பெகசஸ் பென்பொருள் மற்ற செயலிகள் போல அல்ல, It's a Ghost என்று எழுத்தாளரும், சைபர் பாதுகாப்பு நிபுணருமான ஹரிஹரசுதன் தங்கவேலு பதிவிட்டுள்ளார்.
இதுகுறித்து தனது பேஸ்புக் பக்கத்தில், "பெகசஸ் (Pegasus) - உலக நாடுகள் இன்று பரபரப்பாக உச்சரிக்கும் ஒரு பெயர். இது ஓர் உளவு நிரல் (ஸ்பைவேர்). மொபைலில் ஊடுருவியதும் பிற வணிக செயலிகள் போல தகவல்களை மட்டும் திருடுவதில்லை. காமிரா, மைக்ரோபோன், கீ போர்டு என மொத்த மொபைல் இயக்கத்தையும் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துவிடும். மொபைலில் அழைப்புகள், எண் தொடர்புகள், எடுக்கப்படும் புகைப்படங்கள், நீங்கள் அனுப்பும் செய்திகள்.
வெறும் தட்டச்சு செய்து விட்டு அனுப்பாமல் டெலிட் செய்யும் செய்திகள், (வாட்சப் மறைநுட்பத் தகவல்கள் உட்பட ), வலைதளங்களில் என்ன பார்க்கிறீர்கள், என்ன தேடுகிறீர்கள், எந்த இடத்தில் இருக்கிறீர்கள் என அனைத்தும் பெகசஸ் வசம் தான். இது மட்டுமல்ல, பெகசஸ் நினைத்த நேரத்தில் ஸ்க்ரீன்ஷாட், மற்றும் மொபைல் கேமிரா மூலம் உங்களைப் படம் பிடித்து அதன் எஜமானனுக்கு அனுப்பி விடும்.
இஸ்ரேலின் NSO நிறுவனத்தால் உருவாக்கப்பட்டாலும் இதன் பயன்பாட்டு உரிமம் இஸ்ரேல் அரசு வசமே இருக்கிறது. நட்பு ரீதியாக பல நாடுகளின் உதவிக்கும் பெகஸசை வழங்கியுள்ளது (விற்றுள்ளது) இஸ்ரேல்.
பெகசஸ் எப்படி மொபைலில் ஊடுருவுகிறது ?
இது தெரியாதா ? என்னை க்ளிக்கு என வம்படியாக வரும் வாட்சப் செய்திகள், மின்னஞ்சல்கள் தானே என நீங்கள் நினைத்தால் அது தவறு. காரணம் இது லோக்கல் யுக்தி ! எதை திறக்க வேண்டும், திறக்கக்கூடாது என்ற விழிப்புணர்வு நம்மில் பெரும்பாலானோருக்கு இருக்கும்போது உலகின் சக்திவாய்ந்த ஆளுமைகளுக்கு இருக்காதா ! பெகசஸ் உருவாக்கப்பட்டதே இவர்களைக் கண்காணிக்கத்தான், பிறகு எப்படி என்கிறீர்களா ?
பிரதமர் அலுவலகத்தின் முக்கிய அறையில் ஒரு திருடன் ஒளிந்து கொண்டிருக்கிறான் என வைத்துக் கொள்வோம். நடக்கும் முக்கிய விவாதங்கள், எடுக்கப்படும் முடிவுகள் என அனைத்தையும் ஒட்டுக் கேட்டுக்கொண்டிருக்கிறான். ஒரு நாள், இரண்டு நாள் அல்ல, ஒரு வருடம் இருக்கிறான் என்றால் நம்பமுடியுமா ? நான்சென்ஸ், லாஜிக்கே இல்லை. அத்தனை பாதுகாப்பு மிக்க இடத்தில் எப்படி சாத்தியம் ! முதலில் உள்ளே நுழையும் போதே பிடித்து விடுவார்கள், பிறகு எப்படி ! இது எல்லாம் மீறி அவன் இருந்தான் என்றால் அவன் நிச்சயம் மனிதனாகவே இருக்க முடியாது ! பேயாகத்தான் இருக்க முடியும் என சிரித்தால் அதுதான் உண்மை.
