விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள சிந்துராஜபுரம் தேவி நகரில் வசித்து வருபவர்கள் பத்மநாபன், தனசேகர், சிவக்குமார், சிவ சிதம்பரம் ஆகியோர். இவர்கள் கடந்த 25 ஆம் தேதி வீடுகளை பூட்டி விட்டு வெளியே சென்றதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் இதனை நோட்டமிட்ட மர்ம நபர்கள் அதிகாலையில் பூட்டப்பட்ட 4 வீடுகளிலும் அடுத்தடுத்து புகுந்து பூட்டை உடைத்து உள்ளே சென்று உள்ளனர். மேலும் பீரோவில் இருந்த நகைகளையும் திருடிச் சென்றுள்ளனர். இந்த நிலையில் பத்மநாபன் வீடு திரும்பிய போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த நகைகள் கொள்ளையடிக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது. இது குறித்து பத்மநாபன் சிவகாசி டவுண் போலிசில் புகார் தெரிவித்தார். அவர் அளித்த புகாரின் பேரில் போலிசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது அருகே உள்ள 3 வீடுகள் என மொத்தம் 4 வீடுகளில் கொள்ளையடிக்கப்பட்டது தெரிய வந்தது. இதில் பத்மநாபன் வீட்டில் மட்டும் 90 சவரன் நகைகள் கொள்ளை போயுள்ளது.
இந்த வழக்கு தொடர்பாக சப் இன்ஸ்பெக்டர் சுரேந்திரகுமார், செல்வராஜ் தலைமையில் 5 பேர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது. தொடர்ந்து கொள்ளை சம்பவம் மற்றும் கொள்ளை முயற்சி நடைபெற்ற வீடுகளில் ஆய்வு செய்தனர். அப்போது கிடைக்கப்பெற்ற தகவல்களின் அடிப்படையில் இது போன்று தமிழகத்தில் நடைபெற்ற கொள்ளை சம்பவங்கள் குறித்து தகவல்களை சேகரித்தோடு இதில் கைது செய்யப்பட்டவர்களின் விவரங்களையும் சேகரித்தனர். அப்போது இதே போன்று கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட சென்னை நெற்குன்றத்தைச் சேர்ந்த சூர்யா(30), மற்றும் சிவா(27) ஆகிய 2 பேர் சிவகாசி அருகே சித்துராஜபுரம் தேவி நகரில் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டது தெரிய வந்தது. தொடர்ந்து இருவரையும் கைது செய்வதற்கான நடவடிக்கையாக இருவரது முகவரி மற்றும் விவரங்களை சேகரித்தனர். தொடர்ந்து அவர்களை கைது செய்த போலிசார் அவர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டனர். அதில் தமிழகத்தில் ஈரோடு, காரைக்குடி, திருச்ச்சி, திண்டுக்கல் உள்ளிட்ட பல இடங்களில் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டது தெரிய வந்ததுள்ளது.
இதுமட்டுமின்றி இவர்கள் கொள்ளையடித்த நகைகள் மற்றும் பணத்தை எடுத்துக்கொண்டு தெலுங்கானாவில் உள்ள உறவினர்கள் வீடுகளில் தஞ்சம் அடைவது வழக்கம் எனவும் போலிசாரின் விசாரணையில் தெரிய வந்துள்ளது. மேலும் கைது செய்யப்பட்ட இருவரிடம் இருந்து சுமார் 25 சவரன் தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது. மேலும் இக்கொள்ளை சம்பவங்களில் வேறு யாருக்கேனும் தொடர்பு உள்ளதா? என்பன உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தமிழகத்தில் பல்வேறு இடங்களில் தொடர் திருட்டில் ஈடுபட்டு வந்த இருவர் சிவகாசியில் திருடி மாட்டிகொண்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்