கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி என்றால் முருங்கை சாகுபடி பெயர் பெற்றது. இங்கு விளையும் விதை முருங்கை, ஒட்டுரக முருங்கைக்காய்கள் அதிக நீளம் மற்றும் சுவை மிகுந்தது என்பதால் கரூர் முருங்கைக்காய் என்றால் தமிழகம் முழுவதும் பிரசித்தி பெற்றது. கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி சுற்றுவட்டார பகுதிகளான சேந்தமங்கலம், நாகம்பள்ளி, கீரனூர், வடக்கூர், கோவிலூர், சாத்தப்பாடி, தெத்துப்பட்டி, புங்கம்பாடி, ஈசநத்தம் உள்ளிட்ட 200-க்கும் அதிகமான கிராமங்களில் 15 ஆயிரத்துக்கும் அதிகமான விவசாயிகள் 10 ஆயிரம் ஏக்கரில் முருங்கை சாகுபடி செய்கின்றனர்.
இதைத்தவிர க.பரமத்தி ஒன்றியத்தில் சின்னதாராபுரம், தென்னிலை, அஞ்சூர், கார்வழி, துக்காச்சி, ராஜபுரம் உள்ளிட்ட ஊராட்சிகளில் 10 ஆயிரத்துக்கும் அதிகமான பரப்பளவில் முருங்கை சாகுபடி செய்யப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் முருங்கை பருவ காலத்தில் தினம் காலை 8 மெட்ரிக் டன் வரை அறுவடை செய்யப்படுகிறது. அவ்வாறு அறுவடை செய்யப்படும் முருங்கைக்காய் 25 எண்ணிக்கை கொண்ட கட்டுகளாக கட்டப்பட்டு ஆறு ரோடு, மலைக்கோயிலூர், மூலனூர், அரவக்குறிச்சி புறவழிச்சாலை, கன்னிவாடி, சின்னதாராபுரம், மார்க்கம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள 15-க்கும் அதிகமாக தனியார் கமிஷன் மண்டிகள் மூலம் ஏல முறையில் விற்பனை செய்யப்படுகிறது.
இங்கு ஏலத்தில் எடுக்கப்படும் முருங்கைக்காய்கள் ஆந்திரா, கர்நாடகா, மேற்கு வங்காளம், கேரளா, மகாராஷ்டிரம் உள்ளிட்ட பல மாநிலங்களுக்கு தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட பல நகரங்களுக்கும் அனுப்பப்படுகிறது. இந்நிலையில் கொரோனா தொடர் பரவல் காரணமாக தமிழ்நாடு அரசு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நிலையில் போக்குவரத்து முடங்கியுள்ளது. போக்குவரத்து முடக்கத்தால் வெளிமாநிலங்களுக்கு முருங்கைகளை கொண்டு செல்ல முடியவில்லை. உள்ளூர் தேவைகளான திருமணம், வளைகாப்பு உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் முருங்கை தேவையாக உள்ளது. இருந்தபோதிலும் தற்போது ஊரடங்கு உத்தரவால் எந்த பொது நிகழ்ச்சியிலும் நடைபெறாத நிலையில், உள்ளூர் தேவைக்கும் முருங்கை தேவை குறைவு என்பதாலும் முருங்கைக் காய்களை பறிக்காமல் மரங்களிலேயே விட்டுவிடுகின்றனர். ஒவ்வொரு மரத்திலும் நூற்றுக்கணக்கான முருங்கை காய்கள் கருகுவதால் விவசாயிகள் வேதனையில் உள்ளனர்.
இது குறித்து விவசாயி முருகேசன் கூறுகையில், ”ஒவ்வொரு ஆண்டும், மார்ச் தொடங்கி செப்டம்பர் வரை ஏழு மாதங்களுக்கு முருங்கை மகசூல் பெற முடியும் மீதமுள்ள 3 முதல் 4 மாதங்களில் முருங்கைக்காயின் விளைச்சல் கொஞ்சம் குறைவாக இருக்கும். இந்த வகையில் இன்னும் ஓரிரு மாதங்களுக்கு மகசூல் சிறப்பாக இருக்கும். ஆனால் தற்போது உலகையே உலுக்கி வரும் நோய்த்தொற்று காரணமாக தமிழ்நாடு அரசு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளதால் அறுவடை செய்யப்படும் முருங்கைக்காய்களை கமிஷன் மண்டிகளுக்கு கொண்டு செல்வதில் நடைமுறைப் பிரச்சனை உள்ளது. வெளியூர்களில், வெளிமாநிலங்கள் அனுப்புவதிலும் சிக்கல் உள்ளது. அத்துடன் உள்ளூரில் முருங்கைகளுக்கு போதிய விலை கிடைக்கவில்லை. இதனால் ஒவ்வொரு மரத்திலும் நூற்றுக்கணக்கான முருங்கைக்காய்கள் காய்ந்து கருகுகின்றன. இதனால் இந்த ஆண்டின் முருங்கை சாகுபடியாளர்கள் வேதனையில் உள்ளனர்” என்று முருங்கை விவசாயி வேதனையுடன் தெரிவித்தார்.