தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அண்ணா பேருந்து நிலையத்தில் மதுரைக்கு கிளம்பிகொண்டு இருந்த அரசு பஸ்சில் பயணிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட திருநங்கைகளை கீழே இறங்க சொன்ன நடத்துனர் சரவணசாமியை அவதூறாக பேசி, தாக்க முயன்றதாக குற்றசாட்டு எழுந்தது. இந்த நிலையில் அரசு பஸ்சினை எடுக்க மறுத்து நடத்துனர், டிரைவர் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து மேற்கு காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அரசு பஸ்சில் ஏறி இருந்த பயணிகள் வேறு ஒரு அரசு பஸ் மூலமாக மதுரைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.




தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அண்ணா பஸ் நிலையத்தில் மதுரைக்கு செல்லக்கூடிய அரசு பஸ் ஒன்று நின்று உள்ளது. இதில் பயணிகள் ஏறி இருந்த நிலையில், அந்த பஸ்சிற்குள் யாசகம் கேட்ட சென்ற திருநங்கைகளுக்கும், பஸ்சில் இருந்த பயணிகளுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனை பார்த்த அந்த அரசு பஸ்சின் நடத்துனர் சரவணச் சாமி, பஸ்சிற்குள் வைத்து எந்த பிரச்சினையும் செய்ய வேண்டாம், பஸ்சினை விட்டு கீழே இறங்கும் படி தெரிவித்தாக கூறப்படுகிறது. தங்களை எப்படி கீழே இறங்க சொல்லாம் என்று கூறி திருநங்கைகள், அரசு பஸ் நடத்துனர் சரவணச்சாமியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். மேலும் அவரை அவதூறாக பேசிய திருநங்கைகள் தாக்க முயன்றதாக தெரிகிறது. தன்னை அவதூறாக பேசி, தாக்க முயன்ற திருநங்கைகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வரும் வரை பஸ்சினை எடுக்க மாட்டோம் என்று கூறி போராட்டத்தில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. பஸ்சில் ஏறி இருந்த பயணிகள் வேறு அரசு பஸ் மூலமாக மதுரைக்கு சென்றனர். புகார் அளித்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல்துறையினர் கூறியதால் நடத்துனர் சரவணச்சாமி மேற்கு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.




பஸ்சில் இருந்த பயணிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டது மட்டுமின்றி, பயணிகளை ஏற விடமால் படியில் நின்று பிரச்சினை செய்து கொண்டு இருந்ததால், அவர்களை கீழே இறங்க சொன்னேன், ஆனால் திருநங்கைகள் என்னை அவதூறாக பேசியது மட்டுமின்றி தாக்க முயன்றதாகவும், காவல்துறையில் புகார் அளித்துள்ளதாகவும், அவர்கள் மீது நடவடிக்கை எடுத்தால் மட்டுமே பஸ்சினை எடுப்போம் என்று அரசு பஸ் நடத்துனர் சரவணச்சாமி தெரிவித்துள்ளார்.




இதுகுறித்து திருநங்கைகளிடம் கேட்ட போது, “எங்களை பஸ்சில் இருந்தவர்கள் மரியாதைக்குறையாக பேசியதால், நாங்களும் பதிலுக்கு திட்டினோம், நடத்துனரை அடிக்கவில்லை. அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தால் தெரிய வரும்” என்றனர்.


நடத்துனர் சரவணச்சாமி கொடுத்த புகாரின் பெயரில் விசாரணை நடத்தி வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர். யாசகம் என்ற பெயரில் சில திருநங்கைகள் அத்துமீறி நடத்து வரும் நிலை இருப்பதால் காவல்துறையினர் கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொது மக்கள் தெரிவித்துள்ளனர்.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்









பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண