ஓய்வூதியத்தில் கிடைத்த லட்சக்கணக்கான பணத்தைக் கட்டி நிற்கதியாய் நிற்கிறேன் என கண்ணீர் மல்க கதறி அழுத மூதாட்டி.

 

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் அடுத்த தென்பரங்குன்றம் பகுதியைச் சேர்ந்தவர் பாப்பையன். இவர் கடந்த 2003-ம் ஆண்டிலிருந்து அதே பகுதியில் எஸ்.வி.பி., மாருதி என்ற பெயரில் சிறுசேமிப்பு திட்டம் எனக்கூறி ஏலச்சீட்டு நடத்தி வந்துள்ளார். இவரிடம் திருப்பரங்குன்றம், தென்பரங்குன்றம் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த ஏராளமான பெண்கள், முதியவர்கள், தொழிலாளர்கள் ரூ.50 ஆயிரம் மற்றும் ஒரு லட்சம் ரூபாய்க்கான ஏலச்சீட்டு திட்டத்தில் சேர்ந்து மாதாமாதம் பணம் செலுத்திவந்துள்ளனர். ஏலச்சீட்டு கட்டிய நபர்களிடம் பாப்பையன் நேரடியாகவே சென்று பணம் வசூலித்தும் வந்துள்ளார். இதனால் கடந்த 20 ஆண்டுகளாக ஏலச்சீட்டில் சேர்ந்தவர்கள் மற்றொருவர்களை பரிந்துரை செய்ய தொடங்கியதால் அதிகளவிற்கான பொதுமக்கள் சீட்டு கட்ட தொடங்கியுள்ளனர். இந்நிலையில் கடந்த சில வாரமாக பாப்பையன் பணம் வசூலிக்க வராத நிலையில் கட்டிய பணத்தை கேட்க தொடங்கியுள்ளனர். அப்போது சில நாட்களில் பணத்தை தருவேன் என கூறிவந்த நிலையில் திடிரென பாப்பையன் தனது குடும்பத்தினருடன் வீட்டை பூட்டிவிட்டு சென்றுவிட்டதாக கூறி ஏலச்சீட்டு திட்டத்தில் பணத்தை கட்டிய 30க்கும் மேற்பட்டோர் மதுரை மாநகர் காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர்.



 

 

இதில் ஒரு சில பெண்கள் 14 லட்சம் முதல் குறைந்தபட்சமாக 3 லட்சம் ரூபாய் வரை பணம் செலுத்திய நிலையில் திடிரென பாப்பையன் வீட்டை பூட்டிவிட்டு தலைமறைவாக சென்றுவிட்டதால் தாங்கள் சம்பாதித்து கட்டிய பணத்தின் நிலை கேள்விக்குறியாகியுள்ளதாக கூறி புகார் மனுவில் குறிப்பிட்டிருந்தனர். இந்த பணத்தை நம்பி தங்களது பெண் பிள்ளைகளின் திருமணத்தை நடத்தவிருந்தோம், வீடுகள் கட்ட இருந்த நிலையில் தற்போது பணம் செலுத்தியவர்களின் வாழ்வாதரமே முடங்கி விட்டதாகவும் கூறினர்.  ஏலச்சீட்டு நடத்திய பாப்பையன் வீட்டை விட்டு சென்றது குறித்து அவரது மகனிடம் கேட்டாலும் எந்தவித பதிலும் அளிக்காமல் அலைக்கழிப்பதாகவும் கூறினர். இதனிடையே பாப்பையனுடைய சில சொத்துக்கள் அவரது மகனுக்கு தான செட்டில்மெண்ட் வழங்கப்பட்டு அவர் மற்றொரு நபருக்கு தான செட்டில்மெண்ட் வழங்கியுள்ளதாகவும் ஏலச்சீட்டு கட்டியவர்கள் தெரிவித்தனர்.

 

ஏலச்சீட்டு,  அதிக வட்டி என ஆசை வார்த்தைகளை கூறி நாள்தோறும் மோசடிகள் அதிகரித்துவரும் நிலையில் காவல்துறையினரும் பல்வேறு விழிப்புணர்வுகளை ஏற்படுத்திவந்தாலும் அது குறித்து எவ்வித விழிப்புணர்வும் பெறாத பொதுமக்கள் தொடர்ந்து ஏமாற்றமடைந்து பணத்தை இழந்துவரும் நிலை தொடர்கிறது.



 

 

இது குறித்து பேசிய கலாவதி என்ற மூதாட்டி : தான் பணியிலிருந்து ஓய்வு பெற்ற போது அதில் கிடைத்த ஐந்து லட்சம் ரூபாய் மற்றும் 4லட்சம் ரூபாய் சீட்டுக்கான பணத்தை கட்டியிருந்தேன். ஆனால்  தற்பொழுது அவரைக் காணவில்லை. இதனால் நான் செய்வது அறியாது இருக்கிறேன் எனது பணம் எப்படி கிடைக்கும் என கண்ணீர் மல்க தெரிவித்தார்.

 

இது குறித்து பேசிய வெங்கட்ராமன் : தாங்கள் பாப்பையனை நம்பி ஒவ்வொருவரும் பல லட்சம் ரூபாய் அளவிற்கு பல சீட்டுகளாக பல தவணைகளில் பணம் செலுத்திய நிலையில் தற்பொழுது எந்தவித பதிலும் அளிக்காமல் பாப்பையன் ஊரை விட்டு வீட்டை பூட்டி விட்டு சென்றதால் என்ன செய்வது என தெரியாமல் உள்ளோம் என்றார்.