கொரோனா வைரஸ் தொற்று காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக இந்தியாவில் அவ்வப்போது ஊரடங்கு அறிவிக்கப்பட்டு வருகிறது. பல்வேறு மாநிலங்களில் தொற்று பாதிப்புக்கு ஏற்றவாறு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது. அந்தவகையில் கடந்த ஆண்டு கொரோனா ஊரடங்கின் போது பெண் ஒருவர் முகக்கவசம் அணியாமல் வெளியே வந்துள்ளார். அவர் மீது வழக்குப்பதிவு செய்யாமல் காவல்துறை கான்ஸ்டபிள் ஒருவர் அவரை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இந்தச் சம்பவம் அனைவரும் பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 


குஜராத் மாநிலம் சூரத் பகுதியைச் சேர்ந்த காவல்துறை கான்ஸ்டபிள் நரேஸ் கபாடியா. இவர் கடந்த ஜனவரி மாதம் இவர் பெண்ணுடன் சண்டை போடுவது தொடர்பாக வீடியோ ஒன்று சமூக வலைதளத்தில் வைரலானது. அதன்பின்னர் இவருடைய மனைவி அந்தப் பெண் மற்றும் அவரது கணவர் மீது எஸ்சி, எஸ்டி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் புகார் அளித்தார். அதில் அந்தப் பெண்ணும் அவருடைய கணவரும் கான்ஸ்டபிளை ஜாதியின் பெயரில் கொடுமை படுத்துவதாக கூறியதாக தெரிகிறது. இந்த வழக்கு தொடர்பாக காவல்துறையினர் விசாரணை நடத்தியுள்ளனர். அப்போது ஒரு திடுக்கிடும் உண்மை வெளியாகியுள்ளது. 




அதாவது கடந்த 2020-ஆம் ஆண்டு ஊரடங்கு காலத்தில் கான்ஸ்டபிள் கபாடியா பால்சானா பகுதியில் பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளார். அந்தச் சமயத்தில் இப்பெண் முகக்கவசம் அணியாமல் வெளியே பால் வாங்க வந்துள்ளார். அப்போது அவரை பிடித்த கபாடியா அவர் மீது வழக்குப்பதிவு செய்யாமல் வேறு இடத்திற்கு அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளதாக கூறப்படுகிறது. அத்துடன் அப்பெண்ணை நிர்வாணமாக படம் எடுத்ததாகவும் அதை வைத்து மிரட்டி கடந்த ஓராண்டாக தொடர்ந்து பாலியல் வன்கொடுமை செய்து வந்ததாக அப்பெண் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து தற்போது கான்ஸ்டபிள் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 


இருப்பினும் இந்த விவகாரம் தொடர்பாக மற்றொரு காவலர், "கபாடியாவிற்கு அந்தப் பெண்ணுடன், கடந்த ஓராண்டிற்கு மேலாக தகாத உறவு இருந்தது வந்தது. அவர்கள் அடிக்கடி தனிமையில் இருந்து வந்தனர். எனினும் தற்போது அவர்கள் இருவருக்கு நடுவே பிரச்னை ஏற்படவே அப்பெண் புகார் அளித்துள்ளதார்" எனத் தெரிவித்துள்ளார். இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட பெண்ணிற்கு ஏற்கெனவே திருமணமானமவர் என்பது குறிப்பிடத்தக்கது. 


கொரோனா ஊரடங்கு காலத்தில் மக்களை பாதுகாக்க வேண்டிய காவல்துறையின் காவலர் மீதே இந்த மாதிரியான பாலியல் குற்றச்சாட்டு எழுந்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக விரைவாக விசாரணை செய்து அந்த காவலர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். 


மேலும் படிக்க:  புகாரளித்த சிறுமி.. ஜாமினில் வந்து வன்கொடுமை செய்த கொடூரன்