பெகசஸ் மற்ற செயலிகள் போல அல்ல, It's a Ghost. இதை மொபைலுக்கு சுமந்து வருபவைகளை வெக்டர் என்பார்கள், அது ஒரு வாட்சப் செய்தியாக இருக்கலாம், மின்னஞ்சலாக இருக்கலாம், அழைப்பாக இருக்கலாம், அல்லது ஒரு சாதாரண மிஸ்ட் காலாக இருக்கலாம். இதில் பிரமாதம் என்னவென்றால் இந்த வெக்டர்கள் வந்த சுவடே உங்களுக்கு தெரியாது.
மெயிலாக வந்தால் அதன் இணைப்பு தானாகத் தரவிறக்கி கொண்டு டெலிட் ஆகி விடும்.மிஸ்ட் அழைப்பாக வந்தால் வந்த சுவடு தெரியாமல் Call log எனப்படும் அழைப்பு விவரத்தில் இருந்து நீங்கி விடும். வாட்சப் மெசேஜ், ஐ மெசேஜ் என மற்ற வேடத்தில் வந்தாலும் இதே போலத்தான் ! புராண படக் கடவுள் போல வந்த வேலை முடிந்ததும் சட்டென்று மறைந்து விடும்.
ஆனால் நிஜத்தில் அதன் உளவு வேலையை அப்பொழுது தான் ஆரம்பிக்கும். பயனர் பாதுகாப்பில் நான் ஜாம்பவான் என பீற்றிக் கொள்ளும் ஐபோன்கள் தான் இத்தாக்குதலின் மிக எளிமையான இலக்கு. அதன் இயங்குதளம் 100 % பெகசஸிற்கு வணங்கி கட்டுப்பட்டு விடுகிறது. ஆண்ட்ராய்டு 50% தான். ( மேலிடங்கள் பெரும்பாலும் ஐபோன் உபயோகிப்பதால் அதில் அதிக கவனம் செலுத்தப்பட்டிருக்கலாம் )
பெகசஸ் மொபைலில் ஊடுருவியிருப்பது துளியும் அதன் பயனருக்குத் தெரியாது. உண்மையில் மற்ற செயலிகளின் AD சிக்கல்களை கூட பெகசஸ் சரி செய்து அதன் பயனருக்கு எந்த விதத்திலும் மொபைலை மாற்றும் எண்ணம் வராமல் சமர்த்தாகப் பார்த்துக் கொள்ளும். 60 நாட்கள் தனது சர்வருடன் தொடர்பு கொள்ள முடியாமல் போனாலோ, இல்லை பயனருக்கு ஏதேனும் சந்தேகம் வரும் பட்சத்திலோ பெகசஸ் தானாக நீங்கி கொள்ளும் திறன் கொண்டது. ( பயனர் வலைத்தளங்களில் பேகசஸ் குறித்துத் தேடத் துவங்கினால் அலர்ட் ஆகிவிடும் ).
இந்த சர்வ வல்லமையை உலக நன்மைக்காகவும், தீவிரவாதத்தை கட்டுப்படுத்தவும் மட்டுமே நாங்கள் உபயோகிக்கிறோம் என இஸ்ரேல் நீதிக்கதை சொன்னாலும், மக்களை உளவு பார்த்து, உண்மைகளை மறைக்க முனையும் எல்லா அரசுகளுக்கும் பெகசஸ் உதவிக் கொண்டு தான் இருக்கிறது. இது போன்ற தங்களது வாடிக்கையாளர்களுக்காக உலக அளவில் 50000 எண்களை ஊடுருவியிருக்கிறது இஸ்ரேல். அதில் இந்திய அளவில் 300 எண்கள். இரு அமைச்சர்கள், மற்றும் தேசியக் கட்சித் தலைவர்கள் மற்றும் பத்திரிகையாளர்கள் எண்களும் இதில் அடங்கும். உளவு, ஊடுருவல், தகவல் என்பதெல்லாம் வெறும் கண்கட்டுத் தொழில்நுட்பமாகத் தெரியலாம்.
The Washington post பத்திரிக்கையாளர் ஜமால் கசோகி, சவூதி அரசால், இஸ்தான்புல் சவுதி தூதரகத்தில் வைத்துத் துளி தடயமில்லாமல், வெட்டிக் கொல்லப்பட்டு, கரைத்துக் காணாமல் செய்யப்பட்டதற்கு உதவியாக இருந்தது பெகசஸ்தான்