வேலூரில் உள்ள பிரபல தனியார் துணிக்கடையில் வேலை செய்து வந்த ஆண் மற்றும் பெண் பணி முடிந்த பின்னர் கடந்த 2020 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 18 ஆம் தேதி வேலூர் கோட்டை பகுதிக்கு  சென்றுள்ளனர். அப்போது ஆண் நண்பருடன் சென்ற 26 வயது பெண்ணை அங்கு வந்த 3 பேர்  தாக்கி, 350 ரூபாய் பணம், காதில் அணிந்திருந்த கம்மல், 2 செல்போன் ஆகியவற்றை பறித்துக்கொண்டு, ஆண் நண்பரையும் தாக்கி விட்டு கத்தியை காட்டி மிரட்டி அப்பெண்ணை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.  இது தொடர்பாக பாதிக்கப்பட்ட பெண் வேலூர் வடக்கு காவல் நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில் தனிப்படை அமைத்த காவல் துறையினர் 24 மணி நேரத்தில் கூட்டு பாலியல் வன்கொடுமை  குற்றச்செயலில் ஈடுபட்ட வேலூர் கஸ்பா பகுதியை சேர்ந்த அடமணி (எ) மணிகண்டன் (43), வசந்தபுரத்தை சேர்ந்த கோழி (எ) சக்திவேல் (21), 17 வயது சிறுவன் ஆகிய 3 நபர்களையும் இவர்களிடம் திருட்டு பொருள் வாங்கி விற்பனை செய்யும் மாரிமுத்து (33) என்பவரையும் கைது செய்து 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து 3 பேரை வேலூர் ஆண்கள் மத்திய சிறையிலும், 17 வயது சிறுவனை செங்கல்பட்டு சிறார் சிறையிலும் அடைத்தனர்.


 



இது தொடர்பான வழக்கு வேலூர் மாவட்ட மகளிர் விரைவு நீதிமன்றத்தில் தொடர்ச்சியாக நடைபெற்று வந்த நிலையில் முக்கிய குற்றவாளிகளான கஸ்பா பகுதியை சேர்ந்த A1 அடமணி (எ) மணிகண்டன், வசந்தபுரத்தை சேர்ந்த A2 கோழி (எ) சக்திவேல் ஆகிய இரண்டு பேருக்கு தலா ஒரு ஆயுள் தண்டனை உட்பட 32 ஆண்டுகள் சிறை தண்டனையும், தலா 25 ஆயிரம் அபராதமும். இவர்களிடம் இருந்து திருட்டு பொருட்களை வாங்கியும், குற்றத்தை மறைத்த A3 மாரிமுத்துவுக்கு 5 ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனையும் 5 ஆயிரம் அபராமும் வித்து வேலூர் மாவட்ட மகளிர் விரைவு நீதிமன்ற நீதிபதி கலைப்பொன்னி உத்தரவிட்டார்.






இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த வேலூர் மாவட்ட எஸ்.பி ராஜேஷ்கண்ணன் கூறுகையில், இவ்வழக்கு விசாரணையில் சிறப்பாக செயல்பட்ட வழக்கு விசாரணை அதிகாரி காவல் ஆய்வாளர் புனிதா, அரசு தரப்பு வழக்கறிஞர் விக்னேஷ்வரி அமர்நாத் மற்றும் காவலர்களுக்கு பாராட்டை தெரிவித்து சான்றிதழ்களையும் வழங்கினார். மேலும் 2020ஆம் ஆண்டில் குற்றம் நடைபெற்ற வேலூர் கோட்டை பகுதியில் தொடர் ரோந்து பணியில் காவலர்கள் ஈடுபட்டு வருகின்றனர். கோட்டையை சுற்றி மின் விளக்குகள் பொறுத்தப்பட்டு சிசிடிவி கேமிராக்களை பொறுத்த வேலூர் மாநகராட்சி மற்றும் தொல்லியல் துறையிடம் பேசி வருகிறோம்.  



பழைய பாலியல் வழக்குகள் மீது கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 13 வழக்குகளுக்கு குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளோம். 12 வழக்குகளை நீதிமன்ற கோப்புக்கு எடுக்க வைத்துள்ளோம். பெண்கள் மற்றும் குழந்தைகள் மீதான குற்ற வழக்கை தடுக்க போதிய நடவடிக்கைகளை முழுமையாக எடுத்து வருகிறோம். அதன் முக்கிய பகுதியாக பாலியல் வழக்கில் உள்ள குற்றவாளிகளுக்கு எதிராக கோப்புகளை நீதிமன்றத்துக்கு அனுப்பி தண்டனை பெற்று தருவது தான் முக்கிய குறிக்கோளாக உள்ளது. குற்றங்களைத் தடுக்க போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மற்றும் விழிப்புணர்வுகளையும் காவல்துறை சார்பில் மேற்கொண்டு வருகிறோம். என கூறி உள்ளார்.