சமூக வலைதளத்தில் விழிப்புணர்வு வேண்டும் என பலதரப்பில் இருந்து அறிவுரைகள் வந்தாலும், இன்றைய இளம் தலைமுறை அதை செவி கொடுத்து கேட்பதில்லை. இதனால், அடிக்கடி பிரச்சனைகளையும், சில நேரங்களில் அபரிவிதங்களிலும் சிக்கிக் கொள்கின்றனர். இணையம் பல நேரங்களில் உதவுகிறது; சில நேரங்களில் சிக்கலாகி விடுகிறது. அது கத்தி போல; பயன்படுத்துவோரை பொருத்தது. 


காய் வெட்டி பயன்படுத்துவதும், கையை வெட்டி பயன்படுத்துவதும் பயன்பாட்டாளர்களின் பொறுப்பு. இப்போது நாம் பார்க்கப் போகும் செய்தியும் அப்படி தான். சென்னை வில்லிவாக்கத்தில் வசிப்பவர் தாமோதரன்(பெயர் மாற்றப்பட்டுள்ளது). 32 வயதான அவர், சென்னை அண்ணாநகர் துணை காவல் ஆணையாளர் அலுவலகத்தில் ஒரு புகார் அளித்தார். அந்த புகாரை படித்து பார்த்தவர்களுக்கு ஒரே அதிர்ச்சி... அப்படி என்ன அதில் இருந்தது. 


தாமோதரன், சமூக வலைதளங்களில் ஆக்டிவ்வாக இருந்துள்ளார். அவருக்கு இளம் பெண் ஒருவர் பேஸ்புக்கில் ப்ரெண்ட் ரிக்வொஸ்ட் கொடுத்துள்ளார். அழகாக இருந்ததால் அதை ஏற்ற தாமோதரன், அவருடன் நட்பானார்.  தினமும் பேஸ்புக்கில் பரஸ்பரம் பேசத் தொடங்கினர். ஒரு கட்டத்தில் அந்த இளம் பெண், ‛வா... நாம ரெண்டும் பேரும் இன்னும் நெருக்கமாகலாம்...’ என கூறியுள்ளார். 




தாமோதரனும் அதற்கு விருப்பம் தெரிவித்துள்ளார். உடனே அந்த பெண் தனது வாட்ஸ்ஆப் எண்ணை அவருக்கு பகிர்ந்துள்ளார். அதன் பின் பேஸ்புக்கில் இருந்து வாட்ஸ்ஆப் எண்ணுக்கு மாறிய அவர்கள், தினமும் வீடியோ கால் மூலம் பேசியுள்ளனர். ஒரு கட்டத்தில் அந்த பெண், ‛உன்னை எனக்கு ரொம்ப பிடித்திருக்கிறது...’என்று கூறி வீடியோ காலில் தனது ஆடைகளை ஒவ்வொன்றாக கழற்றி நிர்வாணமாக தோன்றியுள்ளார். தாமோதரனும் அதில் வசியப்பட்டு, இணங்கியுள்ளார்.


அப்போது, திடீரென இணைப்பை துண்டித்துள்ளார் அந்த பெண். சிறிது நேரம் கழித்து அந்த பெண்ணிடம் இருந்து ஒரு ஸ்கீரின் ஷாட் போட்டோ வந்துள்ளது. நிர்வாண கோலத்தில் இருந்த அந்த பெண்ணை தாமோதரன் ரசித்த போது எடுக்கப்பட்ட ஸ்கிரீன் ஷாட் அது. அதை கண்டதும் அதிர்ச்சியடைந்த தாமோதரன், இதை ஏன் அனுப்பினாய் என்று கேட்டுள்ளார். அப்போது பேசிய அந்த பெண், நாம் இருவரும் நிர்வாண கோலத்தில் உரையாடிய வீடியோ மற்றும் போட்டோ தன்னிடம் உள்ளதாகவும், அதை நான் சமூக வலைதளங்களில் வெளியிடுவேன் என்றும் மிரட்டியுள்ளார். 


வெளியிடாமல் இருக்க... தனக்கு ரூ.50 ஆயிரம் தர வேண்டும் என்றும் மிரட்டியுள்ளார். அதிர்ந்து போன தாமோதரன், வெளியில் தெரிந்தால் பிரச்சனையாகிவிடும் என்பதால், பயந்து போய் அந்த பெண்ணுக்கு ரூ.50 ஆயிரத்தை அனுப்பியுள்ளார். அதன் பின் பிரச்சனை ஓயவில்லை. இளம் பெண் நண்பர் என்று ஒருவர், தாமோதரனுக்கு போன் செய்து அடிக்கடி பணம் கேட்டு மிரட்டியுள்ளார். இதனால் அச்சமடைந்த தாமோதரன் வேறு வழியின்றி குடும்பத்தாரிடம் விசயத்தை கூறியுள்ளார். 


அவர்கள் அறிவுரையில், சென்னை அண்ணாநகர் காவல் துணை ஆணையாளர் அலுவலகத்தில் புகார் செய்துள்ளார். புகார் குறித்து விசாரணை நடத்தியதில், சம்மந்தப்பட்ட பெண் குஜராத்தை சேர்ந்தவர் என்பது தெரியவந்துள்ளது. இது தொடர்பாக மேலும் விரிவான விசாரணை நடந்து வருகிறது.