பொழுதுபோக்கு என எந்த ஒரு செயல்களிலும் மக்கள் தங்களை ஈடுபடுத்திக் கொள்ள முடியாமல் மிகுந்த மன உளைச்சலுக்கும், மன அழுத்தத்திற்கு ஆளாகி உள்ளனர். இதன் காரணமாக கொலை,கொள்ளை,பாலியல் வன்கொடுமை, தற்கொலை முயற்சி என ஏராளமான சம்பவங்கள் நடந்தேறி வருகிறது.  இதற்காக தீர்வு காண்பதற்கு அரசு இலவச தொடர்பு எண்களை அறிவித்து மனநல ஆலோசகர்களை நியமனம் செய்து ஆலோசனை பெற வழிவகை செய்துள்ளது. 




மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் உண்டானாலோ, அதில் இருந்து மீண்டு மாற்றம் ஏற்பட கீழ்காணும் சேவை எண்களுக்கு தொடர்பு கொண்டு பேசவும். மாநில உதவிமையம் : 104 சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -24640050.