தங்கள் மகளுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு சம்பந்தப்பட்ட நபருக்கு தண்டனை வழங்கிய பிரிட்டன் நீதிமன்றத்திற்கு பெற்றோர் நன்றி சொல்லியுள்ளனர்.
மார்ச் 2021ல் புனேவைச் சேர்ந்த ஹர்லீன் கவுர் தனது மேற்படிப்புக்காக பிரிட்டன் சென்றார். அவருடன் அவரது கணவர் சட்ப்ரீத் சிங் காந்தி டிபன்டண்ட் விசாவில் சென்றார். ஆனால் காந்திக்கு எப்போதும் மனைவி மீது சந்தேகம். அவர் செல்லுமிடத்தை கேட்டு நச்சரிப்பது. போனை சோதனை செய்வது. யார் யாருடன் பேசுகிறார். எங்கு செல்கிறார் என்று வேவு பார்ப்பது என்பதை மட்டுமே முழு நேர தொழிலாக கொண்டிருந்திருகிறார். அது மட்டுமல்லாமல் அவ்வப்போது கை நீட்டியும் உள்ளார். தனக்கு நேர்ந்த கொடுமைகள் பற்றி ஹர்லீன் கவுர் பெற்றோரிடமும் கூறியுள்ளார். அப்போதே அவரை போலீஸில் புகார் அளிக்குமாறு அவர்கள் வலியுறுத்தியுள்ளனர். ஆனால் ஹர்லீன் கவுர் ஏனோ சற்று அஜாக்கிரதையாக இருந்துள்ளார். இந்நிலையில் காந்தி குடிப்பழக்கத்திற்கு ஆளாகி இன்னும் அதிகமாக துன்புறுத்தல்களை செய்துள்ளார். 23 வயதான ஹர்லீன் தாய்நாட்டில் குழந்தை, படிக்க வந்த இடத்தில் படிக்க முடியாமல் கணவரின் சந்தேகத் தொல்லை, குடும்ப வன்முறை என்று
மிகவும் மன அழுத்தத்தில் இருந்துள்ளார். இந்த உறவே வேண்டாம் என்று அவர் தனிக் குடித்தனம் சென்றுள்ளார். இந்நிலையில் கடந்த செப்டம்பர் 5ஆம் தேதி அன்று ஹர்லீன் இருந்த அப்பார்ட்மென்ட்டுக்கு சென்ற காந்தி அவருடன் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். குழந்தையை இந்தியாவில் பெற்றோருடன் விட்டுவிட்டு இங்கு வந்து பல ஆண்களுடன் சுற்றித் திரிவதாக விமர்சித்துள்ளார். பின்னர் கத்தியை எடுத்து சற்றும் எதிர்பாராத நேரத்தில் ஹர்லீனை குத்தியுள்ளார். இதில் ஹர்லீன் உயிரிழந்தார். இதற்கு முன்னர் ஹர்லீன் சகோதரி சிம்ரனும் மர்மமான முறையில் உயிரிழந்தார். ஹாக்கி வீராங்கனையான அவர் ஹார்ட் அட்டாக்கில் இறந்துவிட்டதாக காந்தி கூறியுள்ளார். இந்நிலையில் இரண்டு மகள்களையும் இழந்த பெற்றோர் நீதிக்காக காத்திருந்தனர். அப்போது வழக்கை விசாரித்த பிரிட்டன் நீதிமன்றம் ஹர்லீனை கொலை செய்ததாக காந்திக்கு தண்டனையை உறுதி செய்தது. இந்நிலையில் தங்கள் இளைய மகள் சிம்ரன் மரண வழக்கையும் விசாரித்து காந்திக்கு அதிலும் தண்டனை வழங்க வேண்டும் என்று பெற்றோர் கோரியுள்ளனர்.
குடும்ப வன்முறை என்பது எப்போது ஒரு பெண் முதல் அடியை முதல் அவதூறை பொறுத்துக் கொள்கிறாரோ அப்போது தான் ஆரம்பிக்கிறது என்று கேரளாவில் இளம் பெண் விஸ்மயா வழக்கின் போது ஒரு பெண் காவல் உயர் அதிகாரி கூறியிருந்தார். இதை எப்போதும் எல்லா பெண்களும் நினைவில் கொண்டால் இதுபோன்ற வன்முறைகளில் இருந்து தற்காத்துக் கொள்ளலாம்.