உத்தரப்பிரதேசத்தில் பப்பில் பாட்டு போட சொன்ன 3 இளம்பெண்களை பவுன்சர்கள் அடித்து உதைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
என்னதான் வார நாட்களில் கடுமையாக உழைத்தாலும் வார இறுதி நாட்களில் எங்கேயாவது மனதுக்கு பிடித்த இடத்திற்குச் சென்று ரிலாக்ஸ் செய்ய வேண்டும் என்ற எண்ணம் பலருக்கும் இருக்கும். அதில் பப், பார்ட்டி போன்றவை வார இறுதி நாட்களில் களைக்கட்டும். ஆனால் அத்தகைய பப்பில் அதிர்ச்சியை ஏற்படுத்தும் வகையில் சம்பவம் ஒன்று நடைபெற்றுள்ளது.
உத்தரப்பிரதேசத்தின் காசியாபாத் மாவட்டத்தில் உள்ள இந்திராபுரம் பகுதியில் டி மாலில் த்ரஸ்ட் ஆஃப் ட்ரங்க்ஸ் என்ற பப் செயல்பட்டு வருகிறது. இந்த பப் உணவு தங்கும் வசதி கொண்ட இடமாகவும் செயல்பட்டு வருகிறது. இதனிடையே வார விடுமுறை நாட்களை கழிக்க ஷப்னம் என்ற பெண், தனது இரண்டு சகோதரர்கள் மற்றும் இரண்டு தோழிகளுடன் அங்கு வந்துள்ளார்.
அடுத்த சில மணி நேரத்தில் அங்கு பாடல் போடும் டி.ஜே.யிடம் தங்களுக்கு விருப்பமான ஒரு பாடலை இசைக்கச் சொல்லியுள்ளார். அதற்கு அந்த நபர், கேட்ட பாடல்களை இசைக்க ரூ.500 ஆகும் என சொல்லியுள்ளார். மூன்று வெவ்வேறு பாடல்களை இசைக்குமாறு சொல்லி ரூ.1500 பணம் கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால் சொன்னபடி அந்த டி.ஜே.நபர் பாட்டை போடவில்லை என சொல்லப்படுகிறது. இதனால் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
உடனடியாக அங்கு வந்த பப் பவுன்சர்கள் மற்றும் ஊழியர்கள் இந்த சம்பவத்தில் ஷப்னம் மற்றும் அவருடன் வந்தவர்களை தாக்கியதாக போலீசில் புகாரளிக்கப்பட்டுள்ளது. இரண்டு சகோதரர்களும் தங்கள் சகோதரியைப் பாதுகாக்க முயன்ற நிலையில் இருவரையும் பப்பைச் சேர்ந்தவர்கள் அடித்து உதைத்துள்ளனர். இதில் ஒருவரின் கை முறிந்துள்ளது. அதிகாலை 4 மணியளவில் இந்த சம்பவம் நடந்துள்ளது.
தாக்குதலில் இருந்து தங்களைக் காப்பாற்றிக் கொள்ள முயன்றபோது ஆடைகள் கிழிக்கப்பட்டதாகவும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இதுதொடர்பாக ஐந்து பவுன்சர்கள் மீது காசியாபாத் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கியுள்ளதோடு, குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.
மேலும் படிக்க: மனைவி கொலை.. கூடவே இருந்து போலீசாரை 17 ஆண்டுகளாக திசை திருப்பிய கணவன்.. சிக்கியது எப்படி?