மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுக்கா திருவாலங்காடு கிராமத்தை சேர்ந்தவர்  ராஜேந்திரன். 62 வயதான இவர் திருவாவடுதுறை ஆதினத்தில் கணக்காளராகப் பணிபுரிந்து வருகிறார். இவரது தாயார் அருகில் உள்ள திருக்கோடிக்காவல் கிராமத்தில் உடல் நிலை பாதிக்கப்பட்டு இருப்பதாக தகவல் வந்ததுள்ளது. இதனையடுத்து ராஜேந்திரன் அவரை பார்ப்பதற்காக நேற்றிரவு தனது மனைவியை அழைத்துக் கொண்டு வீட்டை பூட்டி விட்டு  திருக்கோடிக்காவல் புறப்பட்டு சென்றுள்ளார். இந்நிலையில்  இன்று அதிகாலை மீண்டும் தனது வீட்டுக்கு வந்துள்ளார். அப்போது வீட்டின் வாசல் கதவு திறந்து கிடப்பதை கண்டு ராஜேந்திரன் அதிர்ச்சி  அடைந்தார். அதனைத் தொடர்ந்து  தனது வீட்டில் திருட்டு நடைபெற்றுள்ளதை அறிந்த ராஜேந்திரன் சம்பவம் குறித்து குத்தாலம் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரை பெற்றுக்கொண்ட குத்தாலம் காவல்நிலைய காவலர்கள் வழக்கு பதிவு செய்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ஆய்வு செய்தனர். 





அப்போது மர்ம நபர்கள் சுவர் ஏறி குதித்து, கிரில் கேட் பூட்டை உடைத்து, கதவை நெம்பி உடைத்து உள்ளே நுழைந்து  வீட்டின் இரு அறைகளிலும் இந்த பீரோவை மர்ம நபர்கள் உடைத்து இருப்பது தெரியவந்தது. மேலும் பீரோவில் வைத்திருந்த ஆரம், டாலர், நெக்லஸ், செயின், பிரேஸ்லெட், மோதிரம், தோடு உள்ளிட்ட 34 பவுன் தங்க நகைகளும், 2 கிலோ வெள்ளி பொருள்களும், 3,000 ரூபாய் ரொக்க பணம் மற்றும் ஏடிஎம் கார்டு ஆகியவை திருட்டு போயுள்ளதாக வீட்டின் உரிமையாளர் ராஜேந்திரன் தெரிவித்தார். இதுகுறித்து மயிலாடுதுறை காவல் துணை கண்காணிப்பாளர் வசந்தராஜ் விசாரணை மேற்கொண்டு வருகிறார். மேலும் கைரேகை நிபுணர்கள் வரவழைத்து விசாரணை ஈடுபட்டுள்ளனர். ராஜேந்திரனின் ஒரே மகன் அருண் ராஜ் அமெரிக்காவில் ஐடி நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வருகிற சூழலில் ராஜேந்திரன் மற்றும் அவரது மனைவி இருவர் மட்டுமே இங்கு தனியாக வசித்து வருகின்றனர். இந்நிலையில் ராஜேந்திரன் வீட்டில் யாரும் இல்லாததை அறிந்த மர்ம நபர்கள் இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுப்பட்டுள்ளனர். 




இது குறித்து தெரிவித்த போலீசார், சற்று வசதி படைத்தவர்கள் வீடுகளில் கண்காணிப்பு கேமரா பொருத்திக் கொள்வது அவசியம். அவ்வாறு கண்காணிப்பு கேமரா பொருத்தி கொள்ளும் சூழலில் இதுபோன்ற திருட்டு சம்பவங்களை தடுக்கலாம். மீறி திருட்டு சம்பவம் நடைபெற்றாலும் குற்றவாளிகளை எளிதில் அடையாளம் கண்டு விரைவாக பிடிக்க உதவும். பணம், நகை கொள்ளை போன பின்பு அதனை இழந்து வருத்துவதை காட்டிலும் ஒரு சிறிய தொகையினை பாதுகாப்பு கருதி செலவிட்டு, கண்காணிப்பு கேமரா பொருத்தி கொள்வது அனைவருக்கும் பாதுகாப்பான ஒன்று என்றனர்.


தங்கத்துக்கு பதில் வெள்ளிக்கம்பி.. நகைக்குள் அரக்கு.. பிரபல தி.நகர் நகைக்கடை மீது மோசடி வழக்கு..!