கொலராடோ ஆற்றில் உள்ள ஹூவர் அணையில் வெடிப்பு நிகழ்ந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வைரலாகும் வீடியோ:
அமெரிக்காவின் கொலராடோ ஆற்றில் ஹூவர் அணை அமைந்துள்ளது. மிகப்பெரிய நீர் மின் உற்பத்தி நிலையம் இந்த அணையில் அமைந்துள்ளது. இந்த அணையில் தான் கடந்த செவ்வாயன்று வெடிப்பு ஏற்பட்டுள்ளது. இதனை அந்த பகுதியில் சுற்றுலா சென்றிருந்த பயணி ஒருவர் படம் பிடித்து வெளியிட்டுள்ளார். க்றிஸ்டி ஹேர்ஸ்டன் என்ற பெண்மணி தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை பதிவேற்றியுள்ளார். அதில், அணையில் உள்ள மின் நிலையத்தில் கரும்புகையுடன் வெடிப்பு ஏற்பட்ட காட்சிகள் பதிவாகியுள்ளது.
உடனடியாக அணைக்கப்பட்ட தீ:
இந்த அணை அமைந்திருக்கும் போல்டர் நகர நிர்வாகமானது இது தொடர்பான விளக்கத்தை வெளியிட்டுள்ளது. அதில், தீயணைப்புத் துறை வருவதற்கு முன்பே, அங்கு ஏற்பட்ட தீ அணைக்கப்பட்டுவிட்டது என்று கூறப்பட்டுள்ளது. அணையில் அமைக்கப்பட்டுள்ள மின்மாற்றி ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டது தான் இந்த வெடிப்புக்குக் காரணம் என்றும், மின் இணைப்புகளுக்கு எந்த பிரச்சனையும் இல்லை என்று லோயர் கொலொராடோ பகுதியைச் சேர்ந்த அதிகாரியான ஜாக்லின் கூறியுள்ளார்.
15 மின்மாற்றிகளில் 1ல் விபத்து:
இந்த விபத்தில் உயிரிழப்போ காயமோ ஏதும் ஏற்படவில்லை என்று அணை நிர்வாகம் சார்பில் கூறப்பட்டுள்ளது. அந்த அணையில் வைக்கப்பட்டுள்ள 15 மின்மாற்றிகளில் ஒன்றில் தான் இந்த வெடிப்பு ஏற்பட்டுள்ளது. அதனை சரி செய்யும் முயற்சியில் பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஹூவர் அணை வரலாறு:
ஹூவர் அணையானது கொலராடோ ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டதாகும். இந்த அணை பல்வேறு திரைப்படங்களில் இடம்பெற்றுள்ளது. நிவடா மற்றும் அரிசோனா எல்லையில் இந்த அணை அமைந்துள்ளது. இந்த அணையானது 1931 முதல் 1936ம் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் கட்டப்பட்டதாகும். தி கிரேட் டிப்ரஸன் என்று சொல்லப்படும் பொருளாதார மந்தநிலை காலகட்டத்தில் இந்த அணை கட்டப்பட்டு, அப்போதைய அமெரிக்க அதிபர் ஃப்ராங்லின் ரூஸ்வெல்ட்டால் 1935ம் ஆண்டு நாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.