நாமக்கலில் பூச்சி மருந்து கலந்த சிக்கன் ரைஸ் சாப்பிட்டு முதியவர் உயிரிழந்த விவகாரத்தில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
நாமக்கல் மாவட்டம் கொசவம்பட்டியில் பகவதி என்ற பொறியியல் மாணவர் தன் குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். இவர் நேற்று இரவு நாமக்கல் பேருந்து நிலையம் எதிரேயுள்ள ஓர் ஹோட்டலில் சிக்கன் ரைஸ் பார்சல் வாங்கியுள்ளார். இதில் ஒரு பார்சலை எருமைப்பட்டி அருகேயுள்ள தேவராயபுரத்தில் வசிக்கும் தாத்தா சண்முக நாதனிடம் கொடுக்கும்படி தம்பி ஆதியிடம் கொடுத்தனுப்பியுள்ளார்.
மற்ற பார்சலை வீட்டுக்கு எடுத்து சென்றார். இதனிடையே நேற்று இரவு 8.30 மணியளவில் சிக்கன் ரைஸ் பார்சலை பகவதியின் தாய் நதியா பிரித்து சாப்பிட்டுள்ளார். அப்போது அதிலிருந்து வித்தியாசமான வாசனை வந்ததால் சாப்பிடாமல் வைத்து விட்டு தன் தந்தைக்கு உடனடியாக போன் செய்து சாப்பாடு பற்றி விசாரித்துள்ளார். ஆனால் அதற்குள் சண்முக நாதன் சிக்கன் ரைஸை முழுமையாக சாப்பிட்டுள்ளார்.
இப்படியான நிலையில் சிறிது நேரத்தில் சண்முகநாதனுக்கு உடல்நிலை சரியில்லாமல் போகவே நாமக்கலில் உள்ள அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இதேபோல் சிறிது சாப்பிட்ட நதியாவும் அதே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இருவரையும் பரிசோதித்த மருத்துவர்கள் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக தெரிவித்தனர். மேலும் அவர்களுக்கு எடுக்கப்பட்ட பரிசோதனையில் பூச்சிக் கொல்லி மருந்து கலந்த சிக்கன் ரைஸை சாப்பிட்டது தெரிய வந்தது. உடனடியாக சம்பவம் குறித்து நாமக்கல் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
ஆனால் சிகிச்சை பலனின்றி சண்முகநாதன் உயிரிழந்தார். நதியாவுக்கு தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. உடனடியாக பகவதியிடம் விசாரணை மேற்கொண்ட போலீசார் சிக்கன் ரைஸ் வாங்கிய ஹோட்டலை கண்டறிந்து சீல் வைத்தனர். அந்த கடை உரிமையாளர், பணியாளர்களிடம் விசாரணை நடத்தினர். ஆனால் அதே உணவகத்தில் சாப்பிட்ட யாருக்கும் உடல்நல பிரச்னை ஏற்பட்டதாக புகார் வராததால் போலீசாருக்கு குழப்பம் ஏற்பட்டது. மேலும் நதியா, சண்முகநாதன் மட்டுமே உடல்நிலை பாதிக்கப்பட்ட நிலையில் பகவதி மற்றும் அவரது தம்பி ஆதி உள்ளிட்டோருக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. இதனால் போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டு குடும்பத்தினரிடம் விசாரனை நடத்தினர்.
இந்நிலையில் இந்த வழக்கில் திடீர் திருப்பமாக கல்லூரி மாணவர் பகவதியை போலீசார் கைது செய்துள்ளனர். தன்னுடைய பழக்க வழக்கங்களை தட்டி கேட்டதால் சிக்கன் ரைஸில் பூச்சி கொல்லி மருந்து கலந்து கொடுத்ததாக அவர் போலீஸில் வாக்குமூலம் அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த சம்பவம் நாமக்கலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.