திருவள்ளூர் மாவட்டத்தில் தனது மனைவியுடன் தனிக்குடித்தனம் நடத்திய காதலன் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் தலைமறைவாக இருந்த அப்பெண்ணின் கணவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
திருவள்ளூர் மாவட்டம் புழல் லட்சுமிபுரம் கல்பாளையம் பகுதியைச் சேர்ந்த சுதாசந்தர் என்ற 22 வயது இளைஞர் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்துள்ளார். இவர் கடந்த ஜனவரி 31 ஆம் தேதி இளம்பெண் ஒருவருடன் புழல் வினாயகபுரம் பகுதியில் சென்றுக்கொண்டிருந்தார். அப்போது பைக்கில் வந்த கும்பல் ஒன்று ஆட்டோவை மறித்து நிறுத்தியதோடு, சுதாசந்தருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
பின்னர் கத்தியால் அவரை பல இடங்களில் வெட்டி விட்டு அங்கிருந்து தப்பிச் சென்றனர். இந்த சம்பவத்தில் சுதாசந்தர் இரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பலியானார். இதுபற்றி தகவலறிந்த புழல் போலீசார், சம்பவ இடத்திற்கு சென்று சுதாசந்தர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் கொலை வழக்குப்பதிவு செய்து சம்பவம் நடந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தனர்.
பின்னர் நடைபெற்ற விசாரணையில் சுதாசந்தருடன் ஆட்டோவில் சென்றது ஆவடியை அடுத்த மோரை பகுதியை சேர்ந்த ராகிணி என்பது தெரிய வந்தது. அவரை பிடித்து விசாரணை நடத்தியதில் பல திடுக்கிடும் தகவல்கள் கிடைத்தது. அதாவது கடந்த 3 வருடங்களாக சுதாசந்தரும் ராகிணியும் காதலித்து வந்த நிலையில், ராகிணி வீட்டில் காதலுக்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இதனைத் தொடர்ந்து ஒரு வருடத்திற்கு முன் ராகிணியை பெற்றோர் வேறு ஒருவருக்கு திருமணம் செய்து வைத்துள்ளனர். ஆனாலும் தொடர்ந்து ராகிணி சுதாசந்தருடன் தொடர்பில் இருந்து வந்துள்ளார்.
இதுகுறித்து அறிந்த ராகிணியின் கணவர் வசந்த், அவரது அண்ணன்கள் ராகிணியை கண்டித்துள்ளனர். இதில் தகராறு ஏற்படவே ராகிணி ஒரு மாதத்திற்கு முன் வீட்டை விட்டு வெளியேறி சுதாசந்தருடன் சென்றுள்ளார். இருவரும் ரெட்டேரி பகுதியில் வீடு வாடகைக்கு எடுத்து தங்கியிருந்தது தெரிய வந்தது. மேலும் சுதாசந்தரை ராகிணியின் கணவர் திட்டமிட்டு கொலை செய்தது கண்டறியப்பட்டது.
இதனைத் தொடர்ந்து இந்த கொலை சம்பவத்தில் ஈடுபட்ட ஆட்டோ டிரைவர் கார்த்திக், பரத். உதயா ஆகியோரை போலீசார் கைது செய்தனர். ராகிணியின் கணவர் வசந்த், அவரது தந்தை வாசுதேவன் இருவரும் 10 நாட்களாக தலைமறைவாக இருந்த நிலையில் நேற்று மாலை அவர்கள் இருவரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.