தமிழ்நாட்டில் கொரோனா பரவல் காரணமாக தற்போது பல்வேறு கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கு அமலில் உள்ளது. கடந்த ஒரு வாரம் முதலாக பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டாலும், தற்போது வரை வணிகநிறுவனங்கள், நகைக்கடைகள், திரையரங்குகள் உள்ளிட்ட பலவற்றிற்கு தடைகள் நீடிக்கிறது. அவற்றில் உடற்பயிற்சி கூடத்திற்கான தடையும் தொடர்கிறது.


இந்த நிலையில், சென்னை, தாம்பரம் அடுத்த முகாம் சாலையில் உடற்பயிற்சி கூடம் ஒன்று உள்ளது. இந்த உடற்பயிற்சியின் உரிமையாளர் ஊரடங்கு காலத்திலும் பின்வாசலை திறந்து வைத்து, உடற்பயிற்சி அளித்து வந்துள்ளார். இதற்காக, அங்கு பயிற்சி பெறும் பலரும் காலையில் வந்து சில மணிநேரம் பயிற்சியில் ஈடுபடுவதை வாடிக்கையாக வைத்திருந்தனர். அவர்களில் பெண்கள் சிலரும் பயிற்சியில் ஈடுபட்டு வந்துள்ளனர்.


இந்த நிலையில், இந்த உடற்பயிற்சி கூடத்தில் பயிற்சியாளராக பிரேம் என்பவர் செயல்பட்டு வந்துள்ளார். அவரே அனைவருக்கும் பயிற்சி அளித்து வந்துள்ளார். இந்த நிலையில், கடந்த இரு தினங்களுக்கு முன்பு  வழக்கம்போல அனைவரும் உடற்பயிற்சி கூடத்தில் பயிற்சி செய்து கொண்டிருந்தனர். அனைவரும் பயிற்சி முடிந்து சென்ற பின்னர், அங்கு வழக்கமாக உடற்பயிற்சிக்கு வரும் இளம்பெண் ஒருவருக்கு மட்டும் சிறப்பு பயிற்சி அளிப்பதாகவும், அதற்காக காத்திருக்குமாறும் கூறியுள்ளார்.




அனைவரும் சென்ற பிறகு, அந்த பெண்ணுக்கு பயிற்சி அளிப்பதாக கூறி அந்த பெண்ணிடம் தகாத முறையில் ஈடுபட்டுள்ளார். இதனால், அதிர்ச்சியடைந்த அந்த பெண் உடனடியாக அங்கிருந்து வெளியேறிவிட்டார். பின்னர், இந்த சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்ட அந்த பெண் தனது முகநூல் பக்கத்திலும் பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், பயிற்சியாளர் பிரேம் மீது மிகுந்த மரியாதை வைத்திருந்ததாகவும், ஆனால் தாங்கள் தரம்தாழ்ந்து நடந்து கொண்டதாகவும், தனக்கு நிகழ்ந்தது போல வேறு யாருக்கும் நடந்து விடக்கூடாது என்பதற்காகவே இதைப் பதிவிடுகிறேன் என்றும் அவர் பதிவிட்டுள்ளார். இதையடுத்து, பயிற்சியாளர் பிரேம்தான் உணர்ச்சிவசப்பட்டு அவ்வாறு நடந்துகொண்டதாகவும், தங்களது கட்டணத்தை முழுவதும் திருப்பித் தந்துவிடுகிறேன் என்றும், தாங்கள் மீண்டும் பயிற்சிக்கூடத்திற்கு வர வேண்டும் என்றும் தொலைபேசியில் சமாதானப்படுத்த முயற்சி செய்துள்ளார். ஆனாலும். இதனால், மன உளைச்சலுக்கு ஆளான அந்தப் பெண் அவருடன் பேசிய அந்த உரையாடலையும் தனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.


அவர் பகிர்ந்துள்ள தொலைபேசி உரையாடலில், அந்த பெண் தங்கள் மீது மிகுந்த நம்பிக்கை வைத்தே பயிற்சிக்கு வந்தேன். இரண்டு நாட்களாக மிகுந்த மன உளைச்சலில் உள்ளேன் என்றும், சார் என்று உங்களை கூப்பிடுவதற்கே தயக்கமாக உள்ளது என்றும் வேதனையுடன் பேசியுள்ளார். இதுதொடர்பாக, காவல் நிலையத்தில் இதுவரை புகார் ஏதும் பதிவாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.