சென்னை விமான நிலையத்தில் ஓமன் நாட்டிலிருந்து சென்னை வந்த விமானத்தில் பயணிகள் 113 பேரிடம் பல்வேறு வகையான கடத்தல் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பொதுவாக விமான நிலையங்களில் பயணிகள் பல்வேறு கட்ட சோதனைகளுக்கு பிறகே உள்ளேயும், வெளியேவும் செல்ல அனுமதிக்கப்படுகிறார்கள். குறிப்பாக வெளிநாட்டில் இருந்து வரும் பயணிகள் முறைகேடாக பல பொருட்களை எடுத்து வருவதும், பிடிபடுவதும், சுங்கத்துறை அதிகாரிகள் அவர்களுக்கு அபராதம் விதித்து, எச்சரித்தும் அனுப்பும் சம்பவங்கள் தொடர்கதையாகி வருகிறது.
அந்த வகையில், ஓமன் நாட்டு தலைநகர் மஸ்கட்டில் இருந்து, சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு நேற்று (செப்டம்பர் 14) காலை 8 மணிக்கு ஓமன் ஏர்லைன்ஸ் விமானம் வந்தது. இதில் பயணித்தவர்களில் பெரும்பாலானோர் தங்கம், ஐபோன்கள், லேப்டாப்புகள், வெளிநாட்டு சிகரெட்கள் ஆகியவற்றை ரகசியமாக கடத்தி வருவதாக, சென்னை விமான நிலைய சுங்கத்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து அதிகாரிகள், சென்னையில் உள்ள மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகளுக்கும் தகவல் கொடுத்தனர். இருதுறை அதிகாரிகளும் இணைந்து, ஓமன் ஏர்லைன்ஸ் விமானத்தில் வந்த 186 பயணிகளையும் நிறுத்தி, பல மணி நேரமாக தனித்தனியாக விசாரணை நடத்தினர். அதில் 73 பேர் கடத்தல் விவகாரங்களில் தலையிடாத, பயணிகள் என்று தெரிய வந்தது. அவர்களை சுங்க அதிகாரிகள் வெளியில் செல்ல அனுமதித்தனர்.
மீதமுள்ள 113 பயணிகளிடமும் சுங்கத்துறை மற்றும் மத்திய வருவாய் புலனாய்வு துறை அதிகாரிகள் துருவி துருவி விசாரணை நடத்தி, அவர்களை சோதனையிட்டனர். நீண்ட நேரமானதால் பயணிகள் தங்களுக்கு பசிப்பதாக கூறி அதிகாரிகளுடன் விசாரணைக்கு ஒத்துழைக்க மறுத்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும் எங்களை வெளியில் அனுப்புங்கள், நாங்கள் சாப்பிட்டுவிட்டு மீண்டும் விசாரணைக்கு வருகிறோம் என்று கூறியதாக சொல்லப்படுகிறது.
ஆனால் அதிகாரிகள் அவர்களை வெளியே அனுப்ப மறுத்து, உணவுக்கு ஏற்பாடு செய்தனர். உணவு வந்ததும், அனைவரையும் சுங்கத்துறை அலுவலகத்தில் தரையில் உட்கார வைத்து, வாழை இலைகள் போட்டு, திருமண வீடு போல், பந்தி பரிமாறப்பட்டன. அனைவரும் சாப்பிட்டு முடித்ததும், மீண்டும் அதிகாரிகள் விசாரணை மற்றும் பயணிகளின் உடைமைகளை சோதனை செய்யத் தொடங்கினர். இந்த சோதனைகள் நேற்று நள்ளிரவு வரை நடந்தது.
இதில் பல பயணிகள் தங்களுடைய உள்ளாடைகளுக்குள் தங்க கட்டிகள், தங்கப் பேஸ்ட், தங்க ஸ்ப்ரிங் கம்பி என மொத்தம் 13 கிலோ தங்கம் மறைத்து வைத்திருந்தனர். அதோடு சூட்கேஸ் மற்றும் பைகளில் ரகசிய அறைகள் வைத்து அதில் 120 ஐபோன்கள், 84 ஆண்ட்ராய்டு போன்கள் என மொத்தம் 204 ஃபோன்கள், வெளிநாட்டு சிகரெட்கள், பதப்படுத்தப்பட்ட குங்குமப்பூக்கள், லேப்டாப்புகள் உள்ளிட்ட பொருட்களும் மறைத்து வைத்து கொண்டு வந்திருந்ததை கண்டுபிடித்தனர்.
இதன் மொத்த மதிப்பு ரூ. 14 கோடியாகும். அதன்பின்பு கடத்தல் பயணிகள் 113 பேர் மீதும், சுங்க சட்டத்தின் கீழ் வழக்குகள் பதிவு செய்தனர். மேலும் ஒரு கோடிக்கு ரூபாய்க்கு மேல் கடத்தல் பொருட்கள் கொண்டு வருபவர்களை மட்டுமே, சுங்க சட்டப்படி கைது செய்ய முடியும். அதற்கு குறைவாக கடத்தல் பொருட்கள் இருந்தால், வழக்குகள் பதிவு செய்து, ஜாமீனில் விடுவித்து விடுவார்கள். இவர்கள் எனவே இவர்கள் 113 பேர்களையும் அதிகாரிகள் ஜாமீனில் விடுவித்தனர்.
ஆனாலும் இந்த 113 பேரும் சாதாரண கடத்தல் குருவிகள் தான். இவர்களை இயக்கும் முக்கிய கடத்தல் கும்பலின் தலைவர்கள் யார்? என்று மத்திய வருவாய் புலனாய்வு துறை மற்றும் சுங்கத்துறை அதிகாரிகள் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் சென்னை விமான நிலையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.