விளாத்திகுளம் அருகே ஆடுகள் திருடிய 2 பேர் - ஆடுகள் கத்தியதால் தர்ம அடி கொடுத்து காவல்நிலையத்தில் ஒப்படைத்த கிராம மக்கள் - பல நாள் திருடன் ஒருநாள் அகப்பட்ட கதையாக மாட்டிக்கொண்ட திருடர்கள்
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் பெரியசாமிபுரம் கிராமத்தில் ஆடு திருடிய தூத்துக்குடியை சேர்ந்த செந்தில் குமார், கருப்பசாமி ஆகிய 2பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் ஆடு திருட பயன்படுத்திய இரு சக்கர வாகனத்தையும் போலீசார் பறிமுதல் செய்தனர். ஆடுகளை திருடி கொண்டு இருவரும் தப்பிக்க முயன்றபோது ஆடுகள் கத்தியதால் இருவரும் மாட்டிக் கொண்டனர். கிராம மக்கள் சுற்றிவளைத்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்
தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் அருகே உள்ள பெரியசாமிபுரத்தைச் சேர்ந்தவர் ராபர்ட் பெல்லார்மின் மகன் காமராஜ் ஞானமணி (38). இவர் தனது வீட்டில் ஆடுகள் வளர்த்து வந்துள்ளார். இந்நிலையில் இன்று இவரது வீட்டிற்குள் கட்டி வைத்திருந்த 2 ஆடுகளை மர்ம நபர்கள் திருடி, இருசக்கர வாகனம் மூலம் கொண்டு செல்ல முயன்றுள்ளனர். அப்போது இரண்டு ஆடுகளும் கத்தி விட ஞானமணி மற்றும் அருகில் இருந்தவர்கள் ஆடுகளை திருடிச் சென்ற மர்மநபர்கள் 2 பேரையும் சுற்றி வளைத்தனர் இந்தக் கிராமத்தில் உள்ளவர்கள் அனைவரும் ஓடி வந்து சுற்றி வளைத்து தர்ம அடி கொடுத்து பெரியசாமிபுரம் கிராமத்தில் உள்ள பேருந்து நிலையத்தில் சிறை பிடித்து வைத்தனர், பின்பு சூரங்குடி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்தியதில் ஆடுகளை திருடியவர்கள் தூத்துக்குடி தெர்மல் நகரைச் சேர்ந்த கனி மகன் செந்தில்குமார் (36) மற்றும் தூத்துக்குடி கோரம்பள்ளம் பகுதியை சேர்ந்த பெரியநாயகம் மகன் கருப்பசாமி (46) என்பது தெரியவந்தது.
இதையடுத்து சூரங்குடி காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து செந்தில்குமார் மற்றும் கருப்பசாமி ஆகிய இருவரையும் கைது செய்தார். இருவர் மீதும் திருச்செந்தூர், ஆத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் பல்வேறு திருட்டு வழக்குகள் நிலுவையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்
மேலும் அவர்களிடமிருந்து ரூ.13 ஆயிரம் மதிப்பிலான 2 ஆடுகளும், திருட பயன்படுத்திய இருசக்கர வாகனமும் பறிமுதல் செய்யப்பட்டது.பெரியசாமிபுரம் கிராமத்தில் கடந்த சில மாதங்களாக பகல் நேரங்களில் 30க்கும் மேற்பட்ட ஆடுகள் திருடு போன நிலையில் , இவர்கள் இருவரும் சிக்கியதும், அவர்களுக்கு தர்ம அடி கொடுத்து கிராம மக்களே பிடித்துக் கொடுத்துள்ளனர். பல நாள் திருடன் ஒருநாள் அகப்படுவான் என்பது போல இப்பகுதியில் பல நாட்கள் ஆடுகளை திருடி வந்த இருவர் சிக்கியுள்ளனர்.