டெல்லியில் சீன ஆன்லைன் லோன் ஆப் மூலம் மக்களிடம் மிரட்டி பணம் வசூலித்துவந்த நால்வரை டெல்லி காவல்துறை கைது செய்துள்ளது. இவர்களிடம் இருந்து 150 செல்போன் மூன்று லேப்டாப்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. 


டெல்லியில், பலகோடி மதிப்பிலான கடன்களை நாடு முழுவதும் வழங்கி, கடன் பெற்றவர்களிடம் இருந்து கடனை வசூலிக்க முறைகேடான முறையில் ஈடுபட்டு வந்த நால்வரை டெல்லி காவல் துறை கைது செய்துள்ளதாக டெல்லி வடக்கு மாகாண துணை காவல் கண்காணிப்பாளர் பிரிஜேந்தர் குமார் யாதவ் தெரிவித்துள்ளார். இது குறித்து  வடக்கு மாகாண துணை காவல் கண்காணிப்பாளர் பிரிஜேந்தர் குமார் யாதவ் தனியார் செய்தி தொலைகாட்சிக்கு அளித்த பேட்டியில்,


‛‛நாடு முழுவதும் ஆன்லைன் கடன் ஆப்களின் மூலம் கடன் வழங்கி, கடனை வசூலிக்க, கடனாளிகளிடம் முறைகேடாக பேசியும், அவர்களின் புகைபடத்தினை மார்ஃபிங் செய்து அவர்களின் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு அனுப்பியும் மிரட்டி கடன் வசூலில் ஈடுபட்டு வந்துள்ளனர். இது குறித்து 149 பேரிடமிருந்து புகார்கள் இது வரை வந்துள்ளன. இதன் அடிப்படையில், டெல்லி காவல் துறை நடவடிக்கை எடுத்து, முறைகேடான முறையில் கடன் வசூலில் ஈடுபட்டு வந்த நான்கு பேரை கைது செய்துள்ளது. அவர்களிடம் இருந்து 141 சாதாரண செல்போன்கள், 10 ஆன்ராய்டு செல்போன்கள், மூன்று லேப்டாப் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும், 153 ஹார்டிஸ்க்குகள் மற்றும் 4 DVRகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன என தெரிவித்துள்ளார். டெல்லியில் கெஜிர்வால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சியின் ஆட்சி நடைபெற்று வந்தாலும், டெல்லி காவல் துறை மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருப்பது குறிப்பிடத்தக்கது.