குஜராத் மாநிலத்தில் அமைந்துள்ளது வதோரா. வதோரா நகரத்தில் உள்ள ஜம்புவாவில் உள்ள தேசிய நெடுஞ்சாலை அருகே நேற்று நள்ளிரவு 19 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் சடலமாக மீட்டெடுக்கப்பட்டார். இதையடுத்து, அந்த பெண்ணின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பிய காவல்துறையினர் 23 வயது இளைஞரை கைது செய்தனர்.


போலீசார் நடத்திய விசாரணையில் உயிரிழந்த பெண் திரிஷா சோலங்கி என்று தெரியவந்தது. திரிஷாவிற்கு மூன்று ஆண்டுகளுக்கு முன்பு கல்பேஷ் தாகோர் என்ற இளைஞர் நண்பராக அறிமுகமாகியுள்ளார். தொடக்கத்தில் கல்பேஷை நண்பராக ஏற்றுக்கொள்ள திரிஷா மிகவும் தயக்கம் காட்டியுள்ளார். ஆனால், தனது நட்பை ஏற்றுக்கொள்ளாவிட்டால் தற்கொலை செய்துகொள்வதாக திரிஷாவை கல்பேஷ் மிரட்டியுள்ளார்.




பின்னர், திரிஷா தனது சொந்த ஊரான கோத்ராவிற்கு சென்றுவிட்டார். அதன்பின்பு, இருவருக்கும் இடையே தொடர்பில்லாமல் போய்விட்டது. திரிஷா குஜராத் காவல்துறையில் பணியில் சேர்வதற்காக தீவிர பயிற்சி மேற்கொண்டு வந்தார். இதற்காக, மீண்டும் வதோராவிற்கு வந்த திரிஷா தனது தாய்மாமன் வீட்டில் தங்கி தீவிரமாக படித்து வந்தார். இதையறிந்த, கல்பேஷ் மீண்டும் திரிஷாவை பின்தொடர ஆரம்பித்துள்ளார்.


இந்த நிலையில், இந்த பிரச்சினையை சுமூகமாக முடிக்க ஜம்புவா பகுதிக்கு அருகில் உள்ள தேசிய நெடுஞ்சாலை அருகே திரிஷாவை கல்பேஷ் அழைத்துள்ளார். கல்பேஷ் தனது நண்பர் ஒருவரை அழைத்துச் சென்றுள்ளார். அப்போது, கல்பேஷ் தனது நண்பரிடம் தனக்கு ஒரு வேலை உள்ளதாகவும், அதை முடித்துவிட்டு வருவதாகவும் நெடுஞ்சாலையின் சற்று தொலைவில் தனியாக சென்றுள்ளார். ஆள் நடமாட்டம் இல்லாத வெறிச்சோடியான அந்த இடத்திற்கு திரிஷாவை வற்புறுத்தி வரவழைத்துள்ளார்.


திரிஷாவை கொலை செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் தயாராக வந்திருந்த கல்பேஷ் கத்தி ஒன்றையும் மறைத்து கொண்டு வந்துள்ளார். திரிஷாவிடம் கல்பேஷ் அவரது வேறு யாரையும் விரும்புகிறாயா? என்று கேட்டுள்ளார். அதற்கு திரிஷா பதில் அளிக்க மறுத்துள்ளார். இதனால்,ஆத்திரமடைந்த  கல்பேஷ் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் திரிஷாவை கழுத்து, காது மற்றும் தலையில் சரமாரியாக குத்தியுள்ளார்.




பின்னர், திரிஷாவின் துப்பட்டாவாலே கத்தியை சுத்தம் செய்துவிட்டு திரிஷாவின் சடலத்தை நெடுஞ்சாலையிலே விட்டுவிட்டு, திரிஷாவின் இரு சக்கர வாகனத்தை எடுத்துக்கொண்டு, இந்த விவகாரம் எதுவுமே நடக்காதது போல நெடுஞ்சாலையில் காத்திருந்த தனது நண்பனை சந்திப்பதற்காக மீண்டும் சென்றுவிட்டார். ஆனால், போலீசார் துரிதமாக செயல்பட்டு கல்பேஷை கைது செய்தனர்.


காதலை ஏற்க மறுத்ததால் போலீஸ் பணிக்கு தயாராகிக் கொண்டிருந்த இளம்பெண்ணை கத்தியால் குத்திக் கொன்ற சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.