கள்ளக்குறிச்சியில் பணியிட மாற்றம் செய்த பெண் காவலரை மாறி மாறி 2 காவல்நிலையத்திற்குத்  தொடர்ந்து பணிக்கு வர அழைத்தமையால் ஏற்பட்ட  மன உளைச்சலால் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்ட நிகழ்வு பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.


பெண்களோ, ஆண்களோ எந்த பணியைச் செய்தாலும் அவர்களுக்குப் பல வழிகளில் மன உளைச்சல் இருக்கத்தான் கூடும். அதிலும் குறிப்பாக காவலர் பணி என்றாலே, விடுமுறை கிடையாது, ஓய்வு இல்லை, நேரம் காலமின்றி பணிக்குச் செல்ல வேண்டிய நிலை ஏற்படும். அதிலும் பெண் போலீஸ் பணி என்றால் சொல்லவே முடியாத அளவிற்கு பணிச்சுமை அதிகமாக இருக்கும். குடும்பத்தோடு நேரம் செலவிடவே முடியாது என்ற நிலை இருந்தாலும், பணிக்கு மறக்காமல் வந்துவிடுவார்கள். ஆனால் சில சமயங்களில் உயர் அதிகாரிகள் தரும் மன உளைச்சல் தான் அவர்களைத் தற்கொலை செய்யும் எண்ணத்தை தூண்டுகிறது. அப்படியொரு நிகழ்வு தான் கள்ளக்குறிச்சியில் அரங்கேறியுள்ளது.





கள்ளக்குறிச்சி வெள்ளாளர் தெருவில் வசித்து வரும் தேவராஜ் என்பவரின் மனைவி தீபா. 35 வயதான இவர் கள்ளக்குறிச்சி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் காவலராக பணியாற்றிவரும் நிலையில், கடந்த 7 மாதத்திற்கு முன்னதாக தற்காலிகமாக வரஞ்சரம் காவல்நிலையத்திற்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில் தான் கடந்த 4 நான்கு நாள்களுக்கு முன்னதாக, கள்ளக்குறிச்சி மகளிர் காவல்நிலைய ஆய்வாளர் புவனேஸ்வரி, பெண் காவலர் புவனேஸ்வரியைத் தொடர்பு காண்டு மீண்டும் மகளிர் காவல்நிலையத்திற்கு பணிக்கு வருமாறு அழைத்துள்ளார். இந்தத் தகவலையடுத்து வரஞ்சரம் காவல்நிலைய ஆய்வாளரிடம் தெரிவித்த போது, அவர்கள் மகளிர் காவல்நிலைய பணிக்கு செல்லக்கூடாது என மறுத்துள்ளனர்.


இதனையடுத்து மீண்டும் மகளிர் ஆய்வாளர் மற்றும் அதே காவல் நிலையத்தில் பணியாற்றும் பெண் தலைமை காவலர் ஒருவர், தீபாவை தொடர்புக் கொண்டு மகளிர் காவல்நிலையப் பணிக்கு வராவிட்டால் உனக்கு மெமோ தரப்படும் என எச்சரித்துள்ளனர். அதோடு ஓபன் மைக்கிலும் பணிக்கு வரவில்லை என தெரிவித்துள்ளனர். இதனால் மிகுந்த மன உளைச்சலில் இருந்து வந்த காவலர் தீபா, நேற்று வரஞ்சரம் காவல்நிலையத்துக்கு பணிக்கு சென்றுள்ளார். விரக்தியில் இருந்த பெண் காவலர், தன்னுடைய கணவருக்கு போன் செய்து, தனக்கு மிகுந்த மன உளைச்சலாக இருப்பதாகவும், நமது இரண்டு மகன்கள் மற்றும் மகளை நல்ல முறையில் பார்த்துக்கொள்ளுங்கள் என தெரிவித்து இணைப்பைத் துண்டித்துவிட்டார்.





இதனால் என்ன நடந்தது என்ற அச்சத்தில் இருந்த நிலையில் தான், தீபாவின் கணவர் தேவராஜூக்கு  பெண் காவலர் ஒருவர் போன் செய்து உன்னுடைய மனைவி தீபா விஷம் குடித்துவிட்டார் எனவும், கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளார். இச்சம்பவத்தைக்கேட்டு அதிரச்சியடைந்த  பெண் காவலர் தீபாவின் கணவர் மற்றும் உறவினர்கள் மருத்துவமனைக்கு உடனடியாக விரைந்தனர். மேலும் இதுக்குறித்த தகவல் அறிந்த எஸ்.பி ஜியாவுல்ஹக், கள்ளக்குறிச்சி டி.எஸ்.பி ராஜலட்சுமி ஆகியோர் சம்பந்தப்பட்ட காவல்நிலையத்துக்குச் சென்று விசாரணை நடத்தினார். இச்சம்பவம் பெரும் பரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.