நடிகர் ரஜினிகாந்தை தான் தனிப்பட்ட முறையில் சந்தித்த வீடியோ வெளியிடப்போவதாக சினிமா விமர்சகர் ப்ளூ சட்டை மாறன் அறிவித்த நிலையில், அவர் ட்விட்டரில் வெளியிட்ட பதிவை கண்டு இணையவாசிகள் டென்ஷனாகியுள்ளனர். 


ஜெயிலர் படம் 


 சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 169வது படமாக உருவாகியுள்ள “ஜெயிலர்” படம் கடந்த ஆகஸ்ட் 10 ஆம் தேதி உலகமெங்கும் வெளியானது.  சன் பிக்சர்ஸ் நிறுவனம் பிரமாண்ட பொருட்செலவில் தயாரித்துள்ள இந்த படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்கியுள்ளார். அனிருத் இசையமைத்துள்ள இப்படத்தில் ரம்யா கிருஷ்ணன், மிர்னா, ரித்விக், மோகன்லால், சிவராஜ் குமார், சுனில் வர்மா, தமன்னா, ஜாக்கி ஷெராஃப் ,யோகிபாபு, விநாயகம், வசந்த் ரவி, யோகிபாபு, சுனில் என பலரும் நடித்துள்ள ஜெயிலர் படம் வெளியான நாள் முதல் பாக்ஸ் ஆபீஸில் வசூலை வாரிகுவித்து வருகிறது. 


ப்ளூ சட்டை மாறன் - ரஜினிகாந்த் ரசிகர்கள் மோதல்


இப்படியான நிலையில், ஜெயிலர் பட வெளியீட்டுக்கான  பணிகள் தொடங்கியது முதலே சினிமா விமர்சகர் ப்ளூ சட்டை மாறன் - ரஜினிகாந்த் ரசிகர்கள் மோதல் என்பது தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது. ஆடியோ வெளியீட்டு விழாவில் ரஜினி பேசியது தொடங்கி பாக்ஸ் ஆபீஸ் வசூல் குறித்த தகவல், ஜெயிலர் பட விமர்சனம் என ரஜினியை மிகவும் மோசமாக விமர்சித்து வருகிறார் ப்ளூ சட்டை மாறன். 


இப்படியான நிலையில் இன்று காலை அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டார். அதில், ‘நடிகர் ரஜினியின் நம்பிக்கைக்குரியவரும் மூத்த பத்திரிகையாளருமான ஒருவரிடம் இருந்து தனக்கு அழைப்பு வந்ததாகவும், ரஜினிகாந்தை அவர் இமயமலைக்கு புறப்படுவதற்கு முன்னர் தான் சந்தித்ததாகவும் தெரிவித்தார். இந்த சந்திப்பை நான் வீடியோ பதிவு செய்வதாக இருந்தால் வருகிறேன் என தெரிவித்தேன். முதலில் மறுத்த எதிர்தரப்பு பிறகு சம்மதித்தனர். 






இந்த வீடியோவை பொதுத் தளத்தில் பகிர மாட்டேன் எனபேப்பரில் கையொப்பமிட்டு தர வேண்டும் என்று கூறிய நிலையில் மீட்டிங்கிற்கு சென்ற எனக்கு கசப்பான சம்பவங்கள் நடந்தது. அதனால் கொடுத்த வாக்கை மீறி வீடியோவை இன்று காலை 11  மணிக்கு வெளியிடுவேன்’ என தெரிவித்தார். இந்த பதிவை கண்டு ரசிகர்கள், திரையுலகினர் பலரும் அதிர்ச்சியடைந்தனர்.


கடுப்பான இணையவாசிகள் 


இந்நிலையில், ப்ளூ சட்டை மாறன் வடிவேலு காமெடி ஒன்றை தன்னுடைய பெயர், ரஜினி, சம்பந்தப்பட்ட மூத்த பத்திரிக்கையாளர் ஆகியோர் பெயரை குறிப்பிட்டு ட்ரோல் வீடியோ ஒன்றை வெளியிட்டார். இதனை கண்டு, ‘உனக்காக 11 மணி வரை காத்து கிடந்தோம் பாத்தியா’ என்றும், ‘தலைவரை வச்சி நல்லா வியாபாரம் பார்க்குற’  என்றும் சகட்டுமேனிக்கு ரஜினி ரசிகர்கள் மட்டுமின்றி, இணையவாசிகள் பலரும் கடுப்பாகியுள்ளனர். 


இதற்கு பதிலளித்துள்ள ப்ளூ சட்டை மாறன், ‘நான் சொன்னது மாதிரி சம்பவங்கள் உண்மைதான். ஆனால் வெளியாகும் வீடியோ வெர்ஷன் வேறு’ என தெரிவிக்கும்போதே நீங்கள் புரிந்து கொண்டிருக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.