பார்வைக் குறைபாடு மற்றும் ஆரோக்கியமான பார்வை குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் மாதம் இரண்டாவது வியாழக்கிழமை ’உலக பார்வை தினம்’ World Sight Day (WSD) கடைப்பிடிக்கப்படுகிறது. கண்கள் நம் உடலின் மிக அவசியமான மற்றும் மென்மையான ஓர் உறுப்பு; எனவே, நமது கண்களைப் பாதுகாப்பது இன்றியமையாதது. கண்கள் ஆரோக்கியமாக இருப்பதை உறுதி செய்வது நம் ஒவ்வொருவரின் கடமை.  இந்த ஆண்டுக்கான கருப்பொருள் Love Your Eyes - உங்கள் கண்களை நேசியுங்கள்.


உலக சுகாதார நிறுவனம் முன்னெடுத்துள்ள இந்த விழிப்புணவு செயல்பாடுகளில் நாம் தெரிந்து கொள்ள வேண்டியவைகளை காணலாம். மேலும், இன்றைய நாளில் நம் கண்களை ஆரோக்கியமுடன் பாதுக்காக்க உறுதி ஏற்போம்.


முன்பு போல் இல்லை; நாம் அதிக நேரம் செலவிடுவது கேட்ஜெட்கள் உடன்தான். வேலை, கல்வி, மருத்துவம், வணிகம் உள்ளிட்ட எல்லா துறைகளிலும் இதே நிலைதான். ஸ்மார்ட்ஃபோன் இல்லாமல் நம்மால் இருக்க முடியுமா என்று கேட்டால், அதற்கு பதில் உறுதியாக ஏதும் சொல்ல முடியாது என்றே சொல்ல தோன்றுகிறது. ஆனாலும், நம்மால்  முடிந்த அளவு ஸ்கீரின் நேரத்தை அளவோடு பயன்படுத்த பழக வேண்டும். குறைந்த ஸ்கீரின் நேரம் கண்களுக்கு நல்லது என்கிறார்கள் கண் நல நிபுணர்கள்.


கொரோனா தொற்றுநோய் காலத்தில் ஸ்கீரின் நேரம் அதிகரித்துள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றனர்.  ஆன்லைன் வகுப்புகள், வீட்டிலிருந்து வேலை செய்வது, சமூக ஊடகத்தில் அதிக நேரம் செலவிடுவது, வீடியோ கால்கள் மற்றும் ஆன்லைன் கருத்தரங்கங்கள் உள்ளிட்ட பல்வேறு மாற்றங்கள் நம் வாழ்க்கையில் நடந்துள்ளன. மின்னணு சாதனங்களின் பயன்பாடு வாழ்க்கையின் இன்றியமையாத அங்கமாகிவிட்டது.


மொத்த திரை நேரம் என்பது லேப்டாப், கணினி, டி.வி. ஸ்மாட்ஃபோன் மற்றும் டேப்லெட்டுகள் எல்லாம் சேர்ந்ததே. இதனால் அதிக நேரம் ஸ்கீரின் நேரம் உள்ளவர்களுக்கு கம்ப்யூட்டர் விஷன் சிண்ட்ரோம்  அல்லது டிஜிட்டல் ஐ ஸ்ட்ரெய்ன் ஏற்படுவதாக மருத்துவர்கள் கூறுகின்றனர். 


இதனால் அருகில் உள்ள பொருட்கள் தெளிவாக தெரியாது,  மங்கலான பார்வை, தலைவலி, கண் சோர்வு, கண்ணில் எரிச்சல் உணர்வு, கண்ணில் அரிப்பு ஏற்படுதல் , நீர் வடிதல் மற்றும் வெளிச்சத்தை கண் ஏற்காது உள்ளிட்டவைகளும் ஏற்படும். 


ஸ்கீரின் நேரமும் கண் பாதிப்பும்:


நாம் ஸ்மாட்ஃபோன் உள்ளிட்ட மின்னணு சாதனங்களின் திரையைப் பார்க்கும் போதெல்லாம், கண்களின் உள்ள சிலியரி தசைகள் தெளிவான பார்வைக்காக அதிகமாக வேலை செய்கின்றனர். இதே வேலை நீடித்தால், அது கண்களில் தசைப்பிடிப்புக்கு வழிவகுக்கிறது; அதைத் தொடர்ந்து தசைகள் சோர்வடைந்து கண் சோர்வு மற்றும் கவனம் செலுத்துவதிலும் சிக்கலுக்கு வழிவகுக்கிறது.


