தூத்துக்குடி மாவட்டத்தில் வங்கியில் அடமானம் வைக்கப்பட்ட தங்க நகைகளை வங்கி மேலாளர் போன்று போலி கையொப்பமிட்டு 55 பவுன் தங்க நகைகள் மற்றும் ரூ.9,78,786 பணத்தையும் மோசடி செய்த 4 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். 




தூத்துக்குடி மாவட்டம் குலசேகரபட்டினம் இந்தியன் வங்கி கிளையில் கடந்த 23.07.2018 முதல் 17.06.2020 வரையிலான காலகட்டத்தில் நகை மதிப்பீட்டாளராக பணிபுரிந்து வந்த படுக்கப்பத்து பகுதியை சேர்ந்த வெயிலுமுத்து மகன் சுடலை (எ) சுடலைராஜ் (48) என்பவர் வங்கியில் நகைக் கடன் பெற வரும் வாடிக்கையாளர்களின் தங்க நகைகளை கேட்கும் கடன் தொகைகைய விட அதிகமான கடன் தொகைக்கு அடமானம் வைத்தும், வங்கியில் அடமானம் வைக்கப்பட்ட தங்க நகைகளை, நகை உரிமையாளருக்கு தெரியாமல் வங்கி அடமான அட்டையில் வங்கி மேலாளரின் கையெழுத்தை போலியாக கையொப்பமிட்டு நகைகளை திருப்பி, அவரது கூட்டாளிகளான படுக்கப்பத்து பகுதியை சேர்ந்தவர்களான மகாராஜன் மகன் குமாரவேல் (41), தவசி பாண்டியன் மகன் ராம்குமார் (32), மற்றும் வடக்கூர் பகுதியை சேர்ந்த எமிலியான்ஸ் மகன் ரமேஷ் (42) ஆகியோர்களின் பெயர்களில் அதிக தொகைக்கு அடமானம் வைத்தும், அடமானம் வைக்கப்பட்ட நகைகளில் சிலவற்றை வங்கியிலிருந்து திருப்பி அதனை அவர்களே வைத்து கொண்டு ரூ.9லட்சத்து 78ஆயிரத்து 786 பணத்தையும் 55 பவுன் தங்க நகைகளையும் கையாடல் செய்துள்ளனர். இதுசம்மந்தமாக வங்கி கிளையின் மேலாளரான சங்கரசுப்பிரமணியன் (35) கடந்த 09.09.2022 அன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளித்துள்ளார்.




புகாரின் அடிப்படையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எல். பாலாஜி சரவணன் உத்தரவின்படி மாவட்ட குற்ற பிரிவு காவல் துணை கண்காணிப்பாளர் (பொறுப்பு) சம்பத் மேற்பார்வையில், மாவட்ட குற்ற பிரிவு காவல் ஆய்வாளர் அந்தோணியம்மாள் தலைமையில் உதவி ஆய்வாளர் அனிதா, சிறப்பு உதவி ஆய்வாளர்கள் சண்முகசுந்தரம், ராஜ்குமார், மோகன்ஜோதி, தலைமை காவலர்கள் வேல்ராஜ், செந்தில்வேல் முருகேயன் ஆகியோர் அடங்கிய தனிப்படையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு, சுடலை (எ) சுடலைராஜ், ரமேஷ், குமாரவேல் மற்றும் ராம்குமார் ஆகியோரை கைது செய்தனர்.