டிஜிட்டல் திரையை நீண்ட நேரம் உற்றுப் பார்ப்பது கண்களின் வறட்சிக்கு காரணமாகிறது. மேலும், கேட்ஜெட்களில் இருந்து வெளியேறும் கதிர்வீச்சினால் கண் மேற்பரப்பு சேதமடைகிறது. 


அதிக ஸ்கீரின் நேரம் என்பதை எப்படி கண்டறிவது?



  • கண்களில் வலி மற்றும் கண்கள் சோர்வடைவது.

  • கண்களில் நீர் வடிதல் மற்றும் கண்களில் அரிப்பு உணர்வு.

  • கண்கள் வறட்சி அடைவது.

  • சிறிது நேரம் கழித்து பார்வை மங்கலாகும்.

  • தலைவலி மற்றும் கழுத்து வலி


அதிக ஸ்கீரின் நேரத்தின் விளைவுகள்:


ஒவ்வாமை .


தூக்கமின்மை


குழந்தைகளின் மூளை வளர்ச்சி குறைவாக இருக்கும்


மற்றவர்களுடன் பேசுவதை விரும்ப மாட்டார்கள்.


பெற்றோர்கள் கவனத்திற்கு:


குழந்தைகளிடன் கேட்ஜெட்களை அறிமுகம் செய்வதை பெரும்பாலும் தவிர்ப்பது நல்லது. மேலும், குழந்தைகளின் ஸ்க்ரின் நேரத்தை நிர்வகிப்பது அவசியமாகிறது.


கவனிக்க:


பெரிய திரைகளைப் பயன்படுத்துவதும், முடிந்தவரை அவற்றைக் கண்களுக்குத் தூரமாக வைப்பதும் நல்லது. டேப்லெட்டுகள் அல்லது ஸ்மார்ட்போன்களுக்குப் பதிலாக டெஸ்க்டாப் கணினிகளை பயன்படுத்தகாம்.  குழந்தைகளுக்கும் டெஸ்க்டாப் கணிணியே மிகவும் பரிந்துரைக்கப்படுவதாக இருக்கிறது.


எந்த மின்னணு சாதனத்தை பயன்படுத்தும்போது அதற்கேற்ற வெளிச்சம் மற்றும் திரையின் பிரகாசம் இருப்பதை உறுதி செய்யவும். இருட்டில் கேட்ஜெட்கள் பயன்படுத்துவதை தவிர்க்கவும்.


 20-20-20 விதி:


 கம்ப்யூட்டர் அல்லது எந்தவொரு கேஜெட்கள் என்றாலும் சரி, 20-20-20 விதியை பின்பற்ற வேண்டும் என்று சொல்கிறது மருத்துவ உலகம். 
கேட்ஜெட்களை உபயோகித்த 20 நிமிடங்களுக்குப் பிறகு, குறைந்தபட்சம் 20 அடி தூரத்தில் உள்ள ஒரு ஏதாவது ஒரு பொருளை  20 வினாடிகளுக்கு பார்க்கவும். இதை பின்பற்ற மறக்க வேண்டாம். பழக்கப்படுத்துவது சற்று கடினமாக இருக்கலாம். ஆனால், உறுதியுடன் முயற்சி செய்து பழக்கமாக மாற்றுங்கள். கண்களின் ஆரோக்கியம் மிகவும் முக்கியம் இல்லையா?


லேட்டாப் அல்லது கணினி என்றால் உட்காரும் நாற்காலி மற்றும் மேசையின் உயரம் சரியாக இருப்பதை உறுதி செய்யவும். குழந்தைகளை வெளியில் சென்று நண்பர்களுடன் விளையாடுவதை ஊக்குவிக்கவும். முடிந்தவரை ஸ்கீரின் நேரத்தை குறைக்கவும். குழந்தையின் ஸ்கீரின் நேரத்தை ஒரு நாளைக்கு அதிகபட்சம் 2 மணிநேரமாக நிர்ணயுங்கள். ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்த உணவை எடுத்துக் கொள்ளுங்கள். அதிக ஸ்க்ரின் நேரத்தை கடுமையான பிரச்சனை ஏற்பட்டால், சில நாட்களுக்கு கேட்ஜெட்கள் பயன்படுத்துவதை தவிர்ப்பது நல்லது. 


அதிக ஸ்க்ரின் நேரம் கண்களை மட்டுமல்ல ஒட்டுமொத்த நலவாழ்வையும் பாதிக்கும் என்பதை நினைவில் நிறுத்துங்கள்.